பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கணம்

104

இலக்கணம்

'சிம்மம் மிருகேந்திரன்' என்பது இலக்கணம் கூறுவதாகாது.

4. இலக்கணத்தில் பொருளின் பதத்தையோ, அதன் திரிபையோ பரியாயப் பதத்தையோ உபயோகிக்கக்கூடாது. 'பறக்கும் சக்தியுடையது பறவை' என்பதைப் போன்ற வாக்கியங்கள் இலக்கணப் பொருளை முற்றிலும் விளக்குவதில்லை. இம்மாதிரியான இலக்கணம் சக்கரம்போல் சுற்றி வருவதேயன்றி எதையும் விளக்குவதில்லையாதலால் இதை 'இலக்கணச் சக்கரம்' என்று கூறுவார்கள்.

ஆயினும் 'மூன்று கோணங்களுடையது முக்கோணம்'; 'மரத்தினால் செய்த பெட்டி மரப்பெட்டி' என்பவற்றிலும் பொருளின் பதம் உபயோகிக்கப்பட்டிருந்தாலும் தவறில்லை. முக்கோணம் என்பதற்கும் மரப்பெட்டி என்பதற்கும் தனிப் பெயர்கள் இல்லையாதலால் கோணம் என்பதையும் பெட்டி என்பதையும் உபயோகிப்பது இழுக்காகாது.

5. இலக்கணத்தை உடன்பாட்டு முறையில் கூறமுடியும் இடங்களில் எதிர் மறை முறையில் கூறலாகாது. ஏனெனில் இலக்கணத்தின் நோக்கம் ஒரு பொருள் இத்துணையது என்று கூறுவதேயன்றி, இத்துணையதன்று என்று கூறுவதன்று. 'தர்மம் அதர்மமல்லாதது', 'வாயு உருவமல்லாதது' என்று கூறினால் எதுவும் விளங்குவதில்லை.

ஆயினும் சில பொருள்களின் இலக்கணத்தை எதிர்மறை முறையிலேதான் கூற முடியும். உதாரணம்: 'பிரமசாரி மணமாகாதவன்', 'அந்நியர் நமரல்லாதவர்'. சில பொருள்களின் பதங்கள் எதிர்மறைபோல் இருப்பினும், அதற்காக எதிர்மறை முறையில் இலக்கணம் கூறவேண்டும் என்பதில்லை. 'பொறாமை' என்பதற்குப் பிறர் நலம் கண்டு புழுங்குதல்' என்று உடன்பாட்டு முறையில் இலக்கணம் கூறலாம்.

இலக்கணத்தின் வரையறைகள்: 1. அறிவு வளர வளர இலக்கணம் மாறிவரும் இயல்புடையதாகும். வெப்பம் என்பது பொருள்களிலிருந்து வந்து நம் புலன்களைத் தாக்கும் தூள்கள் என்று 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அதற்கு இலக்கணம் கூறினார்கள். ஆனால் அது பொருளிலுள்ள மூலக்கூறுகளின் அதிர்ச்சியே என்று இப்பொழுது கூறுகிறார்கள்.

2. தனக்கு மேலே சாதியில்லாத சாதிக்கும், அசோகர் போன்ற இடுகுறிப் பெயர்களுக்கும், பொருள்களின் தனி இயல்புகளுக்கும் இலக்கணம் கூற முடியாது. ஒருவாறு வருணனை மட்டுமே செய்யலாம்.

3. காலம், இடம், எண்ணம் போன்ற மூலப்பதங்களுக்கும், பொருள் என்ற பொதுவுக்கும் சம்பிரதாய முறையில் இலக்கணம் கூற இயலாது. இவற்றிற்கு மேல் சாதியைக் குறிப்பது எளிதன்று.

இந்த இடர்ப்பாடுகளைக் கருதியே விஞ்ஞானிகள் ஒரு பொருளுக்கு இலக்கணம் சொல்வதற்கு 'அமைப்பு முறை இலக்கணம்' (Systematic d) என்பதைக் கையாளுகின்றனர். ஏதாவது ஒரு அமைப்பிலே, ஒரு திட்டத்திலே ஒரு பொருளுக்கு இன்ன இடம் என்று வகுத்துக் காட்டுவதே அப்பொருளுக்கு இலக்கணம் கூறுவதாகும். இதன்படி உலகு முழுவதுமே ஓர் அமைப்பு. அதற்குள் பல சிறிய அமைப்புக்கள் உண்டு. ஒன்றோடும் இயைபு படாமல் எந்தப் பொருளும் இல்லை. இந்தப் பொருள் எந்தத் திட்டத்திற்குட்பட்டது என்று காண்பதே விஞ்ஞானத்தின் முக்கிய வேலை. இதைக் கண்டவுடனே அப்பொருளின் இலக்கணத்தைச் சொல்லியாயிற்று. இந்த முறையின்படி எந்தப் பொருளுக்கும் இலக்கணம் கூறலாம். இலக்கணம் சொல்லமுடியாத பொருள் ஒன்றுமில்லை என்பது விஞ்ஞானிகள் மதமாகும். கி. ர. அ.

