பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலந்தை

115

இலந்தை

இலந்தை முள்ளுள்ள சிறு மரம். குற்று மரமாகவும் நிற்பதுண்டு. இந்தியாவில் சாதாரணமாகப் பல இடங்களிலும் காட்டு மரமாகவும் வளர்ப்பு மரமாகவும் இதைக் காணலாம். இது இலங்கை, பர்மா, மலாக்கா, மலேயா தீவுக்கூட்டம், சீனா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தானம், அயன ஆப்பிரிக்கா முதலிய இடங்களிலும் இருக்கிறது. ஆயினும் இதன் தாயகம் இந்தியா எனக் கருதப்படுகிறது. சிவாலிக்குமலை, இமயமலையின் அடிப்பகுதி, தக்கணம் முதலிய இடங்களிலுள்ள காடுகளில் இது தானாக வளர்கிறது. இதில் பலவகைகளுண்டு. அவை இலையின் தோற்றம், அளவு, வடிவம், மயிர்ச்செறிவு முதலியவற்றாலும், பழத்தின் அளவு, வடிவு, நிறம்,மணம் முதலியவற்றாலும் வேறுபடும். பயிர் செய்த மரங்களில் பழம் நீளமாகவும், அண்டவடிவமாகவும், உருண்டையாகவும் இருக்கலாம். நல்ல மரங்களின் கொட்டைகளைப் பொறுக்கிக் கன்றுகளை விளைப்பதாலும், ஒட்டுச் செய்வதாலும் காட்டுப்பழத்தைக் காட்டிலும் இவை மிகவும் நன்றாக மாறுதலடைந்திருக்கின்றன.

இலந்தை வறண்ட பாகங்களிலும் குறுங்காடுகளிலும் வளரும் மரங்களில் முக்கியமானதொன்று. பூசாரமில்லாத நிலத்திலும் இது எளிதாக முளைத்து விரைவில் பெரிதாக வளர்ந்துவிடும். சாதாரணமாக நன்றாக வளர்ந்த மரத்தின் அடிப்பாகம் 3 அடிச் சுற்றளவு இருக்கும். அருமையாகச் சில மரங்கள் மிகப்பெரியனவாகவும் வளர்கின்றன. ஒரு மரம் 80 அடி உயரமும், அடியில் 23 அடிச் சுற்றும் உள்ளதாக மத்தியப் பிரதேசத்தில் இருந்ததெனத் தெரிகிறது. மரத்தின் பட்டை ⅓ அங்குலம் தடிப்பாக இருக்கும். கருஞ்சாம்பல் அல்லது கருமை நிறமாகக் கோணல்மாணலாகப் பிளவுபட்டிருக்கும். மரம் வலிமையுள்ளதாகவும் கடினமாகவும் நெருங்கிய நுண்மையான இரேகைகளுள்ளதாகவும் செந்நிறமாகவும் இருக்கும். வெட்டின மரத்திலிருந்து போத்துக்கள் நன்றாக வளரும். கிளைகள் மிகவும் அதிகமாக இருக்கும். இளங்கிளைகளில் மென் மயிர் மூடியிருக்கும். இலைகள் இரண்டு வரிசையாகக் கிளைகளில் மாறி அமைந்திருக்கும். 1-2½ அங்குல நீளமும், ¾-1½ அங்குல அகலமுமிருக்கும். நீள்வட்ட வடிவுள்ளது; சில ஏறக்குறைய வட்டமாகவே இருக்கும். மேற்புறம் பளபளப்பாகவும் பச்சையாக வும் இருக்கும். கீழ்ப்புறம் வெண்மயிர் அல்லது, பழுப்புமயிர் நிறைந்திருக்கும். அலகில் மூன்று முக்கிய நரம்புகள் தோன்றும். இலைக்காம்பு மிகச் சிறியது. இலையடிச்செதில்கள் முள்ளாக மாறியிருக்கும். ஒரேமுள் அல்லது இரண்டு முட்கள் இருக்கும். இரண்டிருக்கும்போது ஒன்று கொக்கிபோலக் கீழ் நோக்கி வளர்ந்திருக்கும். மற்றொன்று நேராக மேலே நீண்டிருக்கும். வளைந்தது ஏதாவது ஆதாரத்தைப் பற்றிக் கொள்ளவும், நீண்டது விலங்குகளைத் தடுக்கவும் உதவும். சிறு செடியாக இருக்கும்போது அடியிலுள்ள கிளைகள் மெல்லியனவாக எல்லாப் பக்கத்திற்கும் வேலி போட்டவைபோலக் கிடைமட்டமாகப் படர்ந்து, நேராக மேலெழும்பி வளரும் ஈடுவிலுள்ள கிளையை விலங்குகள் கடித்துவிடாதபடி காக்கும். இவ்வித வளர்ச்சி விளா, வெள்வேல், கருவேல் முதலியவற்றிலும் காணலாம். பூக்கள் மிகச் சிறியவை. சிறிது மணமுள்ளவை. பசுமை நிறமானவை. சிறு கொத்துக்களாக இருக்கும். புறவிதழ்க் கிண்ணம் ஐந்து பிரிவுகளுள்ளது. அகவிதழ்கள் 5 மிகச் சிறியவை. உட்கவிந்து பிறகு புறம்பே மடிந்திருக்கும். கேசரம் 5. ஒவ்வொன்றும் ஒவ்வோர் அகவிதழுக்கு எதிராக இருக்கும். கேசரங்களின் இதழெதிர் (Antipetalous) நிலை இலந்தைக் குடும்பத்தின் பண்புகளில் ஒன்று. பூவின் நடுவில் பத்துப் பிரிவுகளுள்ள ஆதானம் நிரம்பியிருக்கும். அதில் குலகம் ஏறக்குறையப் பாதி அளவுக்கு அமிழ்ந்திருக்கும். சூலகம்

