பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலவங்கத் தீவுகள்

116

இலவங்கம்

னர். கனியின் தசையை உப்பு மிளகாயோடு அரைத்து, அடையாகத் தட்டி உலர்த்திவைத்துக் கொள்வதுண்டு. இதனோடு புளியும் சேர்ப்பதுண்டு. இலந்தை வடை அழலையை நீக்கும் ; செரியாமையைப் போக்கும்; பசியை உண்டாக்கும். பழத்தை மனிதன் மட்டுமன்றி ஆடு, மாடு, நரி, வெளவால், பறவைகள் முதலியவை விருப்பத்துடன் தின்னும். இவற்றின் வழியாகக் கொட்டை நெடுந்தூரம் பரவும்.

இலந்தை மரத்தில் அரக்குப் பூச்சி வளரும். பஞ்சாபில் இம்மரத்தையே அரக்கு வளர்க்கப் பயன்படுத்துகின்றனர். அஸ்ஸாமில் ஈரி என்னும் பட்டுப் பூச்சிப் புழுவுக்கு இந்த இலையை உணவாகப் போட்டு வளர்க்கின்றனர். இந்தப் புழு சாதாரணமாக ஆமணக்கு இலையில் வளர்வது, தஸ்ஸர் என்னும் பட்டுப் பூச்சிப்புழுவும் இலந்தையில் வளரும்.

இலந்தை ராம்னேசீ என்னும் இரட்டை விதையிலைக் குடும்பத்தைச்சேர்ந்தது, சிசிபஸ் ஜுஜுபா எனப்படும்.

இலவங்கத் தீவுகள் : பார்க்க : மோலக்கஸ்.

இலவங்கப்பட்டை (கருவாப்பட்டை, தால்ச் சீனி) : சின்னமோமம் சைலானிக்கம் (Cinnamomum zeylanicum) என்னும் மரத்தின் உட்பட்டை. இந்த மரம் லாரேசீ குடும்பத்தைச்

இலவங்கப்பட்டை
1.கிளை. 2. அரும்பு. 3. பூ நெடுக்குவெட்டு

சேர்ந்தது. இலையுதிராத மரம், இலங்கைத் தீவுக்குரியது. இலைகள், பெரியனவாகவும், நீண்ட அண்டவடிவாகவும் இருக்கும். 3-5 நரம்புகள் கை வடிவமாக அமைந்திருக்கும். பூக்கள் கலவை மஞ்சரிகளாக இருக்கும்; பசுமை நிறமுள்ளவை. ஒருவித வெறுப்பான மணமுள்ளவை. இம்மரத்தின் அரும்பு இலவங்கத்தைப்போலப் பயன்படுகிறது. மரம் பெரிதாக வளரக்கூடியது. ஆனால் அதை வளரவிடாமல் பட்டை எடுக்கக்கூடிய அளவுக்கு வளர்ந்த கிளைகளை ஆண்டுதோறும் நறுக்கிக்கொண்டே இருப்பார்கள். சொரசொரப்பாக இருக்கும் மேல் பட்டையை நீக்கி விடுவார்கள் மற்றப் பகுதி இறகின் முருந்துபோலச் சுருண்டுகொள்ளும். உள்ளிருக்கும் மரம் அவ்வளவு பயன்படுவதில்லை. தென்னிந்தியாவில் மேற்குக்கரை நெடுக 6,000 அடி உயரம் வரையில் வளர்கின்றது. ஜாவா, மேற்கு இந்தியத் தீவுகள், பிரேசில், எகிப்து முதலிய நாடுகளில் பயிரானாலும் இலங்கையில் உண்டாவதே மிகவும் உயர்ந்த சரக்கு. இது மிக மெல்லியதாகவும், வழுவழுப்பாகவும், இலேசான வெளிர் மஞ்சள் கலந்த பழுப்பு நிறமுள்ளதாகவும் இருக்கும். நல்ல மணம் கமழ்வது. ஒருவகை இனிய, பரிமளச் சுவையுள்ளது. இதன் மணம் இதிலுள்ள எண்ணெயால் உண்டாவது. பட்டையை இடித்துக் கடல் நீரில் ஊறவைத்து, மெதுவாக்கிப் பிறகு முழுவதையும் விரைவாக வாலைவடித்து இந்த எண்ணெய் எடுப்பார்கள். அது பொன்னிறமாக இருக்கும். கருவாப்பட்டை சமையலுக்குச் சம்பாரமாகவும், சாக்கலேட்டு, மதுவர்க்கங்கள் செய்வதில் வாசனைப் பொருளாகவும் பயன்படுகிறது. சோப்புச் செய்வதிலும் வாசனையாக உபயோகிக்கிறார்கள். இது தமாலம் (காசியா) என்னும் பெரிய இலவங்கப் பட்டையை (சின்னமோமம் தமால)விட மிகவும் விலை உயர்ந்தது. இதனோடு அது கலப்படம் செய்யப்படுகிறது.

பெரிய இலவங்கப்பட்டை மரம் சற்றுச் சிறிதாக இருக்கும்.இது இமயமலைப் பகுதிகளில் வளர்கிறது. இலை பளபளப்பாக மூன்று நரம்புள்ளதாக இருக்கும். தளிர் சிவப்பாகவும், பூக்கள் மஞ்சள் கலந்த வெண்மையாகவும் இருக்கும். இதன் இலையைக் கருவா இலை அல்லது இலவங்கப்பத்திரி என்பர். இது கறிகளுக்குச் சம்பாரமாகப் பயன்படுகிறது.

இலவங்கம் (கிராம்பு): அயன மண்டலத்தில், ஆண்டில் 60 முதல் 120 அங்குலம்வரை மழை பெய்யும் இடங்களில் கடல் மட்டத்திலிருந்து 3,000 அடி உயரம் வரையில் உண்டாகிற சிறிய மரம். மோலக்கஸ் என்னும் இலவங்கத் தீவுகளில் காட்டு மரமாக இருக்கிறது.

கிழக்கிந்தியத் தீவுகளிலும், தென்னிந்தியாவிலும், சான்சிபார், மடகாஸ்கர், கயானா, பிரேசில், மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய இடங்களிலும் பயிராகிறது. இதில் பூக்கள்

கிளை நுனிகளில் கொத்துக்கொத்தாக இருக்கும். விரியாத பூ மொட்டுக்களைப் பறித்துக் காயவைத்த பொருள்களுக்குக் கிராம்பு அல்லது இலவங்கம் என்று பெயர். கிராம்பில் காம்புபோல இருக்கும் பாகத்திற்கு உள்ளே சூலகம் இருக்கிறது.முனையில் முக்கோண வடிவாக இருக்கும் நான்கு பற்கள் புறவிதழ்ப் பிரிவுகள்.

கிராம்பு மணமும் காரமும் நிறைந்தது. ஆசியாவில் வசிக்கும் மக்கள் இதன் சுவையை விரும்புகிறார்கள். வெற்றிலையோடும் தின்பண்டங்களிலும் வாசனைப் பொருளாக இதைப் பயன்படுத்துகின்றனர். சமையற்-