பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலை

127

இலை

யிருக்கும் ஒழுங்கும் ஆகிய இவையெல்லாம் அதன் முதன்மையான வேலையாகிய உணவாக்கலுக்குத் தகவமைந்தனவாகும். அந்த வேலைக்கு வேண்டிய சக்தியைச் சூரியனுடைய ஒளியிலிருந்து பெறவேண்டுமாகையால் இலைகள் ஒன்றையொன்று மறைக்காமல் எவ்வளவு ஒளியைப் பெறலாமோ அவ்வளவையும் பெறுவதற்கு ஏற்றவாறு இந்த அமைப்புக்களெல்லாம் இருக்கின்றன என்று பார்த்தோம். இலை இன்னும் வேறு சில முக்கியமான தொழில்களையும் செய்கின்றது. மூச்சுவிடுதல், ஒளிச்சேர்க்கை முதலிய உடலியற் செயல்களால் காற்றுக்கும் தாவரத்துக்கும் இடையே நிகழும் வாயுக்களின் போக்குவரவு' பேரளவிற்கு இலை வழியாகவே நடைபெறுகின்றது. இலை மரத்தின் நுரையீரல் என்னவும் தகும். வேரிலிருந்து செடிக்குள் நீர் மிகுதியாக உட்கொள்ளப்படுகின்றது. மிகுதியான நீர் ஆவி வடிவில் இலை வழியாக வெளியே போகும். இது 'நீராவிப்போக்கு ' (Transpiration) என்பது. இலைகள் உணவுப் பொருள்களையும் நீரையும் சேமித்து வைக்கும் உறுப்புக்களாக இருக்கின்றன. வெண்காயம், பூண்டு, சோற்றுக் கற்றாழை, பசளை, பருப்புக்கீரை முதலியவற்றில் 'உணவுச் சேமிப்பு' நன்றாகத் தெரியும். இலைகள் 'காப்பு' உறுப்புக்களாகவும் இருக்கின்றன. இவை இவற்றின் கக்கத்தில் இருக்கும் குருத்துக்களைக் காக்கின்றன. இந்தக் காப்புத்தொழில் இலையடிகளும் காம்புகளும் இலையடிச்செதில்களும் செய்வதற்குத் தக்கவாறு பல செடிகளில் அமைந்திருக்கின்றன. சில இலைகளில் புதிய குருத்துக்கள் எழுகின்றன (இரணகள்ளி). அவற்றிலிருந்து புதிய செடிகள். உண்டாகும். ஆகவே சில இலைகள் 'இனப்பெருக்க உறுப்புக்களாகவும் இருக்கின்றன. (பார்க்க: இனப்பெருக்கம்- தாவர). இவ்வாறு இலைகள் பல்வேறு தொழில்களைச் செய்துவருகின்றன.

இலையடி தண்டோடு சேர்ந்திருக்கும் இலையின் பாகமாகும். இது சிலவற்றில் மிகக்சிறிய பகுதியாக இருக்கும். மற்றும் சிலவற்றில் உறைபோல அகன்று, தண்டைச் சுற்றியிருக்கும் என மேலே சொல்லப்பட்டது. இந்த அமைப்பு ஒற்றை விதையிலைத் தாவரங்களில் பெரும்பாலும் காண்பது.

பட்டாணி இலை
உறுப்புக்கள் இலையடிச் செதில்கள். நுனியிலுள்ள சிற்றிலைகள் பற்றுக் கம்பிகளாக மாறியுள்ளன.

இரட்டைவிதையிலைத் தாவரங்களில் இலையடியிலிருந்து பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு சிறிய இலை போன்ற உறுப்புக்கள் வளர்வதுண்டு. அவை இலையடிச்செதில்கள் (Stipules) எனப்படும். அவரை முதலிய முதிரை (Pulses) வகைகளிலும், புளி, தூங்குமூஞ்சிமரம் என்னும் மழை மரம், தொட்டால்சிணுங்கி முதலியவற்றிலும் இலையடியானது உப்பிக்கொண்டிருக்கும். அதற்கு அதைப்புக் காம்பணை (Pulvinus) என்று பெயர். இந்தக் காம்பணையின் அணுக்களில் ஏற்படும் நீர்வீக்க மாறுபாடுகளால் இவற்றின் இலைகள் நிமிர்ந்து அகன்று நிற்பதும், உறங்குவதுபோல மடிந்து தொங்குவதும் நிகழ்கின்றன.

இலையடிச்செதில் பட்டாணிபோன்ற சில செடிகளில் பெரிதாக இருக்கும். இலையைப்போலவே ஒளிச்சேர்க்கை செய்யும். ஆயினும் பெரும்பாலானவற்றில் சிறிதாகவே இருக்கும். சிலவற்றில் (ஆல், அரசு) இது குருத்துக்களைப் போர்த்துக்கொண்டு காப்பாற்றும்; பற்றுக் கம்பியாக (ஸ்மைலாக்ஸ்) மாறிக் கொடி ஏறுவதற்கு உதவும். கருவேல மரம் போன்றவற்றில் முள்ளாகமாறி மரத்தைப் பாதுகாக்கும்.

