பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கணம்

105

இலக்கணம்

இலக்கணம் இந்த மூன்று பிரிவாகமட்டும் அமைந்தது தொல்காப்பியக்காலம். இந்தப் பொருள்களைப் பாட்டாகவும் உரைநடையாகவும் கூறும்போது இலக்கியம் செய்யுளாக (Literary compositions) வரும்; செய்யுளின் அமைப்பு முறையைத் தனியே ஆராய்வது யாப்பிலக்கணம். இந்த நான்கு பிரிவாகத் தமிழ் இலக்கணம் அமைந்த காலம் இறையனார் அகப்பொருளுரை காலம் எனலாம். வடநூல் ஆராய்ச்சியின் பயனாக உவமை முதலிய அலங்காரங்களை ஆராய்ந்தவர்கள் அணி இலக்கணம் என ஐந்தாம் பிரிவும் கூறிய காலம் தண்டியலங்காரக் காலம் எனலாம்.

பிற நாட்டிலும் இப்படிப் பலவற்றையும் இலக்கணத்துள்- அடக்கியதுண்டு. டையனீஷியஸ் (Dionysius) என்ற ரோமானிய அறிஞர் எடுத்தல், படுத்தல் முதலிய இசை வேறுபாடு கூறும் ஒலி இலக்கணமும், சொற்பொருளை விளக்கும் சிறப்பியல் இலக்கணமும், அணிகளை விளக்கும் அணி இலக்கணமும் கூறுவர். அவர், "கற்ற எழுத்தாளரோடு செயல்முறை வகையால் நம்மை அறிமுகம் செய்வதே இலக்கணம்" என்பர். இலக்கண மாறுபாட்டுக்கு அடிப்படையாகாத ஒலியியல் நாம் கூறிவரும் இலக்கண விதியாவது இல்லை. சொற்பொருள் கூறுவது அகராதியும் நிகண்டுமே அன்றி இலக்கண நூலன்று அணி இயல் அலங்கார சாத்திரமே அன்றி இலக்கண நூலன்று. பொருள் பாகுபாடு இலக்கிய ஆராய்ச்சியாதலின் அதுவும் நாம் வழங்கும் இலக்கணமாவதில்லை இதனால் எழுத்திலக்கணத்தையும் சொல்லிலக்கணத்தையும் மட்டுமே நன்னூலும் தொன்னூலும் கூறுகின்றன.

சொல், சொற்றொடர் இவற்றின் இயைபுகளை விளக்கும் முறை அல்லது மரபினை ஆராய்வதே இலக்கணம். 1. சொற்றொடரில் சொல் நிற்கும் இடம் : ("இராமன் சோறு தின்றான்" என்பதில் முதலில் நிற்பதனாலேயே இராமன் எழுவாய் ; இரண்டாவது நிற்பதாலேயே 'சோறு' என்பது இரண்டாம் வேற்றுமை உருபு இன்றியும் செயப்படுபொருளாம்).2. ஒலி வேற்றுமை ("அவன் வந்தான்; வந்தான் போனான் " என்பதில் முதலிலுள்ள வந்தான் என்னும் சொல் பகுதியில் எடுத்தலோசை பெற்றுப் பயனிலையாம் ; இரண்டாவது உள்ள வந்தான் என்னும் சொல் விகுதியில் எடுத்தலோசை பெற்று எழுவாயாம்). 3 சொல்லமைப்பு: 4. சொல்லுருபு மாற்றம் (இராமன், இராமனால் எனக் காண்க. துணைச்சொற்களோடு வாள் கொண்டு என வருதல் காண்க). இவை சொற்கள் ஒன்றோடொன்று எழுவாய், பயனிலை முதலியவைகளாய் இயைந்துவரும் இயைபினை விளக்குகின்றன. இவற்றை வந்தான் போல வரும் சொல்லமைப்பு அல்லது சொல்லாக்கம், "இராமன் சோறு உண்டான்" என்பது போன்ற சொற்றொடரமைப்பு அல்லது சொற்றொடராக்கம், "இராமன், இராமனை" முதலியன போன்ற உருபு அமைப்பு அல்லது உருபு ஆக்கம் (Accidence) என மூன்றாக அடக்கி மேனாட்டார் ஆராய்வர்.

