பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கண விளக்கச் சூறாவளி

107

இலக்குக்காட்டி

கள் என மேனாட்டார் கூறலாயினர்.(a,an, the எனப்) பெயர் முன்னுருபு (Article) என்பதொன்றும் உண்டு. அரிஸ்டாட்டில் காலத்திலிருந்து இந்தப் பாகுபாடு தொடங்கியது.

இலக்கணம் எந்நாளும் மாறாது ஒருதன்மைத்தாக இருப்பதானால் அன்றோ பேச்சாளி அதனை எளிதில் அறிந்து வெற்றிபெறுதல் கூடும்? இவ்வாறு ஒரு தன்மையதே என்றனர் ஒரு கொள்கையினர். ஆகையால் "வந்தான்" என்பதனை அறிந்தால், "தந்தான்" என்பதுபோல ஒப்புமை முறையால் பிற வடிவங்களை அமைத்தல்கூடும் என்றனர். இதுவே ஒப்புமைக் கொள்கை (Analogy). "குதிரைக்குக் குர்ரம் என்றால் யானைக்கு யர்ரமோ" என்ற பழமொழியை அறிவோம். இதனை ஒட்டி, விதிகள் இருந்தாலும், விதிக்குப் பல புறனடைகளும் உண்டு என்பது புறனடைக் கொள்கை. ஒப்புமைக் கொள்கையினர் அரிஸ்டார்க்கஸ் (Aristarches) என்பவரைப் பின்பற்றினர்; புறனடைக் கொள்கையினர் கால்ட்ஸ் (Calts) என்பவரைப் பின்பற்றினர். ஒப்புமைக் கொள்கை சிலபோது இலக்கணக் கொடுங்கோலாக மாறுவதனை இன்றும் காணலாம். ஆனால் கி. பி. நான்காம் நூற்றாண்டிலேயே இலக்கணம் எழுதி வந்தவர்கள் இந்தப் போராட்டத்தை ஒருவாறு நிறுத்தி, பெரிதும் விதிகளும் புறனடைகளும் கொண்டதே இலக்கணம் என முடிவு செய்தனர். கிரேக்க இலக்கணம் லத்தீன் இலக்கணத்திலும் நிழலிட்டது. லத்தீன் இலக்கணம் ஐரோப்பா முழுதும் பரவிப் பிறமொழி இலக்கணங்களின் அடிப்படையாக முயன்றது. 18ஆம் நூற்றாண்டில் வடமொழியை மேனாட்டார் கற்கத் தொடங்கியதிலிருந்து வரலாற்று ஒப்பிலக்கணம் வளர்ந்து வருகிறது; விஞ்ஞான முறைப்படி ஆராய்ச்சி நிகழ்ந்து வருகிறது. தெ. பொ. மீ.

இலக்கண விளக்கச் சூறாவளி சிவஞான முனிவரால் இயற்றப்பட்டது, வைத்தியநாத நாவலரால் இயற்றப்பட்ட இலக்கண விளக்கத்தை மறுப்பதற்கு இந்நூல் எழுதப் பெற்றது. இலக்கண விளக்கத்தைப் பற்றியும் சிவஞான முனிவரைப்பற்றியும் தனிக்கட்டுரைகள் உள்ளன.

இலக்கண விளக்கம்: தொல்காப்பியச் சூத்திரங்களையும் நன்னூற் சூத்திரங்களையும் இந்நூலில் எடுத்திணைத்திருக்கிறார் இதன் ஆசிரியர். இதனைக் குட்டித் தொல்காப்பியம் என்றுங் கூறுவர். தொல்காப்பியவிதி எல்லோருக்கும் எளிதில் விளங்க இந்நூல் எழுதப்பட்ட தென்பர். இதன்கண் ஐந்திலக்கணமும் கூறப்பட்டுள்ளன. இதன் ஆசிரியர் தருமபுர ஆதீன வைத்தியநாத நாவலர் ஆவர். இவர் ஈசானமடம் சுவாமிநாத தேசிகர் காலத்தவர் (17ஆம் நூ.பிற்பகுதி) இந்நாலுக்கு மறுப்பாக இலக்கணவிளக்கச்சூறாவளி என ஒரு நூல் சிவஞான முனிவராற் செய்யப்பட்டுள்ளது.

இலக்கியம் : ஒருவன் தன்னுடைய உள்ளத்தில் எழும் கிளர்ச்சிகளைப் பிறனொருவன் உள்ளத்திலும் எழுமாறு செய்ய விரும்பினால், அதற்காக அவன் பயன்படுத்தும் சாதனங்களுள் மொழி என்பதும் ஒன்று, மனிதனுடைய உள்ளத்தில் எழும் கிளர்ச்சிகள், கருத்துக்கள் என்றும் உணர்ச்சிகள் என்றும் இருவகைப்படும். ஒருவன் மொழியைக் கொண்டு தன்னுடைய கருத்துக்களைப் பிறர் அறிய உண்டாக்கும் நூல் அறிவு நூலாகும். ஒருவன் மொழியைக் கொண்டு தன் உள்ளத்தில் உண்டான உணர்ச்சிகளைப் பிறர் உள்ளத்திலும் உண்டாகுமாறு செய்விக்கும் நூல் இலக்கியம் ஆகும். மற்றும் இலக்கியம் என்பது படிக்குந்தோறும் நயம் தந்து, உணர்ச்சி வேகத்தோடு உருவ அமைப்பும் உடையதாய் இருத்தல் வேண்டும்.