இலக்கணம் (Grammar) என்பது சிறப்பியல்பு. இலக்கணம் கூறப்பெறுவது கூறப்பெறுவது எதுவோ, இலக்கணம் உடையது எதுவோ அஃது. இலக்கியம் எனப் பெயர் பெறும். எடுத்துக்காட்டாக, மண்ணுக்கு இலக்கணம் கூறப்புகுந்தால், மண் இலக்கியமாகும். இலக்கணம் பெற்று விளங்கும் இலக்கியத்தின் தன்மை இலக்கியத் தன்மையாகும். எங்கெங்கு மண்ணுண்டு, அங்கங்கெல்லாம் மண் தன்மை உண்டு என்று சொல்லலாம்படி, மண்ணுக்கு அப்பால் இல்லாமலும் (அதிவியாப்தி, மிகைபடல்), மண்ணில் ஓரிடத்திலன்றி அதன் எவ்விடத்தும் நில்லாமலும் (அவ்வியாப்தி, குறைபடல்), மண்ணில் இல்லாததாகவே இல்லாமலும் (அசம்பவம், மாறுகொளல்). மண்ணாகிய இலக்கியத் தன்மையை, இம்மண் தன்மை எல்லை கட்டி வரைந்து கொள்கிறது; மண் தன்மையோடு நியதமாகப் பிறழ்ச்சி இன்றி ஒருங்கு நிகழ்வது மண்ணின் சிறப்பியல்பாகிய மணமுடைமையே ஆம்; அதுவே மண்ணின் இலக்கணம் என்பர் தருக்க நூலோர். எனவே, இலக்கியத் தன்மையை வரைந்துகொள்வதனோடு நியதமாய் ஒருங்கு நிகழ்வது இலக்கணம் என்பது தருக்கநூலோர் முடிவு. இதுவே இலக்கணத்தின் இலக்கணமாகும்.

இலக்கியம் என்பது ஆங்கிலத்தில் லிட்டரேச்சர் (Literature) என வருவதற்கு நேரான தமிழ்ச் சொல்லாக வழங்கிவருகிறது,எனினும், பேச்சும் இலக்கியமே எனக் கொள்ளுதல் வேண்டும். இந்த இலக்கியத்தில் காணும் சிறப்பியல்பே-மொழிநடையின் சிறப்பியல்பே- இலக்கணம் என்று தமிழில் பெயர் பெறுகின்றது. “இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் கூறல்” என்பது நன்னூல். மொழியைப் பேசிவரும்போது பேசுவோனும் கேட்போனும் ஒருவரை ஒருவர் அறிந்துகொள்ளும் பொதுநிலை - அல்லது பொது மரபு-இருத்தல் வேண்டும். இதுவே இலக்கணம். ஒருவகையால் நோக்கினால் இது வழக்காறே ஆகும். ஒரே இலக்கணமரபு உலகு எங்கும் பரவியில்லை. மொழிக்கு மொழி இந்த மரபு மாறும்: காலத்துக்குக் காலமும் மாறும். இதனாலேயே வடமொழி, லத்தீன் முதலிய பழைய மொழிகள் வழக்கின்றிப் போக, அவற்றின் மாறிய வடிவங்களாகிய இந்தி, இத்தாலி முதலியவை புதிய மொழிகளாக வழங்கிவருகின்றன. ஆகையால் ஒரு மொழியின் இலக்கண மரபுகொண்டு மற்றொரு மொழியின் இலக்கணத்தினை விளக்குவது தக்கதன்று. லத்தீன் இலக்கணமே ஆங்கில இலக்கணம் என்று பல நாள் ஆராய்ந்தவர் உண்மை காணாது மயங்கினர். வடமொழி இலக்கணமே தமிழிலக்கணம் என்ற ஆராய்ச்சியும் இத்தகையதே.

'சொற்கள் வாக்கியமாகிக் கருத்தினை எவ்வாறு விளக்கி வருகின்றன என்பதனை ஆராய்வதே இலக்கணம்' என மேனாட்டில் வழங்கி வருகிறது. வடமொழி வியாகரணமும் இத்தகைய ஆராய்ச்சியே ஆம். ஆனால், தமிழர் ஐந்திலக்கணம் எனக் கூறிவருகின்றனர். எழுத்தின் ஓசை, மாத்திரை, புணர்ச்சிமாற்றம் முதலியவற்றை ஆராய்வது எழுத்திலக்கணம். சொற்கள், பெயர், வினை, இடை, உரி என்ற பாகுபாட்டோடு பலவாறு சொற்றொடராக இயைந்துவரும் மரபுகளைஆராய்வது சொல்லிலக்கணம். இலக்கியங்களில் வரும் பொருள் பாகுபாட்டினை அகம் என்றும், புறம் என்றும்முறை செய்வது பொருள் இலக்கணம். தமிழ் .