பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இபன் பதூதா

2

இபான் சாதியார்

நூற்றாண்டில் ஸ்பெயினில் குடியேறினார். அப்போது தமது பெயரைக் கால்தூன் என்று மாற்றிக் கொண்டார். இவ்வமிசத்தினர் தென் ஸ்பெயினிலிருந்து வெளியேறி, இறுதியில் டூனிஸில் வாழ்ந்து வந்தபோது, 1332, மே 27ஆம் நாள் இபன் கால்தூன் பிறந்தார். தமது கல்வியை முடித்துக் கொண்டபின், இபன் கால்தூன் கல்தான் இப்ராஹீமிடம் கையெழுத்தாளராக வேலைக்கமர்ந்தார். பார்குக் சுல்தான் காலத்தில் இவர் முதல் நீதிபதி (காதி) யாக உயர்த்தப்பட்டார்; பிறகு, வட ஆப்பிரிக்காவில் பல பெரிய வேலைகளைப் பார்த்துவந்தார். ஆனால் அரசியல் சூழ்ச்சிகளை வெறுத்த இவர் மகிழ்ச்சியோடு உத்தியோகத் தளைகளைக் கழற்றி எறிந்தார். பிறகு மெக்காவிற்கு யாத்திரை சென்று, அங்கிருந்து பல நாடுகளிலும் பிரயாணம் செய்தார். கடைசியில் கைரோவிற்கு வந்து சேர்ந்தார். அங்கும் இவருக்கு முதல் நீதிபதி வேலை கிடைத்தது. இவர் 1406-ன் தாம் காலமாகும் வரையில் அவ்வேலையில் இருந்து வந்தார்.

அரசியல் தலைவர்களோடு பழகி இவர் பெற்றிருந்த உலகியல் அறிவும், அரசாங்கங்களின் இயல்பைப் பற்றி இவருக்கிருந்து ஞானமும், இவர் எழுதியுள்ள கிதாப் அல் இபார் என்னும் வரலாற்று நூலால் அறியக் கிடக்கின்றன. இந்நூலை இவர் ஏழு பாகங்களாகப் பிரித்துள்ளார்; இந்நூலில் கூறப்படும் வரலாறு இஸ்லாம் காலத்துக்கு முன்னிருந்து தொடங்கி, செல்ஜுக்குகள் என்னும் துருக்கி அரச வமிசத்தினர் காலம்வரை, 13ஆம் நூற்றாண்டின் இறுதியோடு முடிகிறது. இதில் முக்கியமாக ஸ்பெயினிலும் ஆப்பிரிக்காவிலும் இருந்த அராபியரது வரலாறு எழுதியிருக்கிறது. இந்நூலின் தொடக்கத்தில் 'முகத்தமா' என்னும் முன்னுரையில் இவர் வரலாற்றுத் தத்துவத்தைப் பற்றித் தாம் கொண்டுள்ள கருத்தை வெளியிட்டிருக்கிறார். ஒரு வரலாற்றாசிரியன் கடைப்பிடிக்க வேண்டிய கொள்கைகளையும் விரித்துக் கூறியுள்ளார்.

வரலாற்று ஆராய்ச்சி ஒரு தனி இயலாகக் கருதப்பட வேண்டும் என்னும் கருத்தை இவரே முதன் முதல் கூறியவர். "வரலாற்று இயலின் தத்துவம் உயர்ந்தது; அது போதனை நிறைந்தது; அதன் நோக்கம் சிறந்தது" என்று இவர் கூறுகிறார். மனித சமூக இயல் முழுவதையுமே இவர் தமது ஆராய்ச்சிக்கேற்ற பொருளாகக் கொண்டார். இவர் நூல் பிரெஞ்சிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. "மக்களுடைய பண்புகள் தட்ப வெப்ப வேறுபாடுகளுக்கு ஏற்ப மாறுதலடைகின்றன ; மக்களுக்குள் கருத்தொருமையும், குறிக்கோள் ஒருமையும். நாட்டுப்பற்றும் இருத்தலோடு, நாட்டில் நல்ல பொருளாதாரமும் நிருவாக நேர்மையும் பொருந்தியிருந்தலே இராச்சியங்குகளுக்கு இன்றியமையாதது. இராச்சியங்கள் பெரும்பாலும் மூன்று தலைமுறைகளுக்கே வலுத்திருக்கும்

முடியாட்சியில் குறைபாடிருப்பினும் அது தகாததெனக்கொள்ளத் தக்கதன்று" என்பவை இவருடைய முக்கியமான அரசியல் கருத்துக்கள்.

