பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலச்சை கெட்ட மரம்

114

இலட்சுமி

பல்கலைக்கழக வகையைச் சேர்ந்ததாகும். இது மற்றப் பல்கலைக்கழகங்கள் கற்பிக்கும் கலைகளையும் விஞ்ஞானங்களையும் கற்பிப்பதுடன், மருத்துவம், பொறியியல், சட்டம், விவசாயம், கால்நடை மருத்துவம் ஆகியவற்றையும் கற்பிக்கின்றது. 1952-ல் மாணவர்கள் தொகை 2.183. இலங்கையின் கவர்னர் ஜெனரல் சான்சலராகவும், கல்வி மந்திரி புரோ சான்சலராகவும் இருப்பர். கழகத்தின் இருப்பிடம் பேராதனையாகும்.

இலச்சை கெட்டமரம் (சண்டிக்கீரை, சுண்டி, நச்சுக்கொட்டை, முறுவல்) வீட்டுத் தோட்டங்களில் வைத்து வளர்க்கும் சிறு மரம். குற்று மரமாகவும் இருக்கும். நேராக உயர்ந்தும் வளரும்; சற்றுப் படர்ந்தும் இருப்பதுண்டு. மரத்தின் பட்டை வெண்பழுப்பு நிறமாக இருக்கும். மரம் வெண்மையாகவும் நொய்தாகவும் இருக்கும். வேலைக்கு உதவாது. அடுப்பெரிக்கவும் ஏற்றதன்று. இவைகள் மென்மையாகவும் மிகவும் மடியக் கூடியனவாகவும் இருக்கும். 12 அங்குல நீளமும் 6 அங்குலம் அகலமும்கூட இருக்கும் முதிர்ந்த இலைகள் வெளிர்ப் பசுமையாகவும் துலக்கமாகவும் காணும். இளந்தளிர்கள் மஞ்சளாக அல்லது வெண்மையாக இருக்கும். இலையின் அழகுக்காக இந்த மரத்தைத் தோட்டங்களிலும் தொட்டிகளிலும் வளர்ப்பார்கள். இலை, கறி சமைக்க உதவும். கீரை லெட்டிஸ்(சல்லாத்து)

இலச்சைகெட்ட மாம்

1. கிளையும் பூக்கொத்தும் 2. பூ, நெடுக்குவெட்டு 3. காய்

கீரையின் கொழுந்துபோல இருப்பதால் இந்த மரத்தை லெட்டிஸ் மரம் என்றும், கீரையை மர லெட்டிஸ் என்றும் சொல்வதுண்டு. இந்த அடகுணவு வாயு அல்லது வாதம் என்னும் உடல்நிலை மாறுபாட்டிற்கு நல்லது என்பார்கள். இலையை ஒடுக்கலான் (த.க.) என்னும் மணநீரில் ஊறவைத்து, யானைக்கால் அழற்சிக்கு உபயோகிப்பதுண்டு.