இலைக்காம்பு தாவரங்களில் உணவை ஆக்கும் முக்கிய பாகமான இலையின் அலகைத் தாங்கியும், சூரிய வெளிச்சம் நன்றாக விழும்படி அதை ஏந்திப் பிடித்தும், அதைத் தண்டோடு இணைத்தும் நிற்கும் மெல்லியதண்டு போன்ற உறுப்பாகும். இதன் வழியாகவே நீரும் மற்றப் பொருள்களும் தண்டிலிருந்து அலகுக்கும், அலகிலிருந்து தண்டுக்கும் போய் வருவதற்கான குழாய் முடிச்சுக்கள் செல்கின்றன. பல ஒற்றைவிதையிலைத் தாவரங்களிலும், சில இரட்டைவிதையிலைத் தாவரங்களிலும் காம்பு இருப்பதில்லை. இலைக்காம்புகள் பல அளவுக்கு நீண்டும், பலவிதமாக வளைந்தும் திரும்பியும் இலையலகுகளின் மேற்பாகம் சூரிய வெளிச்சம் வரும் திசையை நோக்கியும், ஒன்றன் நிழல் ஒன்றன்மேல் கூடியவரையில் விழாதபடியும் நிற்கச் செய்கின்றன. சில செடிகளில் (உதா: கிளெமாட்டிஸ்) இவை பற்றுக்கம்பிபோல் கொடி மேலே ஏறுவதற்கு உதவுகிறது. சில செடிகளில் இவை இலையலகுபோல் தட்டையாகி அலகின் தொழிலைச் செய்யும். அந்தத் தாவரங்களில் அலகு வளர்வதில்லை. பாலைத் தன்மையுள்ள சில ஆஸ்திரேலிய வேல மரங்களில் இந்தமாதிரி இலைக்காம்பின் மாறுபாடு காணப்படுகிறது. இந்த மாறுபாடு தட்டைக் காம்பு (Phyllode) எனப்படும்.

இலை நரம்புகள் : இலையின் அலகில் பச்சை நிறமான பகுதிகளுக்கு இடையிலே பசுமஞ்சள் நிறமான கோடுகள் பெரிதும் சிறிதும் நெடுக்கிலும் குறுக்கிலும் கிளைகளாகப் பிரிந்து, வலை பின்னினதுபோல ஓடும். இவை இலை நரம்புகள் எனப்படும். இவை எல்லாம் நுண்ணிய குழாய்களின் கற்றைகள். தண்டிலிருந்து வரும் குழாய் முடிச்சுக்கள் இலைக்காம்பினுள்ளே ஓடி அலகின் அடியிற் புகுந்து, பலவாறு பிரிந்து அமையும். இந்த நரம்பமைப்பின் வேறுபாடுகளெல்லாம் மேலே விளக்கப்பட்டுள்ளன. இலை நரம்புகளில் இரண்டு விதமான குழாய்கள் உண்டு. மேற்புறமாக நீரை வேரிலிருந்து இலைக்குக் கொண்டுவரும் மரக்குழாய் என்னும் நீர்க் குழாய்களும், கீழ்ப்புறமாக இவையின் அணுக்களால் ஆக்கப்பட்ட உணவுப்பொருள்களை இலையிலிருந்து காம்பு வழியாகத் தண்டுக்குக் கொண்டு போகும் சல்லடைக் குழாய்களும் இருக்கும். மிக நுண்மையான நரம்புப் பிரிவிலும் இந்த இரண்டு குழாய்ப் பகுதிகளும் இருக்கும்.

இலை நரம்புகள் நீரையும் உணவையும் கடத்தும் குழாய்களாக இருப்பதுடன். பிராணிகளிலுள்ள எலும்புச் சட்டகம்போல அவை மென்மையான பச்சிலைத் திசுவைத் தாங்கும் உறுதியான சட்டகமாகவும் பயன்படுகின்றன. அதனால் இலைப்பொருள் சரிந்து குலைந்து விழாமல், விரிந்து அகன்று நிற்க முடிகிறது.

இலை நரம்புகளின் அமைப்பும் மாதிரியும் வெவ்வேறு தாவரங்களில் லெவ்வேறாக இருக்கின்றன. தாவரங்களைப் பாகுபாடு செய்வதில் இந்தக் கூறுகளும் உதவுகின்றன. உதாரணமாக ஒற்றைவிதையிலைத் தாவரங்களில் நரம்புகள் ஒரு போகாகவும், இரட்டை விதை