பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலங்கை

112

இலங்கை

பிப்ரவரி 4-ல் இலங்கை உண்மையான டொமினியன் அந்தஸ்து பெற்றது. இவ்வரசியலமைப்பின்படி கவர்னர் பதவி நீக்கப்பட்டுக் கவர்னர் ஜெனரல் பதவி ஏற்படுத்தப்பெற்றது. பிரிட்டிஷ் ராச்சியத்தின் சார்பில் இலங்கையில் ஒரு ஹை கமிஷனர் இருக்கிறார். அச்சட்டப்படி பிரிட்டிஷ் காமன்வெல்த் நாடுகளுக்குச் சமமான பூர்ண பொறுப்பாட்சி அந்தஸ்து இலங்கைக்கு அளிக்கப்பட்டது. அன்றியும் தற்காப்பு வெளிநாட்டு விவகாரங்கள், அரசாங்க அலுவலாளர்கள் முதலிய விஷயங்களைப்பற்றி ஒப்பந்தங்கள் செய்துகொள்வதற்கு வசதியாகச் சில ஷரத்துக்களும் அச்சட்டத்தில் இருக்கின்றன.பிரிட்டிஷ் ராச்சியமும் இலங்கையும் ராணுவம் சம்பந்தமாகப் பரஸ்பர உதவி உடன்படிக்கைகள் செய்துகொண்டுள்ளன. பிரிட்டிஷ் ராச்சியத்திற்கு இலங்கையில் விமானத் தளங்கள் முதலிய ராணுவச் சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. இவ்வொப்பந்தங்கள் இலங்கையின் பாதுகாப்பைக் கருதியே செய்துகொள்ளப்பட்டவையாகக் கூறப்படுகின்றன. ஆயினும் இரு நாடுகளின் நன்மையையுங் கருதியே இவை ஏற்பட்டன என்று கூறலாம். வெளிநாட்டு விவகாரங்கள் சம்பந்தமாக ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தில் பழைய சாம்ராச்சிய மாநாடுகளில் தீர்மானிக்கப்பட்ட முடிவுகளை நிறைவேற்ற இலங்கை ஒப்புக் கொண்டுள்ளது. சுதந்திரம் அளிக்கப்படுவதற்கு முன்பே இலங்கையில் வேலையிலிருந்த அரசாங்க அலுவவாளர்களுடைய பதவிகளைப் பாதுகாக்க இலங்கை அரசாங்கத்தார் ஒப்புக்கொண்டுள்ளனர்.

பொது நிருவாகத்திற்காக நாடு ஒன்பது மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு மாகாண நிருவாகத்திற்காகவும் ஓர் அரசாங்கப் பிரதிநிதி இருக்கிறார். நாட்டில் 6 நகராட்சிக் கழகங்களும், 37 நகரக் கவுன்சில்களும் (Urban Councils), 26 பட்டணக் கவுன்சில்களும் (Town Councils) இருக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியே நாட்டில் தற்போதுள்ள முக்கியமான கட்சி, 1950 ஜூலை 19-ல் பார்லிமென்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு திட்டப்படி நாட்டில் புது வகையில் கல்விமுறை மாற்றியமைக்கப்பட்டது. 5இலிருந்து 11 வயது வரையுள்ள சிறுவர்களுக்குத் தாய்மொழி மூலமாகக் கட்டாயக் கல்வியும், இரண்டாம் வகுப்பிலிருந்து இரண்டாவது கட்டாய பாடமாக ஆங்கிலக் கல்வியும் ஏற்படுத்தப்பட்டன. மேற்படிப்பு 11இலிருந்து 14 வரை ஒரு பகுதியாகவும், 14இலிருந்து 17 வரை ஒரு பகுதியாகவும் கற்பிக்கப்படும். சிங்களமும் தமிழும் அவ்வம்மொழிகள் பெரிதும் பயிற்சியில் இருக்கும் பிரதேசங்களில் அவ்வம் மொழி வாயிலாகவே பாடங்கள் கற்பிக்கப்படும். கொழும்பில் ஒரு பல்கலைக்கழகம் இருக்கிறது.

நீதி : தமிழர் மிகுந்துள்ள வடபகுதியில் 'தேச வளமைச் சட்டங்களும், கண்டியைச் சுற்றியுள்ள பிரதேசங்களில் 'கண்டி'ச் சட்டங்களும், கடலோரப் பிரதேசங்களில் ரோமானிய-டச்சு'ச் சட்டங்களும் நடைமுறையிலிருக்கின்றன.

சிவில் வழக்குக்களை விசாரிக்க ஜில்லாக் கோர்ட்டுக்களும். கிரியினல் வழக்குக்களை விசாரிக்க மாஜிஸ்திரேட்டுக் கோர்ட்டுக்களும் இருக்கின்றன. உச்ச நீதிமன்றம் சிவில் வழக்குக்களில் அப்பீல் அதிகாரம் மட்டும் செலுத்துகிறது; ஆயினும் விவாகரத்து விஷயங்களில் மட்டும் இதற்கு அசல் அதிகாரம் உண்டு. உச்ச நீதிமன்றம் தனது அசல் அதிகாரத்தைச் செலுத்தி விசாரித்த கிரிமினல் வழக்குக்களின் அப்பீல்களை விசாரிக்கத் தனிப்பட்ட ஒரு கிரிமினல் அப்பீல் கோர்ட்டு உண்டு. சில்லறை வழக்குக்கள் சம்பந்தமாகக் கிராமங்களில் சிறு கோர்ட்டுக்களும் இருக்கின்றன.

