பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலாமிச்சை

121

இலுப்பை

இலாபத்தொகை முழுவதும் பிரித்துக்கொள்ளப்படும். ஆனால் வரையறுத்த கம்பெனி வியாபாரமாயின், எதிர்பாராமல் ஏற்படும் செலவுகளுக்காகவும், ஒவ்வோராண்டிற்கும் ஒரு குறிப்பிட்ட இலாபத்தொகை பிரித்துக் கொடுப்பதற்காகவும் ஒரு தொகையை ஒதுக்கி வைத்துவிட்டே இலாபம் பகிர்ந்து கொடுக்கப்படும்.

இலாமிச்சை (இலாமஞ்சம், லாமச்சகம், வெட்டிவேர்ப்புல்) அடர்த்தியாகவும் கொத்துக் கொத்தாகவும் வளரும் பல பருவப்புல். இதன் தரைக்கீழ்த் தண்டு கிளைத்துச் செல்லும். அதிலிருந்து கடற் பஞ்சு போன்ற மெதுவான மேற்பாகமுள்ளவையும், நீண்ட மெல்லிய நார் போன்றவையுமான வேர்கள் வளர்ந்திருக்கும். இந்த வேர்கள் நறுமுணமுள்ளவை. தரைக்கு மேலே கிளைகள் 2-3½ அடி வளரும் அவை இலையடர்ந்திருக்கும். இலையலகுகள் ⅞-¾ அங்குல அகலமும் 1-2 அடி நீளமும் இருக்கும். இந்தப் புல் இந்தியாவில் கடலை அடுத்த பிரதேசங்களில் குளக்கரை, குளப்படுகை, வாய்க்கால் கரை, வரப்பு முதலிய ஈரமான இடங்களில் சாதாரணமாக மிகுதியாக வளர்கிறது. உள்நாடுகளில் அவ்வளவு அதிகமாக இருப்பதில்லை. சில இடங்களில் இதைப் பயிர் செய்கின்றனர்.

இலாமிச்சை வேர் வெட்டிவேர் எனவும் வழங்கும். இது கஸ்-கஸ் எனவும் படும்.இந்த வேரிலிருந்து தட்டி, விசிறி முதலியவை செய்கிறார்கள். நீரில் வாசனைக்காகப் போடுவதுண்டு. உடம்பு தேய்த்துக்கொள்ளும் நலங்குமாவிலும், தைலங்கள் செய்வதிலும் இது பயன்படுகிறது. துளசிக் குடும்பத்தைச் சேர்ந்த கோலியஸ் வெட்டிவேராய்டிஸ் என்னும் வேறொரு செடிக்கும் வெட்டிவேர் (த.க.) அல்லது குறுவேர் என்னும் பெயர் உண்டு. அதன் வேர் ஈரமாக இருக்கும்போது மிக்க நறுமணமுள்ளது. அதைப் பெண்கள் தலைக்கு அணிந்துகொள்வர்.

இலாமிச்சை கிராமினேசீ என்னும் புல் குடும்பத்தில் ஆண்ட்ரொபோகான் ஸ்குவாரோசஸ் என்னும் இனம். இதற்கு வெட்டிவேரியா சிசானியாய்டிஸ் என்னும் மறுபெயரும் வழங்கி வந்தது. இது இந்தியாவின் சமபூமிகளிலும் தாழ்வான குன்றுகளிலும் அன்றி இலங்கை, பர்மா, ஜாவா, அயனமண்டல ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளிலும் கிடைக்கிறது.

இலிங்க புராணம் பதினெண் புராணங்களில் ஒன்று, பதினோராயிரங் கிரந்தமுடையது, மிக நுண்பொருள்களையும் சிவ மாண்பையும் அறிவிப்பது. இது தமிழில் வரதுங்கராம பாண்டியனால் (16ஆம் நூ.) மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இலிங்க ரெட்டியார் (17ஆம் நூ.) சிவப்பிரகாச சுவாமிகளால் திருவெங்கை உலாவிலே 'பண்டை அறத்தின் படிவமிது வென்னவுருக் கொண்ட இலிங்கையன்' எனப் பாராட்டப் பெற்றவர். துறைமங்கலத்தில் வாழ்ந்தவர். திருவெங்கை எனப்படும் வெங்கனூரிலே சிவபிரானுக்குத் திருக்கோயில் கட்டியவர். தெலுங்க ரெட்டி மரபினர். வெங்கனூர்க் கோயிலிலுள்ள கல்வெட்டிலே 'விஐயநகர வேந்தரான இரண்டாம் வேங்கடாதிபரின் ஆட்சிக் காலத்தே (கி.பி. 1623 மே 21-ல்) சிவபிரானையும் அம்பிகையையும் தாம் கட்டிய கோயிலிலே பிரதிட்டை செய்தாரெனக் குறிப்பிட்டிருக்கிறது.

