பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலாகா அமைப்பு

119

இலாகா அமைப்பு

தொடர்பு இருக்க முடியாத அளவிற்கு இராச்சிய விவகாரம் வளர்ந்துவிடுமாயின், இடையில் நிருவாகத் தலைவர்கள் ஏற்படவேண்டியது அவசியம். இவ்வகைப்பட்ட நிருவாகத் தலைவர்களே இலாகாத் தலைவர்கள் ஆவர்.

இலாகாக்களை அமைப்பதில் இரண்டு பொருள்களை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். அவை: ஒவ்வோர் இலாகாவும் நன்கு இணைக்கப்பட்ட ஒரு பகுதியாக அமையவேண்டும். இலாகாவிற்கு இலாகா நல்ல முறையில் தொடர்பு இருக்கவேண்டும். இலாகாத் தலைவர்களில் மேற்படியிலிருப்பவர்களுக்குப் பொது நிருவாகத் திறமை மிகுதியாயிருப்பதும், கீழ்ப்படிகளி லிருப்பவர்கள் நிருவாகத்தின் விரிவான வகை முறை களையறிந்திருப்பதும் முறையாகும். தலைமை நிருவாகிக்கும், மிகத் தாழ்ந்த படியிலிருப்பவருக்கும், இவ்விருவருக்கும் இடைப்பட்ட நிலையிலிருக்கும் ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொருவகையான பொறுப்பு உண்டு. ஆயினும் இவற்றை நிருணயிப்பது ஒவ்வோர் இலாகாவில் ஒவ்வொரு விதமாக இருக்கும்.

இராச்சியத்தின் நிருவாகம் அரசாங்கக் காரியதரிசிகள், இலாகாத் தலைவர்கள் என்பவர்களைக் கொண்டு நடத்தப்படும். அரசாங்கக் காரியதரிசிகளையும் இலாகாத் தலைவர்கள் என்றே கருதலாம். அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஜனாதிபதிக்குச் சில அரசாங்கக் காரியதரிசிகள் உண்டு. தற்போது பத்துப்பேர் உள்ளனர். இவ்வளவு குறைந்த எண்ணிக்கை கொண்ட இலாகாத் தலைவர்களைக்கொண்டு அத்துணைப் பெரிய இராச்சியத்தின் நிருவாகத்தை அந்நாட்டு ஜனாதிபதி நடத்துவது வியக்கத்தக்கதாம். இங்கிலாந்தில் பிரதம மந்திரிக்கு நிருவாகத்தில் உதவி புரிய இதைப்போல் மூன்று மடங்கு எண்ணிக்கையுள்ள இலாகாத் தலைவர்கள் உள்ளனர்.

நகராட்சிக் கழகங்கள் முதலிய தலத்தாபனங்களில் வேறொரு நிருவாகப் பிரச்சினை உண்டாகிறது. இந்தியாவிலுள்ள நகராட்சிக் கழகங்களின் தலைவர் நகர மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவர். நகரசபைக்குட்பட்டுச் செயல் புரியும் கமிஷனர் அரசாங்கத்தாரால் நியமிக்கப்படுவர். இவர்களுடைய அதிகார எல்லைகள் விதிப்படி வெவ்வேறாக இருக்கக் கூடுமாயினும், கருத்து வேற்றுமைக்கு இடமுண் டாகக் கூடும். நகராட்சியின் ஓர் இலாகாவெனச் செயலாற்றும் நிலையிலுள்ள நகர போலீசார்கள் நகர அதிகாரிகளுக்கு ஒரு வகையிலும் கீழ்ப்பட்டவர்களல்லராதலால், நல்ல முறையில் முழுவதும் ஒன்றுபடுத்தப்பட்டுள்ள (Integrated) தல ஆட்சி முறை இன்னும் ஏற்படவில்லை எனலாம்.

நிருவாக இலாகா அமைப்புத் திருப்திகரமான முறையில் இன்னும் ஏற்படவில்லை என்பதற்கு அலுவலகத் திறமையைப்பொறுத்த பிரச்சினைகளும், அரசியல் பிரச்சினைகளும் காரணமாயிருக்கின் றன. சமூக நலன்கள், சர்வதேசியக் கொள்கைகள், கைத்தொழில் அபிவிருத்தித் திட்டங்கள் முதலியவை ஆட்சியாளர்களுடைய அரசியற் கோட்பாடுகளைப் பொறுத்து அமைபவையாம். மருத்துவ வசதி, கல்வி, பொதுச் சுகாதாரம்முதலியவை அலுவல் திறமையைப் பொறுத்து அமைபவையாம். இலாகா அமைத்தல் அவ்வந்நாட்டு ஆட்சியாளர்களுடைய கோட்பாடுகளால் முடிவு செய்யப்படும். அமெரிக்காவில் இராச்சியக் காரியதரிசிகள் ஒரு சிலர் இருப்பதும், சோவியத் ரஷ்யாவில் முப்பதுக்குமேற்பட்ட மந்திரிகள் இருப்பதும் இவ்வாறு ஏற்பட்ட வேறுபாடுகளாம்.

