பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலாபம்

120

இலாபம்

வந்தன. மிகுந்த அதிகாரமுள்ள இலாகாத் தலைவரும் சம்பந்தப்பட்ட மந்திரியின் அதிகாரத்திற்கு உட்பட்டவராகையாலும், மந்திரிசபை ஒரு சிறு சபையாதலாலும், அம்மந்திரிகளிடையே கூட்டுப்பொறுப்புக் கொள்கைப்படி அரசியல் ஒற்றுமை இருக்குமாதலாலும் இலாகாத் தொடர்பு எளிதில் அமையக் கூடியதாயிருந்தது. அமெரிக்க ஐக்கிய நாட்டில் மந்திரிசபை இல்லை. ஜனாதிபதிக்கு உதவியாக இருக்கும் இராச்சியக் காரியதரிசிகள் (Secretaries of State) மந்திரிசபை அங்கத்தினர்களைப் போன்ற பொறுப்பு உடையவர்கள் அல்லர். அன்றியும் பிரிட்டிஷ் செயலகத்திற்கும் (Secretariat) அமெரிக்கச் செயலகத்திற்கும் திறமையிலும் வசதியிலும் வேறுபாடுண்டு.

பொதுவாக இலாகாக்களுக்குச் செயலக அலுவல், பொதுமக்கள் அலுவல் என்று இருவகை அலுவல்கள் உண்டு. செயலக அலுவல்களில் அதிகாரிகளின் விகுப்பம்போலச், சிப்பந்திகள் நடந்துகொள்வதே முறை. அதற்கேற்ற வசதி முறைகளும் அவ்வவ்விலாகா ஏற்படுத்திக் கொண்டிருக்கும். ஆனால், இலாகாக்கள் பொதுமக்களோடு நேரடியான தொடர்பு வைத்துக் கொள்ளவேண்டி வரும் நிலைமைகளில் அவை மிகுந்த திறமையோடும் எச்சரிக்கையோடும் நடந்துகொள்ள வேண்டும். அரசாங்க இலாகாக்களுக்கேயன்றித் தனிப்பட்ட கம்பெனிகள், பாங்குகள் முதலியவற்றின் இலாகாக்களுக்கும் இது பொருந்தும். அதிருப்தியடைந்த பொதுமக்கள் அளவற்ற தொந்தரவு உண்டாக்க முடியும்.

பெரும்பாலும் இலாகாக்கள் செய்யும் அலுவல்கள்சிறப்பான ஒருவகை அலுவலாகையால், சிப்பந்திகள் சம்பந்தமாக வரும் வழக்குக்களை விசாரிக்க அதிகாரிகளைக்கொண்டே மன்றங்கள் அமைக்கப்படும். ஒவ்வோர் இலாகா அதிகாரியும் இவ்வாறு ஏராளமான நிருவாக அதிகாரத்தைப் பெற்றிருப்பதோடு ஓரளவு நீதி அதிகாரமும் பெற்றிருப்பார். இலாகா வழக்குக்கள் பெரும்பாலும் நீதிமன்றங்களுக்குப் போகாமல் இலாகா அதிகாரிகளாலேயே தீர்க்கப்படும். இதனால் இலாகாக்களுக்கு உரியனவல்லாத அதிகாரங்களும் அவற்றிற்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றன வென்றும், நீதிமன்றங்கள் செய்யவேண்டிய நீதி பரிபாலனத்தை இவர்கள் செய்வதால் நீதியும் ஒழுங்கான முறையில் செலுத்தப்படாது என்றும் கருதுபவர்களும் உண்டு.

மேலதிகாரிகளுடைய உத்தரவுகளை நடைமுறையில் கொண்டு வருவதே தங்களுடைய கடமை என்று இலாகாக்கள் நினைப்பின், அது தவறாகும். சட்டதிட்டங்களும், விதிவிலக்குக்களும் இலாகாவின் வேலை சரிவர நடைபெறுவதற்கு வசதியாகச் செய்யப்பட்டுள்ள சாதனங்களேயன்றி, அவற்றிற்காகவே இலாகாக்கள் அமைக்கப்படுவதாகக் கருதக்கூடாது. அரசாங்கத்தின் அடிப்படை நோக்கமான பொதுமக்கள் ஊழியத்தைக் கருத்தில் கொண்டு செயலாற்றுவதையே இலாகாக்கள் குறிக்கோளாகக் கொள்வது நல்லது. ரா. பா.

இலாபம் : மூலதனம் வைத்து வியாபாரம் செய்யும் ஒருவன் அத்தொழில் சம்பந்தமாய்ச் செலவிடும் தொகையும், அத்தொழிலைத் தொடர்ந்து செய்வதற்கு வேண்டிய முதலும் போக மீதியுள்ள தொகையை இலாபம் என்று பொருளாதார நூலார் கருதுகின்றனர். ஆனால் ஆண்டுதோறும் இலாபத்தைக் கணக்கிடுகின்ற வியாபாரியின் முறை இதுவன்று. வியாபாரிகளுக்கு ஆண்டுதோறும் இலாபத்தை முதலிட்டவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்தாலன்றி வேறு வழியில் தொழிலுக்குரிய மூலதனத்தைப் பெறுதல் இயலாது. ஆகவே, இலாபத்தை ஆண்டுதோறும் தீர்மானித்துப் பகிர்ந்து கொடுத்தே பெரும்பாலும் வியாபாரிகள் தம் தொழிலை நடத்தி வருகின்றனர்.

