பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலங்கை

110

இலங்கை

மைத் தொழில்; ஆண்டுதோறும் 28,000 உன் உப்பு உற்பத்தியாகிறது. செங்கல், ஓடுகள், சவுக்காரம், தீப்பெட்டி, கண்ணாடி முதலிய குடிசைத் தொழில்களும் நடைபெறுகின்றன.

போக்கு வரத்து: 896 மைல் நீளமுள்ள ரெயில்வேயும், 10,500 மைல் நீளமுள்ள மோட்டார்ச் சாலைகளும் உள்ளன. 10,000 லாரிகள் வரையில் சமீப காலத்தில் இத்தீவில் பயன்படுகின்றன. பொதுநல விமானப் போக்கு வரத்தும் மிகுந்து வருகிறது. கொழும்பு - யாழ்ப்பாணம் - சென்னை விமானப் போக்குவரத்து உண்டு; சர்வதேச விமானங்களும் இவ்வழியே செல்கின்றன.

வாணிகம்: 1949-ல் ஏற்றுமதி: தேயிலை 1,30,000 டன்: ரப்பர் 85,000 டன்; கொப்பரை 21,500டன். இறக்குமதி: அரிசி 4,00,000 டன்; கோதுமை மாவு 1,50,000 டன்; தானியங்கள் 30,000 டன்.

கல்வி : அக்டோபர் 1945 லிருந்து ஆரம்பக் கல்வியிலிருந்து பல்கலைக் கழகக் கல்வி வரை இலவசமாக அளிக்க ஏற்பாடாகியிருக்கிறது.

முக்கிய நகரங்கள்: கொழும்பு : தலைநகர், முக்கியமான துறைமுகம்; மக் : 3.64.000 (1950). யாழ்ப்பாணம் மக்: 63,000 (1950); கண்டடி மக்: 50,000 (1950): மோரட்டுவா மக்: 50,000(1950); காலி மக்: 50,000 (1950) கா. கு.

வரலாறு: இலங்கையைத் தமிழ் நாட்டினர் 'ஈழம்' என்றழைப்பர். வடமொழியில் 'சிம்ஹளத்வீபம்' என்பர். கிரேக்கர்களும் ரோமானியர்களும் தாப்ரோபானே (தாமிரபரணி) என்று இந்நாட்டையே குறித்தனர். போர்ச்சுக்கேசியர்கள் சிங்களம் என்பதைச் சைலோன் என்றழைத்ததால், சிலோன் என்னும் தற்காலப் பெயர் பிறந்தது.

இந்தியாவிலிருந்து ஆரியமொழி பேசும் மக்கள் பெருவாரியாக இலங்கையில் குடியேறினர். அங்குள்ள மக்களுடன் அவர்கள் கலந்துபோயிருப்பினும், சிங்களவர் பேசும் மொழி ஆரியமொழியாகவே இருக்கிறது. இந்நாட்டு வரலாறு மகாவமிசம் என்னும் நூலுள் கூறப்பட்டுள்ளது. இலங்கை வரலாறுகளின்படி, வங்கப் பிரதேசத்தினின்றும் வந்த விஜயன் என்பவனே நாட்டின் முதல் அரசன் (கி. மு. 5ஆம் நூ). கி.மு. 3ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் ஆண்ட அசோகன் அனுப்பிய பௌத்த சந்நியாசிகளால் மக்கள் பெளத்த மதத்தைத் தழுவினர். அச்சமயம், இலங்கை அரசனாயிருந்த திஷ்யன் (கி.மு. 247-2007) தன் இராஜதானியாகிய அனுராதபுரத்தில் பல மடங்களைக் கட்டினான். துட்டகாமினி என்னும் மன்னன் (கி. மு. 101-77) பல பௌத்த ஸ்தூபங்களை நிருமாணித்தான்.

தன் தாய் நாடான இந்தியாவுடன் இலங்கை கொண்ட தொடர்பு என்றும் நீங்காமல் விளங்கியது. சங்கக்காலக் கவிகள் ஈழநாட்டினின்றும் வந்த விளை பொருள்களைப்பற்றிப் பாடுகின்றனர். சிலப்பதிகாரமென்னும் காவியத்தில், இலங்கை மன்னன் முதலாம் கயவாகு, சேரன் செங்குட்டுவனைச் சந்தித்த விவரம் கூறப்பட்டிருக்கிறது. பல தமிழர்கள் இலங்கையில் குடியேறினர். இலங்கையில் யாழ்ப்பாணப் பிரதேசம் நாளடைவில் தமிழர் மயமாகியது. குப்த அரசர்கள் இந்தியாவை ஆண்ட காலத்தில் இலங்கையரசனான மேகவர்ணன் சமுத்திரகுப்தனின் உதவிபெற்றதாக அறிகிறோம். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில், அஜந்தாவின் வர்ணச் சித்திரங்களை மேற்கொண்டு, இலங்கையில் சிகிரியா மலையில் வர்ணச் சித்திரங்கள் தீட்டப்பட்டன. பாஹியான் என்ற சீனயாத்திரிகர் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் நடந்து கொண்டிருந்த பெரிய வியாபாரத்தைக் குறிப்பிடுகிறார். இந்தியப் பண்பாட்டின் பல பகுதிகள் இலங்கை மக்களிடம் இடம் பெற்றுவிட்டன.

