பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலங்கை

111

இலங்கை

காரர் வர்த்தகத்தில் போர்ச்சுக்கேசியருடன் போட்டியிட்டுக் கொண்டிருந்த காலம். ராஜசிம்மனின் அழைப்பை டச்சுக்காரர் ஆர்வத்துடன் ஏற்றனர். இவ்விதம் 1602-ல் இலங்கையை அடைந்த டச்சுக்காரர் போர்ச்சுக்கேசியர் காட்டிய வழியையே பின்பற்றினர். 1658க்குள், டச்சுக்காரரின் ஆட்சி இலங்கை முழுவதும் பரவ ஆரம்பித்தது. கண்டிப் பகுதி மட்டும் சுதந்திர நாடாக நின்றது. டச்சுக்காரர் கொண்டுவந்த சட்டம் இன்றுகூட இலங்கைச் சட்டத்தின் அடிப்படையாயிருக்கின்றது. அவர்களிடமிருந்து தோன்றிய மக்கள் பர்கர் என்றழைக்கப்பட்டு, இன்றும் இலங்கை மக்களில் ஒருவராக வாழ்ந்துவருகின்றனர்.

ஐரோப்பாவில் 18ஆம் நூற்றாண்டின் இறுதியில், பிரெஞ்சுப் புரட்சியின் விளைவாக ஒரு பெரும்போர் ஏற்பட்டது. இதில் பிரான்ஸை இங்கிலாந்து எதிர்த்து நின்றது. பிரெஞ்சுச்சேனை டச்சுக்காரரின் தேசமான ஹாலந்தைக் கைப்பற்றிற்று. ஆகையால் பிரான்ஸுடன் போரிட்டுக்கொண்டிருந்த ஆங்கிலேயர் டச்சுக்காரர் மீதும் திரும்பும்படியாயிற்று. சென்னையில் ஆங்கிலேய கவர்னராயிருந்த ஹோபார்ட் பிரபு ஒரு படையை அனுப்பி இலங்கையைத் தாக்கினார். டச்சுக்காரர் வசமிருந்த இலங்கைப் பகுதி ஆங்கிலேயர் வசம் மாறியது (1796). 1802-ல் ஏற்பட்ட சமாதான உடன்படிக்கையின்படி, டச்சுக்காரர் தமது இலங்கைப் பகுதியை ஆங்கிலேயர் வசம் விட்டுவிட்டனர். ஆங்கிலேயர் எஞ்சியிருந்த கண்டி இராச்சியத்தையும் பற்றிக் கொள்ள நாடினர். அச்சமயம், கண்டி இராச்சியத்தைத் தமிழ் நாட்டினின்றும் வந்த விக்கிரமராஜ சிம்மன் (ஆ.கா.1798-1815) ஆண்டுகொண்டிருந்தான். அவனுக்கும் ஆங்கிலேயருக்கும் சச்சரவுகள் நிகழ் ஆரம்பித்தன அவள் கொடுங்கோலரசன் என ஒரு கருத்து இருந்துவருகிறது. ஆனால் பலர் இக்கருத்து ஆதாரமற்றது என்றும், அரசன் குடிகளின் நலனைக் கண்காணித்தே ஆண்டான் என்றும் உரைப்பர். ஆங்கிலேயருக்கும் அவனுக்கும் நடந்த சண்டையில் அவன் தோற்றான். கண்டி ஆங்கிலேயர் வசமாயிற்று (1815). அரசனின் சிம்மாசனம் இங்கிலாந்திற்கு வெற்றிச் சின்னமாக எடுத்துச் செல்லப்பட்டது. 1935-ல் தான் ஆங்கில சர்க்கார் அதை இலங்கை யரசாங்கத்திற்குத் திருப்பி யனுப்பினார்கள்.

இலங்கையில் ஆங்கில ஆட்சி தொடங்கிய சில காலத்திற்கெல்லாம் இந்தியாவில் உண்டானபடியே சுதந்திரக் கிளர்ச்சி இலங்கையிலும் பரவியது. 1902 வரையில் இலங்கையின் நிருவாகம் இந்திய அரசாங்கத்தின் கையிலிருந்தது. அதன்பின் ஆங்கில அரசாங்கம் நேரடியாக ஆள ஆரம்பித்தது. அதன் பிரதிநிதியாக ஒரு கவர்னர் ஜெனரல் இலங்கையைப் பரிபாலித்தார். சுதந்திரக் கிளர்ச்சியைச் சமாதானப்படுத்தச் சில சீர்திருத்தங்கள் செய்யவேண்டி வந்தன.1930ஆம் ஆண்டுச் சீர்திருத்தத்தின்படி ஒரு சட்டசபை ஏற்படுத்தப்பட்டது. அச்சபையினர்களே பல கமிட்டிகளாகப் பிரிந்து இலாகாக்களை மேற்பார்வை பார்க்க அதிகாரம் பெற்றனர். இச்சீர்திருத்தம் மக்களின் ஆதரவைப் பெறவில்லை. ஏனெனில், அதிகாரம் இன்னும் ஆங்கில அரசாங்கத்திடமே இருந்து வந்தது. 1946-ல் இயற்றப்பட்ட சட்டத்தின்படி இலங்கை சுயராச்சியமடைந்தது. ஆனால் ஆங்கிலேய அரசாங்கத்துடன் தொடர்பு நீங்கவில்லை. ஆங்கிலேய அரசாங்கத்தின் பிரதிநிதியாக ஒரு கவர்னர் ஜெனரல் இருக்கிறார். நாட்டின் பாதுகாப்புப் போன்ற சில விஷயங்களில் இங்கிலாந்திற்கும் இலங்கைக்கும் ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. டி. கே. வெ.