இலந்தை
1. கனி. 2. பூ

இரண்டறைகளுள்ளது. கனி உள்ளோட்டுத் தசைக்கனி ஓடு பள்ளமும் மேடுமாக சொர சொரவென்று உருத்திராட்சம் போலக் காணும்.

இலந்தை வேர்க் கஷாயம் சுரத்துக்குப் பயனாகும். வேரின் பட்டையைப் பொடியாக்கிப்புண்ணுக்கு வைத்துக் கட்டலாம். தளிரை அல்லது கட்டையை அரைத்துப் பற்றுப்போடக் கட்டிகள் பழுத்து உடையும். மரம் உறுதியானதும், வலிமையுள்ளதும், நெருங்கிய இரேகையுள்ளதுமாக இருப்பதாலும், நன்றாக உழைக்கக்கூடியதாதலாலும், பலவித வேலைகளுக்கு உதவும். வீட்டுச் சாமான்கள், கிணற்று ராட்டினம், கலப்பை முதலிய உழவுக் கருவிகள், உலக்கை முதலிய செக்கின் பாகங்கள், கூடார முளை, கட்டில் கால், சேணச் சட்டங்கள், சீப்பு முதலியவற்றிற்கு இம்மரம் பயன்படுகிறது. மரம் நல்ல விறகு. இம்மரத்தின் கரி மிக நல்லது. கிளையும் வளாரும் வேலியடைப்பதற்குப் பெரிதும் ஏற்றவை. பட்டை, தோல் பதனிடுவதற்கும், பட்டுக்குச் சாயம் போடுவதிலும், வயிற்றுப்போக்குக்கு மருந்தாகவும் பயனாகிறது. இலை, ஆடு, ஒட்டகம் முதலியவற்றிற்கு நல்ல உணவு. கனி, சிறிய ஆப்பிள்போலத் தோன்றும். இனிப்பும் புளிப்பும் கலந்த சுவையும் மணமும் சற்று அதைப் போலவே இருக்கும். இதனால் ஆப்பிளைச் சீமை இலந்தைப் பழம் என்பதுண்டு. பழம் குளிர் காலத்தில் பழுக்கும்; காயை ஊறுகாய் போடுகின்ற-