இலுப்பை (Bassia longifolia) சென்னை இராச்சியத்தில் தஞ்சாவூர், சேலம், வட ஆர்க்காடு, தென்னார்க்காடு மாவட்டங்களில் பெருவாரியாகவும், மற்ற மாவட்டங்களில் சிறுபான்மையாகவும் வளர்க்கப்பட்டு வருகிறது. இதைச் சாலைகளின் ஓரங்களிலும், ஏரிகரைகளிலும், கால்வாய்க் கரைகளிலும் காணலாம். தேவஸ்தானங்களுக்குச் சொந்தமான நிலங்களிலும், கிராமத்திற்கு அடுத்துள்ள தோப்புக்களிலும், இதை அடர்த்தியாக வளர்க்கிறார்கள். ஏராளமாகக் காப்புக் காடுகளில் (Reserve forests)

இலுப்பை

1. கிளை, பூக்கொத்துள்ளது.
2. பூ
3. புல்லியும் அல்லியும்.
4. அல்லியின் உட்புறம் விரித்துக் காட்டியிருப்பது. அல்லிப் பிரிவுகளும், அல்லியோடு இரண்டு வரிசையாக இணைந்துள்ள கேசரங்களும் தெரிகின்றன.
5. மகரந்தப்பை : முன், பின் தோற்றங்கள்.

6. சூலகம், நெடுக்கு வெட்டு.

இது வளர்கின்றது. இது வேகமாக வளர்வதில்லை. 10 ஆண்டுகளில் பலன் தரும். இதன் ஆயுள் சுமார் 80 ஆண்டுகளுக்கு மேற்பட்டது. இந்த மரம் பெரும்பாலும் ஓர் ஆண்டு விட்டு மற்றோர் ஆண்டு பலன் தரும். மே முதல் செப்டெம்பர் வரையில் இது பலன் தரும் பருவம், ஒரு மரம் சராசரி 70 முதல் 100 இராத்தல் பருப்புத் தருகிறது. பழங்களைக் காயவைத்து, உடைத்து விதை எடுக்கிறார்கள். பிறகு விதைகளை உலரவைத்துத் தடிகளால் அடித்துப் பருப்பை எடுத்து விடுகிறார்கள். பெரும்பாலும் செக்கிலிட்டே எண்ணெய் எடுக்கிறார்கள். கொட்டைகளில் 75 சதவீதம் பருப்பு.பருப்புக்களில் 60 சதவீதம் எண்ணெய். இந்த 60 சதவீதத்தில் சுமார் 37 அல்லது 38 சதவீதமே, பருப்பைச் செக்கிலிட்டு ஆட்டும் முறையில் இறக்க முடிகிறது.

இந்த எண்ணெய் மஞ்சள் அல்லது சிறிது பசுமை கலந்த மஞ்சள் நிறமுள்ளது. இதை விளக்கில் வார்த்தால், சுடர் பளிச்சென்று எரியும். இந்தச் சுடர் கண்ணுக்குக் குளிர்ச்சியென்று சொல்லுகிறார்கள். விளக்கு ஏற்றவும், சமையல் செய்யவும்கூட இந்த எண்ணெயைப் பெரும்பாலும் ஏழை மக்கள் பயன்படுத்துகிறார்கள். நெய்க்குக் கலப்புப் பொருளாகவும், சோப்பும் மெழுகுவர்த்தியும் செய்வதற்கும் இந்த எண்ணெய் சிறுபான்மை பயன்படுகிறது. சில மாவட்டங்களில் இதன் பிண்ணாக்குச் சோப்புக்குப் பதிலாகவும் எரி துரும்பாகவும் பயன்படுகிறது. இதற்கு அரைப்பு அல்லது இலுப்பைக்கட்டி என்று பெயர். இந்தப் பிண்ணாக்கில் மருந்துக் குணங்கள் உண்டு. கரப்பானையும் வேறு சில நோய்களையும் நிவிர்த்தி செய்ய இந்தப் பிண்ணாக்கை நிரம்பப் பயன்படுத்துகிறார்கள். இதை எருவாகப் போடுவதில்லை. இதில் சபானின் (Saponin) என்னும் நச்சுப்பொருள் இருப்பதால் இதைக் கால்நடை உணவாகப் பயன்படுத்துவதில்லை. இலுப்பைப் பூவைச் சேகரித்து, அதனின்றும் சில

16