பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலை

126

இலை

சுற்றுச்சுற்றவேண்டுமோ அந்த எண்ணைப் பின்னத்தின் தொகுதியெண்ணாகவும், எத்தனை இலைகளைக் கடக்க வேண்டுமோ அந்த எண்ணைப் பகுதியெண்ணாகவும் அமைக்கவேண்டும். ஆகவே புல்லின் இலையடுக்கை என்றும், கோரையினதை என்றும், வெண்டையிவதை என்றும் குறிக்க வேண்டும். சாதாரணமாக , , , , ...அடுக்குக்களும் ,, , , ...அடுக்குக்களும் என இரண்டு தொடர்களாக இவற்றை வரிசைப்படுத்தலாம். இங்கும் ஓர் அழகு தோன்றுகிறது. ஒவ்வொரு தொடரிலும் ஒரு பின்னம் அதற்கு முன்னுள்ள இரண்டு பின்னங்களின் பகுதியெண்களையும் தொகுதியெண்களையும் முறையே கூட்டுவதால் பெறப்படும். ஓரிலைக்கும் அதற்குப் பக்கத்திலுள்ள அடுத்த இலைக்கும் உள்ள தூரம் விரிவு (Divergence) எனப்படும். விரிவை ஒரு கோணத்தால் குறிக்கலாம். அந்தக் கோணம் இந்த இரண்டு இலைகளும் அமைந்துள்ள செங்குத்துத் தளங்கள் சேர்வதால் உண்டாவதாகும். ஒரு சுற்றுக்கு 360° ஆதலால், மேற்குறித்த பின்னங்களால் 360 ஐப் பெருக்கி இந்தக் கோணத்தைப் பெறலாம்.புல், கோரை, வெண்டைகளில் இந்தக் கோணம் முறையே 180°, 120°, 144° ஆகும். விரிவைக் குறிக்கும் கோணம் விரிவுக்கோணம் (Angle of Divergence) எனப்படும். ஆதலால் இலையடுக்கைக் காட்டும் எண்ணே விரிவைக் குறிக்கும்.

இலைக் குட்டிமம்: தரையிலும், சுவரிலும், ஜன்னலிலும், அளவினாலும், வடிவினாலும், நிறத்தினாலும் வேறுபட்ட கற்கள், பீங்கான் ஓடுகள், கண்ணாடித்

இலைக் குட்டிமம்
குப்பைமேனி

துண்டுகள் ஆகியவற்றை ஏதோ ஒரு சித்திரம் தோன்றும்படியாக அமைப்பதுண்டு. அதைக் குட்டிமம் (Mosaic) என்பார்கள். அப்படியே ஒரு கிளையிலுள்ள இலைகளும் சித்திரமாக அமைந்திருக்கின்றன. அதை இலைக்குட்டிமம் (Leaf mosaic) என்பார்கள். குப்பைமேனி, மணித்தக்காளி, மாமரம் முதலியவற்றில் இந்த அமைப்பைத் தெளிவாகக் காணலாம். சிறியவும் பெரியவும், இளையவும் முதிர்ந்தவுமான இலைகள் ஒரு கிளையின் நுனியில் ஒன்றையொன்று மறைக்காமலும், இடைவெளி உண்டாகாமலும், சூரிய வெளிச்சம் வீணாகப் போகாமலும் அமைந்திருக்கும் அழகு ஆச்சரியமாக இருக்கும். குப்பைமேனி, மா, கொடியத்தி, அந்திமல்லிகை ஆகிய செடிகளின் இலைக்குட்டிமத்தைப் படத்திற் காணலாம்.