வேலையை எல்லோருக்கும் வசதியான முறையில் பலரிடையே எவ்வாறு பகிர்வது என்பது ஒரு இலாகாவின் பிரச்சினை. எல்லா நிலைமைகளிலும் திருப்திகரமாகப் பலனளிக்கும் ஏதேனும் ஓர் இலாகா அமைப்பு முறையைத் தேர்ந்துகொள்வது மிகவும் கடினம். நடைமுறையில் ஏற்படும் பிரச்சினைகளைக் கவனித்தே இலாகா அமைப்பை மேற்கொள்ள வேண்டும்.

புதிதாக ஏற்படும் ஓர் இலாகா தன்னை நிலைப்படுத்திக் கொள்வதிலேயே கருத்தாயிருக்கும். பொது நிருவாகத்திற்கு அந்த இலாகா எவ்வளவு இன்றியமையாதது என்பதை எடுத்துக் கூறுவதில் அவ்விலாகா அதிகாரிகள் முனைந்திருப்பர். இலாகாக்களின் அதிகார எல்லை விரிவடையும்போது தொடர்புடைய இலாகாக்களிடையே அதிகார எல்லைத் தகராறுகள் ஏற்படுவது இயற்கை. எந்த இலாகாவும் தனக்கே அதிகாரம் உண்டு என்று வாதாடுவதும் இயற்கையாம். ஓர் இலாகாவின் அதிகாரத்தை மற்றோர் இலாகாவிற்கு மாற்றும்போது அதிகாரத்தை இழக்கும் இலாகாத் தலைவர்கள் பெரிதும் முயன்று, தங்கள் அதிகாரம் குறையாமல் பார்த்துக்கொள்வர்.

நன்கு வேரூன்றிவிட்ட இலாகாவுக்குச் சுறுசுறுப்பைவிடப் பலமே அதிகமாயிருக்கும். இலாகாக்கள் அலுவல் ஆற்றும்போது மிக மெதுவாக வேலை நடப்பது வெளிப்படையாகப் பலருமறிந்தது, சுறுசுறுப்புச் சாத்தியமாகும் முறையில் இலாகாக்களை மாற்றியமைப்பதற்கு இலாகாக்களில் ஊன்றிவிட்டவர்கள் பெரும்பாலும் இடங்கொடுப்பதில்லை. "அறிவையும் சுறுசுறுப்பையும் தியாகம் செய்துவிட்டு, அவற்றிற்குப் பதிலாக மிகுந்த தற்காப்புப் பலத்தைப் பெற்றுள்ள பெரிய பூதங்களாம் இவ்விலாகாக்கள்" என்று பெண்டல்டன் ஹெரிங் (Pendleton Herring) என்பவர் கூறியுள்ளார்.

இலாகாக்களின் அமைப்பில் திடீரென்று புதிதாக ஒரு மாறுதல் செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டால் அப்போது பல இடையூறுகள் ஏற்படுவதற்குக் காரணம் நீண்ட நாட்களாக இலாகாக்கள் ஏதேனும் ஒரு சரியான ஏற்பாட்டை யொட்டி வளராமல் தாமாகவே மேற்பார்வையில்லாமல் வளர்ந்து வந்துள்ளமையேயாம். இலாகாக்களை நல்ல முறையில் அமைக்கவேண்டுமாயின் தகுதியான சிப்பந்திகளைத் தேர்ந்தெடுப்பதோடு, கட்சிச் சூழ்நிலையில் இருக்கும் மந்திரிகள் முதலானவர்கள் இலாகாக்களின் அன்றாட அலுவல்களில் கட்சி நலன்களைக் கருதித் தலையிடாமலிருப்பதும் மிகவும் அவசியமாம்.

இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிறகு ஏராளமான புது அலுவல்கள் தோன்றியதால் பெரிய இலாகாக்களும் சிறிய இலாகாக்களுமாகப் பல ஏற்பட்டன. இவ்விலாகாக்களிடையே நெருங்கிய தொடர்பு ஏற்படுமாறு அவற்றை அமைப்பது கடினமாயிற்று. தலைமை நிருவாகிகளுக்கு அதிகாரத்தை மிகுத்து, அவசரநிலையில் (Emergency basis) அலுவலாற்றவேண்டிய இலாகாத் தலைவர்களுக்கு மற்றவர்களைவிட அதிக அதிகாரமும், தலைமை அதிகாரிகளையும் கலக்காமல் செயலாற்றும் உரிமையும் அளிக்கப்பட்டன, யுத்தத்திற்குத் தேவையானவற்றை நேரடியாகக் கவனிக்கும் இலாகாத் தலைவர்கள் இவ்வகையான மிகை அதிகாரங்களைப் (Excessive powers) பெற்றனர். ஆயினும், யுத்தகால ஏற்பாடுகள் அமைதிக் காலத்திற்கு ஒத்து வருவதில்லை. போர்க்காலங்களில் மந்திரி சபை சில இலாகாக்கள்மீது அளவிறந்த அதிகாரம்செலுத்தி ஒற்றுமைப்படுத்த முடியும். பிரிட்டிஷ் மந்திரிசபை முதல் இரண்டாம் உலக யுத்தங்களில் இவ்வாறே இலாகாக்களிடையே தொடர்பு ஏற்படுத்தி