இந்த மரத்தின் போத்துக்களை நட்டு வைத்தால் அவை எளிதில் விரைவாக வளர்ந்து மரமாகிவிடும். இது நிரம்பவும் அழகாகத் தழைத்தாலும் பூப்பதைக் காண்பது அருமையாகையால் இதற்கு மேற்கண்ட பெயர்கள் வழங்குகின்றன போலும். பூக்கொத்துக்கள் கிளை நுனியிலும் இலைச் சந்திலும் உண்டாகும். பூக்கள் சிறியவை. சாதாரணமாக ஆண்மரம் வேறு, பெண் மரம் வேறு. ஆண் மரத்தின் இலைகள் சற்றுக் கருமை மிகுந்த பச்சை நிறமானவை. பெண் மரத்தின் இலைகள் வெண்மை மிக்கவை. ஆதலால் சாதாரணமாகப் பெண் மரங்களையே தொட்டிகளில் வைத்து வளர்ப்பார்கள். ஒரே மரத்தில் ஆண் பூ, பெண் பூ இரண்டும் உண்டாகலாம். ஒரே பூவில் கேசரம், சூலகம் ஆகிய இருபால் உறுப்புக்களும் இருப்பதும் உண்டு. பூவில் 5 இதழ்கள் ஒன்று சேர்ந்த ஒரே இதழ் வட்டம் உண்டு. கேசரங்கள் 6-10. காய் அங்குல நீளமிருக்கும். இதழ்களின் அடிப்பாகம் கனியின்மேல் உறை போல மூடிக்கொண்டு நிலைத்திருக்கும். அதன்மேல் 5 வரம்புகள் இருக்கும். வரம்பின்மேல் கொக்கிபோல வளைந்த சிறு முட்கள் வரிசையாக இருக்கும். அவற்றில் பிசுபிசுப்பான சுரப்புக்கள் உண்டாகும். இம்முட்களாலும் சுரப்புக்களின் உதவியாலும் காயானது பறவை முதலியவற்றின் உடம்பில் ஒட்டிக்கொள்ளும். இந்தியப் பெருங்கடலிலுள்ள கோக்கோஸ் அல்லது கீலிங்கு என்னும் பவளத்தீவுகளில் வளரும் ஒருவகைச் சண்டி மரத்தின் கனிகள் நாரைகளின் இறகில் ஒட்டிக்கொண்டு, அவை பறப்பதற்கு இயலாமற் செய்துவிடுகின்றன. இப்படி ஒட்டிக் கொள்வதால் இந்த மரங்கள் நெடுந்தூரம் பரவுகின்றன. சாட்டரணை, மூக்கிரட்டை, மூக்குத்தி அல்லது மூக்கொற்றிக்கொடி என்று சொல்லும் செடிகளின் காயும் இப்படி ஒட்டிக்கொள்வதைப் பார்க்கலாம்.

இந்த மரம் மலேயா, அந்தமான் முதலிய இடங்களில் தானாக வளர்கிறது. இந்தியாவிலும் இலங்கையிலும் மனிதர் வளர்க்கின்றனர். இது போகென்வில்லியா, சாட்டரணை, மூக்கிரட்டை முதலியவை சேர்ந்த நிக்டாஜினேசீ என்னும் அந்தி மல்லிகைக் குடும்பத்தைச் சேர்ந்தது. ஆம்ஸ் டெர்டாமில் இருந்த டச்சு மருத்துவரும் இயற்கை விஞ்ஞானியுமான பீசோன் என்பவர் பெயரால் இந்தச் சாதி பீசோனியா என்றழைக்கப்படுகிறது. இந்த மரம் பீசோனியா ஆல்பா அல்லது பிசோனியாமொரிண்டிபோலியா எனப்படுகிறது.

கல்தேக்கு (கரேயா ஆர்போரியா) என்னும் மரமும் இலச்சை கெட்ட மரம் எனப்படுகிறது.

இலட்சத் தீவுகள் (Laccadive Islands) : இவை இந்திய யூனியனில் சென்னை மாகாணத்தைச் சேர்ந்தவை. மலையாளக் கடற்கரைக்கு மேற்கில் 200 மைல் தொலைவில் 14 தீவுகள் உள்ளன. இவற்றுள் 10 தீவுகளே மக்கள் வாசத்துக்குட்பட்டவை. வட பகுதிக்கு அமிண்டிவிஸ் என்று பெயர். இது தென் கன்னட மாவட்டக் கலெக்டரின் ஆட்சியில் அடங்கியது. தென்பகுதியாகிய மினிகாய்த்தீவு உட்பட மீதியுள்ள தீவுகளுக்கு இலட்சத் தீவு என்று பெயர். இவை மலையாள மாவட்டக் கலெக்டரின் ஆட்சிக்குட்பட்டவை. இங்கு வழங்கும் மொழி பெரும்பாலும் மலையாளம். மிகத் தெற்கிலுள்ள மினிகாய்த் தீவிலுள்ள மக்கள் மாகல் (Mahl) மொழி பேசுகின்றனர். இங்குள்ள மக்கள் யாவரும் முஸ்லிம் இனத்தினர். இங்குத் தென்னையும் தென்னைநார் உற்பத்தியும் மிகுதி. மக் : 20,702 (1951).

இலட்சுமி: பார்க்க: திருமகள்.