ஒருவன் எதையேனும் நேராகவோ அல்லது கற்பனையாகவோ அனுபவித்திருக்கலாம். அதை மீண்டும் கற்பனை மூலம் தன்னுடைய உள்ளத்தில் நினைந்து மறுபடியும் அனுபவிக்கிறான். அந்த அனுபவத்தைப் பிறரும் அடையுமாறு செய்ய விரும்புகிறான். அதற்காக அவன் ஓவியனாயிருந்தால் வண்ணங்களையும், சிற்பியாயிருந்தால் கல்லையும் உலோகத்தையும், கவிஞனாயிருந்தால் சொற்களையும் பயன்படுத்துவான். ஒருவன் தான் அனுபவித்ததைப் பிறரும் அனுபவிக்கும்படி சொற்களைக்கொண்டு செய்யும் கலையையே இலக்கியம் என்றும் கவிதை என்றும் கூறுவர். சாதாரணமாகக் கருத்துக்களைக் கூறுவதற்குச் சொற்களை அகராதி கூறும் பொருளில் கையாண்டால் போதும். ஆனால் கவிஞன் சொற்களின் தொனிகளையும் ஒலி நயத்தையும் பயன்படுத்தித் தன்னுடைய நோக்கத்தைச் சாதித்துக் கொள்ளுகிறான். சொற்களின் கற்பனை நயமும், சந்தம் முதலிய ஒலி நயமுமே இலக்கியத்தின் உயிர் நாடிகள்; அவற்றின் வாயிலாகவே கவிஞனின் அனுபவம் கவிதையைப் படிப்பவர் அனுபவமாக ஆகின்றது. சந்த நயம் உண்டாக்குவதற்காக ஏற்பட்ட சாதனம் செய்யுள். யாப்பு இல்லாமலும் சந்த நயம் உண்டாகுமாறு செய்யலாமாதலால் கவிதை செய்யுள் நடையிலுமிருக்கலாம், உரைநடையிலுமிருக்கலாம்.

தமிழ் ஆசிரியர்கள் நூல்களைப் பாச் செய்யுள், நூற்செய்யுள், உரைச் செய்யுள் என்று மூவகையாகப் பிரித்துளர். பாச் செய்யுள் என்பதே இதுகாறும் கூறிய இலக்கியம் அல்லது கவிதையாகும். நூற் செய்யுளையும் உரைச் செய்யுளையும் கருத்துக்களை வெளிப்படுத்தவே பயன்படுத்தினார்கள். ஆனால் இக்காலத்தில் உரைநடை என்னும் உரைச் செய்யுளும் இலக்கியத்தை உண்டாக்குவதற்கு உதவுகின்றது.

ஆகவே, ஒருவன் தன்னுடைய அனுபவத்தைக் கற்பனை மூலம் எண்ணிப் பார்த்து, அதைச் சொற்கள் மூலம், செய்யுள் நடையினாலோ உரைநடையினாலோ பிறர் உள்ளத்திலும் எழுமாறு அழகுபடச் செய்வதே இலக்கியமாகும். (முக்கியமான உலக மொழிகளிலுள்ள இலக்கியங்களைப்பற்றித் தனிக்கட்டுரைகள் உண்டு).

இலக்குக்காட்டி (Sight) : பீரங்கியைப் போன்ற படைக் கலத்தை இலக்கை நோக்கிக் குறிவைக்க உதவும் அமைப்பு இலக்குக்காட்டி எனப்படும். பலவகைப்பட்ட இலக்குக்காட்டிகள் தற்காலத்தில் பயன் படுகின்றன.

இலக்கை நோக்கிக் குறி பார்க்கப் படைக்கலத்தின் திசையையும் உயரத்தையும் சரிப்படுத்தவேண்டும். படைக்கலத்திலிருந்து வெளிப்படும் எறிபடை புவிக் கவர்ச்சியினால் பாதிக்கப்பட்டுப் பரவளையமான பாதையிற் செல்கிறது. இப்போது அதன்மேல் தொழிற்படும் காற்றின் உராய்வினால் அது பக்கவாட்டில் விலகுகிறது. எறிபடையின்மேல் வீசும் காற்றினாலும் அதன் பாதை பாதிக்கப்படுகிறது. ஆகையால், ஓர் இலக்கைக் குறி பார்க்கும்போது பீரங்கியை அதற்கு நேராக அமைக்காமல் பீரங்கியையும் இலக்கையும் இணைக்கும் நேர்க்கோட்டிற்கு மேலும், ஒரு பக்கமாகத் தள்ளியும் அமைக்கவேண்டியிருக்கும். இதைச் சரிவரச் செய்ய உதவும் சாதனங்கள் அனைத்தும் இலக்குக்காட்டி என்ற அமைப்பில் அடங்கும்.

துப்பாக்கிகளிலும், எந்திரத் துப்பாக்கிகளிலும் பயன்படும் இலக்குக் காட்டியில் துப்பாக்கியின் வாயி-