பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கணம்

106

இலக்கணம்

தில் பொருளுடையவாய் இருந்து, பின் பொருளற்றுத் தேய்ந்துபோன இடைச்சொற்கள், அடிச்சொற்களின் பின்னோ முன்னோ சேர்ந்து இலக்கண இயைபினை இந்த மொழிகளில் விளக்கிவரும். தேய்ந்த சொற்கள் என்றே தோன்றாதபடி உருபுகள் எழுத்துக்களாய் ஒழியும்போது இவையே உருபு மொழிகள் (Inflexional) வளர்கின்றன.(தமிழில் கு என்ற நான்காம் வேற்றுமை உருபினைக் காண்க). இந்திய ஐரோப்பிய மொழிகள் இத்தகையவை. உயிர் ஒலி மாறுவதாலோ விகுதியுருபு மாறுவதாலோ சொன்முதல் மாறுதலாலோ இலக்கண இயைபு விளங்கலாம். நாளடைவில் ஒவ்வொரு கருத்தையும் தனித்தனிச் சொல்லாக வேறு பிரித்து வழங்கும் ஒற்றுமை நயம் பெறு மொழிகளாக (Analytical) இவை வளர்கின் றன. இந்திய ஐரோப்பிய மொழியில் ஆங்கில மொழியின் வளர்ச்சி இதனை விளக்குகிறது. இவ்வாறு மொழிகள் பலவகையாக வாக்கிய அமைப்பின் அடிப்படையில் வெவ்வேறே ஆனாலும், அவை வளர்ச்சியின் பயனாய் வரையறையின்றிப் பலவகை நிலையிலும் பின்னிக்கொண்டு கிடக்கக் காண்கிறோம். இருந்தாலும் இவற்றின் இலக்கணமுறை வெவ்வேறே ஆம். இலக்கண ஒற்றுமை உள்ள மொழிகளை ஓர் இனம் எனக் கொள்ளலாம். பிறவகையான ஒற்றுமைகள் போலி ஒற்றுமைகள் என முன்னர்க் கண்டோம்.

இந்திய ஐரோப்பிய மொழியாராய்ச்சி அந்தக் குடும்ப மொழிகளைப் பற்றிச் சில உண்மைகளைக் கண்டுள்ளது. சொற்களை அவற்றின் அடிப்படைச் சொற்களாகப் பிரிக்கலாம். இந்த அடிச்சொற்கள் இரண்டுவகை : முதல் ஒத்திருப்பன ஒருவகை ; இவையே பகுதி கள் எனலாம். கடை ஒத்திருப்பன மற்றொருவகை ; இவையே விகுதி முதலிய இடைச்சொற்கள் ஆம். பகுதிகளோ கருத்துக்களை விளக்கும்; இடைச்சொற்களோ இலக்கண இயைபினை விளக்கும்; சொற்றொடரில் சொல் அமைந்த இடமும் இந்த இயைபினை விளக்கும். நாளடைவில் பழக்கத்தால் சில சொற்கள் சில இடத்தில் மாறாது வரும் அல்லவா? இடைச்சொற்கள் முதலில் தெளிவின்றியும், வரையறை இன்றியும் வந்திருக்கும். வழக்காற்றில் பயின்றுவருதல் காரணமாகப் பின்னர் வரையறை ஏற்பட்டிருக்கும். இவற்றில் ஒரு சில இலக்கணக் கருத்தினை மட்டும் விளக்கலாம் ; வேறு சில பெயர்வினை என்ற சொற்பாகுபாட்டுக் குறிகளாக வந்திருக்கலாம். இதனாலேயே ஒரே உருபு பல பொருளில்வரக் காண்கிறோம். இவற்றில் ஒருசில தொடக்கத்தில் இருந்தே இடைச்சொற்களாக இல்லாமல் பொருளுள்ள சொற்களாக வழங்கிவந்து, பின்னர் நாளடைவில் பொருளிழந்து, தேய்ந்து, உருபாகவும் வெறும் உயிர் ஒலியாகவும் நின்று - விட்டிருக்கலாம். இம்மொழிகளில் எட்டு வேற்றுமைகள் உண்டு. எழுவாய், செயப்படுபொருள். விளி என்ற மூன்றும் வல் வேற்றுமைகள் (Strong Cases); பிற எல்லாம் மெல் வேற்றுமைகள்; பின்னவையே பெயரடையும் (Adverb), வினையடையும் (Adjective) ஆயின. இவ்வுருபுகள் பின்னர் முந்தமை சொல்லாக (Preposition) மாறின. 1,2.6ஆம் வேற்றுமைகள் இலக்கண நெறி வேற்றுமைகள் : 3.5, 7ஆம் வேற்றுமைகள் தருக்க நெறி வேற்றுமைகள். இந்த மொழிகளில் வரும் இருமை எண் (Dual numbers) பன்மையிலும் பழையது. இங்கே ஆண்,பெண், அலி என்ற இலக்கணப் பால் பாகுபாடு சொற்களின் ஒப்புமை நயத்தால் எழுந்தது என்பர். பால் பாகுபாடு இல்லாத காலமும் உண்டு. 'செய்' என் வினையை ஆராய்ந்தால், பெயர், வினை என்ற பாகுபாடு இல்லாத காலமும் உண்டு எனத் தெரிகின்றது. இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்ற காலக்கருத்தும் நாளடைவில் நுழைந்ததே ஆம். வினைச் சொல்லின் முதல் எழுத்தினை இரட்டுவித்துக் காலம் காட்டுதல் பழைய முறை. இம்மொழிகளில் செயப்படுபொருள், வினை, செய்வோன் என வாக்கியம் அமைந்து வந்தது.