கி.பி.7ஆம் நூற்றாண்டில் ஆண்ட மன்னர்கள் அனுராதபுரத்தை விட்டுப் பொலனறுவை என்னுமிடத்தை இராசதானியாக்கிக்கொண்டனர். தென் இந்தியாவில் ஆண்டுவந்த பல்லவ அரசர்களுக்கும் அவர்களுக்கும் நெருங்கிய தொடர்பிருந்து வந்தது. பல்லவ அரசனான நரசிம்மவர்மன், அரசை இழந்த மானவர்மன் என்ற இலங்கை வேந்தனுக்கு அரசை மீட்டுக்கொள்ள உதவி செய்தான். கொழும்பு நகரம் கி.பி. 10ஆம் நூற்றாண்டில் தோன்றினதாகக் கருதப்படுகிறது.

பல்லவர்களுக்குப்பின் வந்த சோழ அரசர்கள் தங்கள் அரசை இலங்கையில் பரப்ப முற்பட்டனர். ஆகையால் சச்சரவுகள் ஏற்படலாயின. இராசராசசோழன் இலங்கையின் வடபகுதியை ஆக்கிரமித்தான். இராசேந்திர சோழன் இலங்கை முழுவதையும் வென்றான். ஆனால், குலோத்துங்க சோழனின் ஆட்சிக்காலத்தில், விஜயபாகு என்னும் இலங்கை அரசகுமாரன் தன் நாட்டின் சுதந்திரத்தை மீட்டான். முதலாவது பராக்கிரமபாகு ஆண்டகாலம் (1153- 1186) சோழ அரசர்கள் தாழ்வடைந்த காலம். இதைப் பயன்படுத்திய பராக்கிரமபாகு தென் இந்தியாவையே ஆக்கிரமித்தான். ஒரு கப்பற்படை தயாரித்துப் பர்மாவையும் தாக்கினான். இவ்வரசன் 4.000 அறைகள் கொண்ட ஓர் அரண்மனையையும் பல பௌத்த மடங்களையும் பொலனறுவையிற் கட்டினான். பொலனறுவை நகரம் பல அழகிய கட்டடங்களால் அலங்கரிக்கப்பட்டது. மக்களின் சௌகரியத்திற்காக ஏரிகளையும் கால்வாய்களையும் வெட்டினான். பௌத்த மதத்தில் மிகவும் பற்றுதல்கொண்ட அந்த வேந்தன் பௌத்த மடங்களுக்கு ஏராளமான மானியங்கள் அளித்தான். தன் நாட்டு மக்கள் கொல்லாமை விரதம் மேற்கொள்ள வேண்டுமெனக் கடுமையான சட்டங்க ளியற்றினான்.

கி.பி.13ஆம் நூற்றாண்டில் இலங்கை அரசர்களின் பலம் குன்றியது. தென்னிந்தியாவில் திக்குவிஜயம் செய்த ஐடாவர்மன் சுந்தரபாண்டியன் வடஇலங்கையைக் கைப்பற்றினான். இந்நூற்றாண்டிலேயே இலங்கை மன்னரின் தலைநகரம் கண்டிக்கு மாற்றப்பட்டது. பதினைந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், தன்னுடைய தூதர் ஒருவரை இலங்கையரசன் அவமதித்ததால் சீற்றமடைந்த சீனப் பேரரசன் ஒரு படையைக்கொண்டு இலங்கையைத் தாக்கி, அரசனான IV-ம் விஜயபாகுவைச் சிறைப்படுத்திச் சீனாவிற்குக் கொண்டு சென்றான். இதன்பின் முப்பது ஆண்டுவரை இலங்கை சீனாவுக்கு உட்பட்டுக் கிடக்கவேண்டி வந்தது. தென்னிந்தியாவை ஆண்ட விஜயநகர மன்னர்களும் இலங்கையை வெல்ல விரும்பி, இலங்கையின் சில பகுதிகளைக் கைப்பற்றினர்.

VIII-ம் பராக்கிரமபாகு ஆண்ட காலத்தில் போர்ச்சுக்கேசியர் முதன் முதலாக இலங்கையில் அடிவைத்தனர் (1505). 1517-ல் கொழும்பில் ஒரு பண்டக சாலையை அமைத்தனர். வியாபாரத்திற்காக வந்த அன்னியர் நாட்டின் குழப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு தமது அதிகாரத்தை நாட்டில் ஏற்படுத்த முனைந்தனர். இலங்கை போர்ச்சுக்கேசியர் வசமாயிற்று. நாட்டு மக்களில் பலர் கிறிஸ்தவர்களாக்கப்பட்டனர். 17ஆம் நூற்றாண்டில், II-ம் ராஜசிம்மன் போர்ச்சுக்கேசியர் ஆதிக்கத்தை ஒடுக்க நாடித் துணை தேடினான். அது போர்ச்சுக்கேசியரின் பகைவர்களான டச்சுக்-