ஆனால் ஒவ்வோர் ஆண்டின் இறுதியிலும் இலாபத்தை இவ்வளவென்று தீர்மானிப்பது எளிய காரியமன்று. செலவுகளையும் வரவேண்டிய வருமானங்களையும் உத்தேசமாகக் கணக்கிட முடியுமேயன்றி நிலையாக இவ்வளவுதான் என்று கூறமுடியாது. அப்படியே இலாபத்தைக் கணக்கிட முடிந்தாலும் எதிர்பாராமல் ஏற்படும் செலவுகளுக்கு ஈடுசெய்ய முடியாது. மேலும் வியாபாரத்தில் சிற்சில சமயங்களில் நஷ்டங்களும் ஏற்படுவதுண்டு. முன்கூட்டியே இந்த நஷ்டங்கள் ஏற்படும் என்று தெரிந்துகொள்ளவாவது, கஷ்டங்கள் ஏற்படாதபடி தடுக்கவாவது வியாபாரிக்கு இயலாது.

இலாபம் ஆண்டுதோறும் இவ்வளவாயிற்று என்று கணக்கிடாமல், வியாபாரத்தில் எதிர்கால அபிவிருத்திக்குக் குந்தகமில்லாமல் பங்கிட்டுக் கொள்ளக்கூடிய தொகையை உத்தேசமாகத் தீர்மானித்து, அத்தொகையையே இலாபமாகக் கருத வேண்டும். ஆயினும் ஒவ்வோராண்டிலும் கிடைத்து வருமென்று எதிர்பார்க்க முடியாத தொகையை இலாபமெனக் கருதலாகாது.

முதல் இலாபமும் வருமான இலாபமும் : வருமான இலாபத்தைத்தான் வியாபாரி பங்கிட்டுப் பிரித்துக் கொடுக்கிறான். தொடங்கும் வியாபாரத்துக்குச் சம்பந்தமில்லாமல் வேறு காரணங்களால் கிடைக்கும் இலாபம் முதல் இலாபம் (Capital profits) எனப்படும். வியாபாரத்துக்கு அடிப்படையான நிலையாய் உள்ள சொத்துக்களின் விலையேற்றத்தாலும், மூலதனத்துக்குத் தொடர்பில்லாமல் திடீரென்றுச் சொத்துக்களுக்கு ஏற்படும் மார்க்கெட் விலையின் ஏற்றத்தாலும் உண்டாவது முதல் இலாபம். இப்படி மார்க்கெட் விலையேற்றத்தால் ஏற்படக்கூடிய இலாபம் பகிர்ந்தளிக்கக்கூடிய இலாபம் (Dividend proft) ஆகாது. நிலையாக வியாபாரத்துக்கென்று ஏற்பட்ட சொத்துக்கு (Fixed assets) விலையேற்றம் ஏற்பட்டால், அதனால் வியாபாரிக்குத் திகிலும் பயமும் உண்டாகுமே யன்றி மகிழ்ச்சி உண்டாகாது. ஏனெனில் அப்பொருள்களுக்குத் தேய்வோ அழிவோ ஏற்பட்டால், அவற்றை மாற்றிப் புதுப்பிக்க வேண்டிய செலவு மிகவும் அதிகப்படும். அப்போது இலாபப் பங்கீட்டுத் தொகை குறையும், நிலையாகவுள்ள சொத்துக்களின் விலையில் குறைவு ஏற்பட்டால், பங்கீட்டு இலாபமானது அந்த அளவிற்குப் பாதிக்கப்படுவதில்லை. பொருள்களைப் பழுதுபார்க்க வேண்டிய தொகை குறைந்தால், வருமானத்தைப் பொறுத்தவரையில் இலாபமென்றே நினைக்கவேண்டும்.

வியாபாரத்தை மூடிவிடும்படியான நிலைமை ஏற்படும்போதுதான் முதன் முதல் இலாபமோ நஷ்டமோ இவ்வளவு என்று நிருணயிக்கப்படும். அப்போது முதலாகவுள்ள சொத்தின் விலை கூடியிருந்தால், முதலிட்டவர்களுக்கு முதலும் அதன்மீது கிடைத்திருக்கும் இலாபமும் பங்கிட்டுக் கொடுக்கப்படும். சொத்தின் விலை குறைந்திருந்தால் (அ) வரையறுத்த கம்பெனிப் (Limited Company) பங்குதாரர்கள் தங்கள் மூலதனம் முழுவதையும் பெறமாட்டார்கள்; (ஆ) வரையறுக்காத கம்பெனிப் (Unlimited) பங்குதாரர்கள் மூலதனம் முழுவதும் பெறுவார்கள்.

கூட்டு வியாபாரமாயின் இலாபத் தொகைகள் வசூலாக வேண்டியிருந்தாலும், கணக்கில் காணப்படும்