இலையின் வண்ணமும் வடிவமும் கண்ணையும் மனத் தையும் கவரும் பண்புள்ளவை. இலை பழுப்பாகி விழும்போதும் அதன் நிறம் அழகாக இருக்கின்றது. அதன் தொழில் உலகிலுள்ள உயிர்களுக்கெல்லாம் ஆதாரமான அத்துணை மாண்புடையது. உயிர்கள் வாழ்ந்திருப்பதற்கு உணவு வேண்டும். எல்லாயிர்களுக்கும் வேண்டிய உணவுப்பொருளை ஆக்கும் தொழிற்சாலை பச்சிலையே. பச்சிலையில்லாவிட்டால் மனிதனோ, விலங்கோ, தாவரமோ எல்லாம் பசியால் வருந்தும்

இலைக் குட்டிமம்
1. மாமரம். 2. கொடியத்தி (பைக்கஸ் ரீப்பென்ஸ்). 3. அந்திமல்லிகை.

உயிரே நிலைக்கமுடியாது. மேலே சொல்லிவந்த வடிவங்களெல்லாம் பச்சிலையானது உணவைச் செய்வதற்கு ஏற்றவாறு அமைந்துள்ளவையே. பச்சை நிறம் அந்தத் தொழிலுக்கு இன்றியமையாதது.

இலையானது உணவை ஆக்கும் செயலைச் சுருக்கமாகவும் பிண்டமாகவும் பின்வருமாறு சொல்லலாம். இலையின்மேல் சூரியனுடைய ஒளி விழும்போது இலையின் அணுக்களிலுள்ள பச்சையம் அல்லது குளோரோவில் என்னும் பச்சை நிறமுள்ள பொருள் ஒளியை உட்கவர்ந்து ஒளிச் சக்தியை ரசாயனச் சக்தியாக மாற்றும். காற்றிலுள்ள கார்பன் டையாக்சைடு இலைப்பரப்பிலுள்ள சிறு தொளைகள் வழியாக இலைக்குள் புகும். நிலத்திலிருந்து நீரானது வேரால் உறிஞ்சப்பட்டுத் தண்டிலும் இலையிலுமுள்ள குழாய்கள் வழியாக இலைக்கு வந்து சேரும். ரசாயனச் சக்தியின் உதவியினாலே இலையணுக்களிலே கார்பன் டையாக்சைடு கரியாகவும் ஆக்சிஜனாகவும் பகுக்கப்படும். ஆக்சிஜன் வெளிவந்துவிடும். கரியும் நீரும் கூடும். அதனால் சர்க்கரை உண்டாகும். பிறகு மாப் பொருள் முதலியவையும் உண்டாகும். இந்த ரசாயனச் செய்கைகளுக்கெல்லாம் வேண்டிய சக்தி ஒளிச் சக்தியின் மாற்றத்தால் உண்டாகும் ரசாயனச் சக்தியே. ஒளியின் உதவியால் கார்பன் டையாக்சைடு நீர் என்பவற்றின் சேர்க்கையால் உணவு உண்டாவதால் இந்தத் தொழில் ஒளிச்சேர்க்கை (த.க ) எனப்படும். இதுவே இலையின் முதன்மையான தொழில்.

இந்தத் தொழில் செம்மையாக நடைபெறுவதற்காகவே இலையானது பச்சையாகவும் மெல்லியதாகவும் தட்டையாகவும் அகலமாகவும் இருக்கிறது. மிகக் குறைந்த அளவுள்ள பொருளைக் கொண்டு மிகவும் அகன்ற பரப்புள்ள உறுப்பை அமைக்கவேண்டுமானால் அது காகிதம் அல்லது அப்பளம்போலத் தட்டையாகவும் மெல்லியதாகவும் இருக்கவேண்டும். மரமானது உயர்ந்தும், அதன் கிளைகள் பல திசைகளிலும் படர்ந்தும் இருப்பது இலைகளின்மேல் நிரம்ப சூரிய வெளிச்சம் படுவதற்கும், அவற்றைச் சுற்றிலும் காற்று நன்றாக உதவுவதற்கும் உதவுகிறது.

இலையின் வேறு தொழில்கள்: இதுவரையில் இலையின் தன்மையும் உருவமும், அது கிளையில் பொருந்தி