பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலங்கை

113

இலங்கைப் பல்கலைக் கழகம்

களாகும். தூபி என்பது பெளத்த மதம் இலங்கைக்கு வந்தபோது அதனுடன் வந்ததாகும். அது இந்தியாவிலிருந்து வந்தபோது அமைக்கப்பட்டவாறே இங்கும் அமைக்கப்பட்டுள்ளது. சாஞ்சியிலுள்ள தூபிகள் ஆதி அமைப்பைக் காட்டுவன. மேற்கோப்பு அமைப்பில் மட்டும் வேறுபாடு காணப்படுகிறது. கூரை கூம்பு போன்றுள்ளது. அதில் குடைக்குமேல் குடையாகக் கட்டப்பட்டுள்ளது. கூரை முழுவதும் செங்கல்லால் அமைக்கப்பட்டிருக்கிறது. நான்காம் நூற்றாண்டில் கட்டப்பெற்ற தேஜவன் தூபி என்பதே அனுராதபுரத்திலுள்ள தூபிகளுள் மிகப் பெரியதாகும். அது இப்பொழுது பழுதுற்றிருந்தாலும் அதன் அடி நிலையிலிருந்து 231 அடி உயரம் உடையதாயிருக்கின்றது. சிறு தூபிகளுள் சில வட்டமான கோவில்களில் உள. அந்தக் கோவில்களின் கூரைகள் கும்மட்ட உருவம் உடையன். வட்டத்தினுள் வட்டமாக வரிசையாக நிறுத்திய கல் தூண்கள் மரத்தாலான கூரையைத் தாங்குகின்றது. மேற்கு இந்தியாவிலும் தென் இந்தியாவிலும் காணப்படுகின்ற கற்குடைவுக் கோயில்களைப் பார்த்தால் இலங்கையிலுள்ள இந்தத் தூபிகளைக் கட்டிய முறைகளை அறிந்துகொள்ளலாம். வட்டமாகக் கோயில்களைக் கட்டுவது சிங்களச் சிற்பக்கலையின் ஒரு சிறப்பாகும். அவற்றுள் மிகச் சிறந்தது பொல்னறுவை என்னுமிடத்தில் காணப்படும். நாலந்தாவில் பிற்காலத்துப் பல்லவ முறையில் கட்டப்பட்ட கோயில் ஒன்று காணப்படுதிறது. அது பௌத்தக் கோயிலாக இருந்திருக்கலாம். சோழ முறையிலும் பாண்டிய முறையிலும் அமைக்கப்பட்ட சிவன் கோயில்கள் பொலனறுவையில் காணப்படுகின்றன. விஜயநகர முறையில் அமைந்த பௌத்தக் கோயில் ஒன்று கண்டியின் அருகில் இருக்கின்றது. யாபவு (Yapavu) என்னுமிடத்தில் 14ஆம் நூற்றாண்டில் செய்த புறவாயில் (Gateway) ஒன்று பாண்டிய முறையில் அமைந்திருக்கின்றது.

சிங்களச் சிற்பங்களின் காலம் கிறிஸ்தவ சகாப்தத்தின் ஆதி நூற்றாண்டுகளாகும். ஆதிச் சிற்பங்கள் அனுராதபுரத்திலும் மிகின்தலேயிலும் காணப்படும் மிகப்பெரிய ஸ்தூபிகளின் முகப்புக்களுக்குப் பக்கங்களில் நிற்கும் சுண்ணாம்புக் கல்லால் ஆகிய கல்வெட்டுத் தூண்களாகும். இந்தச் சிற்பங்கள் அனைத்திலும் ஒரு தொட்டியிலிருந்து கொடிகள் கிளம்புவது போன்ற ஒரேவிதமான காட்சியே செதுக்கப்பட்டுள்ளது. இம்மாதிரியான சிற்பங்கள் சாஞ்சியில் இருக்கின்றன. நாககன்னிகளுடைய உடைகளும் நிலைகளும் அமராவதிச் சிற்பங்களை நினைவூட்டுகின்றன. நிலாமணிக் கற்களில் செதுக்கப்பட்டுள்ள விலங்கு வடிவங்கள் இணையற்றவை. அனுராதபுரத்தில் ஒரு பாறையில் செதுக்கியுள்ள மனிதனும் குதிரையும் கண்கவர் வனப்புடையவை. அனுராதபுரத்துப் புத்த உருவங்களுள் ஒன்று, சமாதி நிலையில் அவரிடம் காணப்பட்ட ஆழ்ந்தசாந்தியையும் அளவந்த கருணையையும் அழகாகக் காட்டுகின்றது. இலங்கையில் பௌத்தமதத்தின்காரணமாக எழுத்த பல வெண்கலச் சிற்பங்களும் கிடைத்துள்ளன. பொலனறுவையில் எழில் மிக்க நடராஜ விக்கிரகமும் வேறு சில சைவ விக்கிரகங்களும் கிடைத்திருக்கின்றன. இவை தென் இந்தியாவில் தோன்றியவையாக இருக்கலாம்.