மொழி, பேச்சாக எழுவது; எழுத்து, அதன் மாற்று வடிவம். ஆதலின் மொழி ஒரு நிகழ்ச்சி, அல்லது ஒரு செய்தி. இலக்கணம் அதனை உள்ளவாறு விளக்கினாற் போதும். ஆனால், கொள்கைக்கேற்ப இந்த விளக்கம் மாறுபடுவது நம் மனத்தின் இயல்பு. பலவகையாக வரும் மொழிச்செய்திகளையும் ஒரு கொள்கையும் இன்றி முழு நிலையாக விளக்க முடியாது. விஞ்ஞான வழக்கின்படியே இவற்றைக் கோவை செய்து வகைப்படுத்தி முறை காணவேண்டும். ஒரு மொழியோடு ஒரு மொழியை ஆராயும் ஒப்புமை ஆராய்ச்சி முறை (Comparative method) இவ்வாறு எழுகின்றது. ஒரு காலத்தில் ஒன்றுபோலத் தோன்றுவன பீற்காலத்தில் ஒரு தொடர்பும் இல்லாதவையாய்ப் போகலாம். தமிழ் “அஞ்சு” வடமொழி 'பஞ்ச' என்பதுபோலத் தோன்றினாலும், 'பஞ்ச' என்பது 'கவிங்க்,' 'பீன்ப்' போன்று முன் இருந்ததனையும், 'அஞ்சு' என்பது ஐந்து' 'ஐது', 'ஐ' என்றெல்லாம் இருந்ததனையும் ஆராயும்போது இவற்றின் ஒற்றுமை மறைகிறது. பிற மொழிகளிலிருந்து கடன் வாங்கி வழங்கப்பெறும் சொற்களும் உண்டாதலின் ஒரு மொழியில் பிறமொழிச் சொற்கள் இருப்பதால் மட்டும் பிறமொழியாகிவிடாது. ஆகையால் பழைய வடிவங்களை ஆராயவேண்டும் என்பதாயிற்று. இதுவே வரலாற்று முறை ஆராய்ச்சி (Historical method) ஒப்பிலக்கணங்களும் வரலாற்றிலக்கணங்களும் என்ற இவை இரண்டும் சேர்ந்த வரலாற்று ஒப்பிலக்கணங்களும் தோன்றி வருகின்றன. இன்று இந்திய ஐரோப்பிய மொழிகளே இவ்வாறு பரக்க ஆராயப்பெற்றுள்ளன.

பேச்சு என்பது, வாக்கியம் வாக்கியமாகத் தொடர்ந்து ஓடும் ஒரு பேராறு. கருத்தை முழு முழு வாக்கியமாகவே விளக்குகிறோம்; வாக்கியமே கருத்தின் முழு நிலையளவுகோல் அல்லது தனியன் (Unit). வாக்கியத்தில் வரும் சொற்கள் அதன் உறுப்பே அன்றித் தனியே வழங்கும் தனிநிலை பெற்றன அல்ல. ஆனால், அகராதியில் எண்ணக்கிடக்கும் இந்தச் சொற்கள் எண்ணிறந்த கருத்துக்களை உணர்த்துவது எப்படி? அவை ஒன்றோடொன்று எண்ணிறந்த பலவகையில்சேர்ந்து, இவ்வாறு எண்ணிறந்த கருத்துக்களை விளக்குகின்றன. ஒன்றிற்கொன்றுள்ள பலவகை இயைபு, இந்த இயைபுகளின் பலவகை வெளிப்பாடு என்ற இவற்றின் காரணமாக வாக்கியம் பலவகையாக மாறுபடும். இது பல மொழிகளில் பலவகையாக வரக் காண்கிறோம்.

ஒரு வாக்கியத்தை ஒரு சொல்போல வழங்குகிற மொழிகளும் உண்டு. அமெரிக்கச் செவ்விந்தியர் பேசும் மொழிகள் இத்தகைய பலவின் ஒற்றுமை நயம் பெறு மொழிகளாம் (Polysynthetic languages). இங்கே ஒரே தொகையாக வாக்கியம் விளங்குகிறது எனலாம். ஆனால், இங்கே பல சொற்கள் என்ற பேச்சில்லை. வினை என்பதே இல்லாதபோது பொது வினைச் சொற்கள் என்று இங்குப் பேச இடம் ஏது? ஆப்பிரிக்காவில் வழங்கும் தொகைநயம் பெறு மொழிகள் (Incorporating 1.) என்பவை இவற்றின் வளர்ச்சிபோலத் தோன்றும். செயப்படுபொருளை வினையினின்று பிரிக்காமல் இரண்டும் சேர்ந்த தொகையாகவே இவை வழங்கிவருகின்றன. பலவகைக் கருதுக்கள் சொல்லில் தொடர்ந்து திணிக்கப்பட்டவை போல விளங்கும். தனிமை நயம் பெறு மொழிகள் (Isolating 1.) இவற்றிற்கு முழுதும் முரணானவை; ஒவ்வொரு கருத்தின் பாகுபாட்டினையும் ஒவ்வொரு சொல்லாகத் தனித்தனி பிரித்து இவை அமைக்கின்றன. சீனம் முதலியன இத்தகையன. சொல்லுக்கும் சொல்லுக்கும் உள்ள இலக்கண இயைபானது இங்கே வாக்கியத்தில் சொற்கள் நிற்கும் இடத்தினைப் பொறுத்ததாகும். இந்தச் சொற்கள் தனித்தனி நில்லாது ஓட்டிக்கொண்டவைபோல வருவது ஒட்டு மொழிகளின் (Agglutinative l.) இயல்பாம். திராவிட மொழி கள் இத்தகையன என்பர். போகின்றான் என்பதில் "போ" என்ற வினைச்சொல்லும், "கின்று" என்ற நிகழ்காலச் சொல்லும், "ஆன்" என்ற ஆண்பாற் சொல்லும் ஒட்டி இருக்கின்றன என்பர், ஒரு காலத்-

14