அரசியலமைப்பு: 1912-ல் இலங்கை யரசாட்சியில் ஏற்பட்ட முக்கியமான அரசியல் மாறுதல் புதுவகையில் 'லெஜிஸ்லேடிவ் கவுன்சில்' ஒன்று அமைக்கப் பட்டதேயாம். இத்திட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கத்தினர்களுக்கும் சிங்கள, தமிழ் நடுத்தர வகுப்பினருக்கும் சட்டசபையில் இடம் தரப்பட்டது. ஆயினும் உத்தியோகப் பற்றுள்ள அங்கத்தினர்களின் தொகை பெரும்பான்மையாகவே இருந்தது. 1918-ல் கவர்னராக வந்த சர் வில்லியம் மானிங் காலத்தில் நாட்டு வர்த்தகமும் பலவகை உத்தியோகங்களும் வளர்ச்சியடைந்தன. 1917-ல் நடுத்தர வகுப்பினர் அரசியலமைப்பை மாற்றியமைக்க வேண்டும் என்று கிளர்ச்சி செய்தனர்.1915-ல் ஏற்பட்ட கலவரங்களும் இதே நோக்கத்தோடு தோன்றியவையே. 1917-ல் ஏற்பட்ட இலங்கைச் சீர்திருத்தச் சங்கமும்', 1919-ல் ஏற்பட்ட இலங்கைத் தேசியகாங்கிரசும்' அரசியலமைப்பை மாற்றிப் பொறுப்பாட்சி அமைக்கும்படி வற்புறுத்தின. இவற்றின் முடிவாக, 1920-ல் அரசியலமைப்பை, மின்டோ-மார்லி சீர்திருத்தத்தையொட்டி மானிங் மாற்றினார். ஆயினும் அப்போதும் கவர்னருக்கு ஏராளமான தனிச் சலுகைகளும் அதிகாரங்களும் இருந்தன. ஆகையால் நாட்டு மக்கள் இச்சீர்திருத்தங்களால் திருப்தியடையவில்லை.

இந்நிலையில் டான்மோர் பிரபுவின் தலைமையில் அமைக்கப்பட்ட கமிஷன் 1928-ல் தனது அறிக்கையை வெளியிட்டது. இவ்வறிக்கை பார்லிமென்டு ஆட்சி முறை இலங்கைக்கு ஒவ்வாது என்று கருதியது. இராச்சிய நிருவாகக் கவுன்சில் ஒன்று அமைக்கப்பட்டு, அக்கவுன்சிலுக்குச் சட்டமியற்றும் பொறுப்பும் அளிக்கப்பட்டது. அரசாங்கக் காரியாலயமும் பத்து இலாகாக் களாகப்பிரிக்கப்பட்டு மாற்றியமைக்கப்பட்டது. இராச்சியக் கவுன்சிலில் 50 தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கத்தினர்களும், 8 நியமன அங்கத்தினர்களும் இருந்தனர்; இந்நியமன அங்கத்தினர்களில் 4 பேர் ஐரோப்பியர்கள். இத்திட்டத்திலும் கவர்னருக்கு அதிகாரங்கள் ஏராளமாக இருந்துவந்தன. இத்திட்டம் 1931-ல் அமலுக்கு வந்தது. இதுவும் மக்களுடைய விருப்பத்திற்கு முழுவதும் இசைந்ததாக இல்லை.

1939-ல் ஏற்பட்ட இரண்டாம் உலக யுத்தத்தின் இறுதியில் இந்தியாவிற்குச் சுதந்திரம் அளிக்கப்பட்டபோது இலங்கைக்கும் டொமினியன் அந்தஸ்து அளிக்கப்பட்டது.

யுத்த முடிவில் சோல்பரி பிரபுவின் தலைமையில் வந்த ஒரு கமிஷன் இலங்கைக்குப் புது அரசியல் அமைப்பை அளித்தது. அதன்படி வயது வந்தோர் யாவருக்கும் வோட்டுரிமையும், 30 பேரடங்கிய செனட்டும். 95 அங்கத்தினர்கள் கொண்ட பிரதிநிதி சபையும் அமைக்கப்பட்டன. கவர்னர் ஜெனரலுக்குப் பாதுகாவலையும், வெளிநாட்டு விவகாரங்களையும் பற்றிய அதிகாரம் உண்டு. 1946-ல் இலங்கையர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட திட்டப்படி ஒரு பார்லிமென்டு நிறுவப்பட்டது. அவ்வமைப்பில் தலைமை அதிகாரம் இங்கிலாந்து மன்னருக்கேயுண்டு. அவருடைய பிரதிநிதியாகக் கவர்னர் இருப்பார். செனட்டும் பிரதிநிதிகள் சபையும் பார்லி மென்டின் இரு சபைகளாகும். சிறுபான்மையோரின் நலனுக்குப் பாதகமில்லாத எச்சட்டத்தையும் உருவாக்கப் பார்லிமென்டிற்கு அதிகாரம் உண்டு. தற்காப்பு வெளிநாட்டு விவகாரங்கள் சம்பந்தமான மசோதாக்கள் மன்னருடைய உத்திரவுபெற்றே சட்டமாகக்கூடும்.

1947-ல் பிரிட்டிஷ் பார்லிமென்டு சட்டமாக்கிய இலங்கைச் சுதந்திரச் சட்டத்தின் விளைவாக 1948