இலங்கையில் ஓவியக்கலை மிகுதியாகப் பயிலப்பட்டு வந்தது. ஆதியில் எழுந்த ஓவியங்கள் சிகிரியா (Sigiria) என்னும் இடத்தில் காணப்படுகின்றன. அவற்றின் காலம் ஐந்தாம் நூற்றாண்டாகும். இந்த ஓவியங்கள் மேகங்களின் மீது தேவதைகள் செல்வதைச் சித்திரிக்கின்றன. அவை இந்திய ஓவியக்கலையின் உறவுடையன என்று காட்டியபோதிலும், தனிப்பட்ட சிறப்பு அமிசங்களும் உடையனவாகும். பௌத்தக் கதைகளிலுள்ள சில காட்சிகளைச் சித்திரிக்கும் ஓவியங்கள் பொலனறுவையிலுள்ள 12ஆம் நூற்றாண்டுக் கோயில் ஒன்றின் சுவர்களை அணி செய்கின்றன. பண்டைய ஓவியங்களின் சின்னங்கள் அநேக இடங்களில் காணப்படுகின்றன.

ஆதிக் கல்வெட்டுக்கள் கி மு. 3ஆம் நூற்றாண்டில் எழுந்தனவாகும். அவை பெளத்தக் குகைக்கோயில்களை அமைத்துத் தந்த அரசர்கள் உட்படப் பல வள்ளல்களைப்பற்றிய குறிப்புக்களாகப் பிராமி விபியில் இருக்கின்றன. பிற்காலத்தில் பாறைகளிலும் தூண்களிலும் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் நீளமாயிருப்பதோடு, பல வரலாற்றுச் செய்திகளும் தருகின்றன. வரலாற்று நூல்கள் தரும் செய்திகளை இவை நிறைவாக்குகின்றன. இலங்கையிலுள்ள கல்வெட்டுக்கள் கி.மு. 3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 18ஆம் நூற்றாண்டுவரை தொடர்ச்சியாகவுள்ளன. இவற்றுள் பெரும்பாலானவை சிங்களமொழியில் எழுதப்பெற்றிருக்கின்றன. கல்வெட்டுக்கள் காலத்தால் தொடர்ச்சியுடையனவாயிருப்பதால், சிங்கள மொழி இரண்டாயிரம் ஆண்டுகளாக எவ்வாறு வளர்ந்து வந்திருக்கின்றது என்பதையும், இப்பொழுதுள்ள சிங்கள எழுத்துப் பண்டைய பிராமி எழுத்திலிருந்து எவ்வாறு பரிணமித்து வந்திருக்கிறது என்பதையும் அறிந்து கொள்ள உதவுகின்றன. இலங்கையில் தமிழில் காணப்படும் ஆதிக் கல்வெட்டுக்கள் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை யாகும். சமஸ்கிருதத்திலும் அரபு மொழியிலுமுள்ள கவ்வெட்டுக்களும் சில காணப்படுகின்றன.

மண்ணால் செய்த பழஞ் சின்னங்கள் சில அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. அவை கிறிஸ்தவ சகாப்தத்தின் தொடக்கக் காலத்தனவாகும். அவற்றைப் பார்த்தால் அக்காலத்திலேயே குயவர் தொழில் திறமை மிகுந்ததாக இருந்தது என்பது விளங்கும். அக்கால மட்கலங்கள் பல மிகுந்த கலைச் சிறப்புடைய உருவங்கள் உடையன. அவற்றின் மீது சிவந்த சுண்ணம் பூசியிருக்கிறது. ஓவியம் தீட்டப்பெற்ற கலங்களும் உள்ளன. ரோம் நாட்டு, சீன நாட்டு, மேற்கு ஆசிய நாட்டுக் கலங்களின் துண்டுகளும் பல இடங்களில் கிடைத்திருக்கின் றன. எட்டு முதல் பதின்மூன்று வரையுள்ள நூற்றாண்டுகளில் சிவப்பு மண்ணால் செய்த மூக்கு வைத்த கலங்கள் பயன்படுத்தப்பெற்றுள்ளன. இக்காலத்தில் நாடோறும் பயன்பட்டு வரும் கலங்களுக்கும், அக்காலத்தில் அவ்வாரே பயன்பட்ட கலங்களுக்கும் மிகுந்த வேறுபாடு காணப்படவில்லை. அவைகள் அனைத்தும் வேலைத் திறமுடையனவல்ல. இந்தியாவில் போலவே இலங்கையிலும் மட்கலக் கலை மற்றக் கலைகள் வளர்ந்ததுபோல வளர்ந்துவரவில்லை. பண்டை நாகரிகம் வளர்ந்த இடங்களில் நவரத்தினங்கள், உலோகங்கள், யானைத் தந்தம் முதலியவற்றைக் கொண்டு கலைப்பொருள்கள் செய்தவர்களும் இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. எஸ். ப.

இலங்கைப் பல்கலைக் கழகம்: 1870-ல் நிறுவப்பெற்ற இலங்கை மருத்துவக் கல்லூரியும் 1921-ல் நிறுவப்பெற்ற இலங்கைப் பல்கலைக் கழகக் கல்லூரியும் சேர்ந்து 1942-ல் இலங்கைப் பல்கலைக் கழகமாக ஆகியுள்ளன. இது ஆசிரியரும் மாணவரும் ஒன்றாகக் குருகுலவாசம்போல் இருந்து கல்வி பயிலும்

15