இந்த உண்மைகள் பிறமொழிகளுக்கும் ஒத்துவருமா என்பதே இன்றைய ஆராய்ச்சி. தமிழிலக்கணம் ஒரு வகையில் பொது இலக்கணம் எனலாம். கருத்தினை விளக்கும் கூற்றோ, முடிபோ, ஏதேனும் ஒன்றைப் பற்றிக் கூற முன்வருவது எதுவோ அதுவே எழுவாய்; அதனைப் பற்றி ஏதாவது ஒன்று கூறுவது எதுவோ அதுவே பயனிலை. தமிழ் இலக்கணம் எழுவாயைப் பெயர் என்றது; பயனிலையை வினை என்றது. அவ்வளவே இங்குள்ள பாகுபாடு. பிற சொற்கள் எல்லாம் பெயரின் அடையாகவும் வினையின் அடையாகவும் நுழைந்து, எழுவாயும் பயனிலையுமாகவே முடியும். பெயர், வினை என்ற இரண்டு சொற்களைப் பிரித்து ஆராய்ந்தால், பொருளுக்கு உரிமையான அடிப்படைப் பகுதிகள் ஒருபுறம் நிலைத்துள்ளன. காலம், இடம், பால், வேற்றுமை முதலிய இலக்கண இயைபினைக் காட்டும் விகுதி, இடைநிலை, வேற்றுமையுருபு முதலிய இவை மற்றொரு புறம் பிரிகின்றன. பகுதியே உரிச்சொல்; விகுதி முதலியன இடைச்சொல். இவ்வளவே தமிழ் இலக்கணம், பிறமொழிச் சொற்களும் திசைச் சொற்களும் தமிழ் மொழியில் வழங்கி இடம்பெறும். தமிழில் காலம், பால் முதலிய இலக்கணப் பாகுபாடுகள் இல்லாத நிலையும் இருந்திருக்கலாம்; பகுதிகள் வினைக்கும் பெயர்க்கும் பொதுவாக இன்றும் உள்ளன. எழுவாய், செயப்படுபொருள், பயனிலை என்பது தமிழ் வாக்கியத்தின் பொது அமைப்பு. இடைச் சொற்கள் முன்னொரு காலத்தில் தனிச்சொற்களாக விளங்கினவே என்பது இன்றும் விளங்குகிறது.

இலக்கண விதிகள் இலக்கண நூல்கள் ஏற்படுத்தும் சட்டங்கள் அல்ல; வழக்காற்றின் மரபுகளாய்க் குறித்த காலத்தில் வழங்குவனவே ஆம். இலக்கண நூல்கள் சூத்திரவடிவமாய்ச் சுருக்கமாக வழங்குவதற்கு வாய்ப்பாக இருப்பதால் ஐயம் ஏற்பட்டபோதெல்லாம் அவற்றை எடுத்துக் காட்டுவது இயல்பாகிவிட்டது. இதனால் அவை கட்டாயம் பின்பற்றத் தக்கன என்ற எண்ணம் பரவியது.

கிரேக்க நாட்டில் குடியரசு.பரவியபோது பொதுமக்களிடையே கருத்துக்களைத் தெள்ளத் தெளிய விளக்கிப் பேசி மனத்தைக் கவரும் பேச்சாளிகளுக்குச் சிறந்த இடம் தோன்றியது. எவ்வாறு மனத்தைக் கவர்வது என்ற ஆராய்ச்சி மொழி இயலை ஆராய்வதாக முடிந்தது ; இலக்கணம் தோன்றியது; சொல்லின் ஒலிக்கும் பொருளுக்கும் இயற்கையான தொடர்பு உண்டு என்ற நம்பிக்கைக் கோட்டை தகர்ந்தது; சொல்லுவோன் தருவதே பொருள் என்பது விளங்கியது. இங்குப் பயன்படும் மரபுகளே இலக்கணம் என்பதாயிற்று. 1. பெயர்ச்சொல் (Noun), 2. வினைச் சொல் (verb), 3. பெயரடைச்சொல் (Adjective),4. வினையடைச்சொல் (Adverb), 5. குறிப்புப்பெயர்ச் சொல் (Pronoun), 6. மேல், கீழ் என்பன முதலாக வரும் முந்து அமைசொல் (Preposition). 7. சொற்றொடர்களின் பொருள்களை ஒற்றுமையத்தாலோ வேற்றுமை நயத்தாலோ தொடர்புபடுத்திச் செலுத்திவரும் and, but போலப் பிணைப்புச்சொல் (Conjunction), 8. உணர்ச்சி ஒலியாக வரும் ஒலிக் குறிப்புச் சொற்கள் (Interjection) என்ற இவையே எட்டுவகைச் சொற்-