கலைகள் : இப்போது இலங்கையிலுள்ள சிங்களவருடைய மூதாதையர் வடஇந்தியாவிலிருந்து வந்து குடியேறிய ஓர் ஆரிய மொழி பேசும் மக்கள் கூட்டமாவர். அவர்கள் குடியேறியது கிறிஸ்தவ சகாப்தத்துக்கு 500 ஆண்டுகட்கு முன்னதாகும். அது முதல் இலங்கையின் வரலாறு தொடங்குகின்றது. இலங்கையர்க்கும் தென்இந்தியாவிலிருந்த திராவிட மக்களுக்கும் அடிக்கடி நட்பும் பகைமையும் ஏற்பட்டு வந்துள்ளன. இலங்கைத் தீவின் வரலாறு தொடங்கிய முதல் ஆயிரம் ஆண்டுக் காலத்தில் பல சமயங்களில் தமிழரசரே இலங்கையை ஆண்டு வந்துள்ளனர். பதினோராம் நூற்றாண்டின் பெரும்பகுதியில் இலங்கையானது சோழ சாம்ராச்சியத்தில் ஒரு பகுதியாயிருந்தது. அதுமுதல் இலங்கையின் அரசியலிலும் பண்பாட்டிலும் தென் இந்தியாவின் ஆதிக்கம் அதிகமாயிருந்தது. இப்போது அத்தீவின் வடகடற்கரைப் பகுதியிலும் கிழக்குக் கடற்கரைப் பகுதியிலும் தமிழ் மக்களே வாழ்ந்து வருகிறார்கள்.

இலங்கைக்குரிய கலையிலும் சிற்பத்திலும் காணப்படும் விஷயங்கள் ஆதியில் சிங்களவர் வட இந்தியாவிலிருந்து கொண்டு வந்தவைகளும், அசோகர் காலத்தில் இலங்கைக்கு வந்து சிங்களவரைப் பௌத்தர்களாக ஆக்கிய பௌத்தமதப் பண்பாட்டினால் ஏற்பட்டவைகளுமாகும். ஆந்திர, குப்த, பல்லவ, சோழ, பாண்டிய, விஜயநகரக் கலைச் சிற்பமுறைகளுடைய ஆதிக்கம் முறையே அவைகள் உன்னத நிலையிலிருந்த காலத்தில் உண்டாயிருந்தது. ஆயினும் 19ஆம் நூற்றாண்டு வரை, சிங்கள பௌத்தக்கலையும் சிற்பமும் அந்த ஆதிக்கத்தால் அதிகமாக மாறுபாடு எதுவும் அடைந்துவிட வில்லை.

ஆதியில் சிங்களவர்கள் தங்கள் சிற்பத்தை மரத்தைக் கொண்டே செய்தனர். தூண்கள், படிகள், தூண்தாங்கும் அடிநிலைகள் போன்றவற்றுக்கு மட்டுமே கல்லை உபயோகித்தார்கள். அதனால் ஆதிகாலப் பகுதியிலிருந்த அரண்மனைகளையும் மதக் கட்டடங்களையும் பற்றிப் போதுமான அளவு தெரிந்து கொள்ள முடியாதிருக்கிறது. கல்லில் வேலை செய்வதின் திறமை ஏழாம் நூற்றாண்டில் உச்சநிலை அடைந்தது. இலங்கையின் பழைய தலைநகரமான அனுராதபுரத்திலுள்ள கட்டடங்களின் வாயில்களில் இடப்பட்டுள்ள கற்களை நிலாமணிக்கல் (Moon stones) என்று கூறுவர் அந்தச் சிற்பவேலை நிறைந்த பிறை வடிவமான கற்கள் உயர்ந்த வேலைப்பாடு உடையன. தூண்களின் உச்சியிலுள்ள வட்டமான கற்கள் மனித வடிவுடைய நாகர்களின் சிற்பங்கள் உடையன். அவற்றைக் 'காவல் கற்கள்' என்று கூறுவார்கள். இந்தக் கற்களும் நிலாமணிக் கற்களும் சிங்களச் சிற்பத்துக்கே உரியன. இடைக் காலத்தில் தலைநகரமாயிருந்த பொலனறுவை என்னும் இடத்திலுள்ள கோயில்கள் செங்கற்களால் கட்டுப்பட்டுள. அவற்றின் கூரைகள் பிறைவடிவமாக வளைந்த உருவமுடையன. அவை கட்டப்பட்ட காலம் பன்னிரண்டாம் நூற்றாண்டாகும். ஆனால் அனுராதபுரத்திலும் இத்தகைய கட்டடங்கள் இடிந்த நிலைமையில் காணப்படுவதால், இவ்லிதம் கட்டும் முறை 12ஆம் நூற்றாண்டில் புதிதாக ஏற்பட்டதன்று என்று தெரிகிறது.

பண்டைய சிங்களச் சிற்பக் கலையைச் சிறப்பாக விளக்கக்கூடியவை அனுராதபுரத்திலும் வேறு பண்டைய தலங்களிலும் காணப்படும் மிகப் பெரிய தூபி