சை. அ. வா. பு.

இபன் பதூதா (1304-1378) மொராக்கோவிதுள்ள டாஞ்சியரைச் சார்ந்தவர். இவர் சட்டத்தில் நல்ல பயிற்சி பெற்றவர். 1325-ல் உலகப் பிரயாணம் தொடங்கினார். வட ஆப்பிரிக்கா, அரேபியா, பாரசீகம் முதலிய இடங்களைச் சுற்றிவிட்டு, 1333-ல் இந்தியாவிற்கு வந்தார் : 1334-ல் டெல்லியை யடைந்தார். எட்டாண்டுக் காலம் இவர் டெல்லியில் காஜியாக இருந்தார். முகம்மது பின் துக்ளக்கின் வெறுப்பிற்கு ஆளாகிச் சிறையிடப்பட்ட பதூதா 1342-ல் அதே சுல்தானின் தூதராகச் சீனாவிற்குச் சென்றார். இலங்கை, மதுரை முதலிய இடங்களைச் சுற்றிவிட்டு 1349-ல் தம் சொந்த ஊருக்குச் சென்றார். 1355-ல் ஒரு வரலாற்று நூலை எழுதி முடித்தார். அதில் குத்புதீன் ஐபெக் காலத்திலிருந்து முகம்மது பின் துக்ளக் காலம்வரையில் டெல்லியின் வரலாற்றை எழுதியுள்ளார். மதுரை சுல்தான்களைப் பற்றியும் அதில் எழுதியுள்ளார். இந்திய வரலாற்றிற்கு உதவும் பிற நாட்டு வரலாற்றாசிரியர்களுடைய நூல்களில் இவர் எழுதியதும் ஒன்று.

தே. வெ. ம.

இபாமினாண்டாஸ் (Epaminondas, கி.மு. 418-362): இவர் தீப்ஸ் நகரத்தில் விளங்கிய தளகர்த்தருள் சிறந்தவர். ஸ்பார்ட்டாவின் ஆதிக்கத்திலிருந்து தம் நகரம் விடுதலை அடைவதற்கு உதவி செய்தார். லியூக்ட்ரா போரில் தம் மக்களுக்காகப் போர் செய்து, எதிரிகளின் பெரும் படையைச் சிதறடித்தார். பெலப்பாணிசஸ் நகரத்தைக் கைப்பற்றி, ஸ்பார்ட்டாவை ஒடுக்குவதற்காகப் பல புதிய நகரங்களை அமைத்தார். கி.மு.362-ல் மான்டீனியாவில் நடந்த போரில் ஆதன்ஸ், ஸ்பார்ட்டா படைகளை முறியடித்தார். எனினும் அப் போரில் இவர் மரணமடைந்தார். இவர் சிறந்த இராஜதந்திர நிபுணர். நேர்மையும் தூய்மையும் உடையவர். பண்பாடும் நாவன்மையும் மிக உடையவர்.

இபான் சாதியார் (Iban) : கடல் டயாக் சாதியார் (Sea Diaks) என்றும் சொல்லப்படும் இவர்கள் போர்னியோத் தீவின் வடக்கிலும் நடுவிலுமுள்ள முக்கியமான ஆறுகளின் கரைகளில் வாழ்கிறார்கள். பல பகுதிகளில் சிதறுண்டு வாழ்ந்த போதிலும் இவர்கள் அனைவரும் மலாய் மொழியோடு தொடர்புடையதான ஒரே மொழியையே பேசுகிறார்கள். இவர்களுடைய பண்பாடும் ஒன்றே. போர்னியோ மக்களுள் பெரும்பாலோரைப் போலவே இவர்களும் பெரும்பாலும் புன்செயில் விளையும் நெல்லையே பயிரிடுகிறார்கள். இவர்கள் வேட்டையாடுவார்கள்; மீன் பிடிப்பார்கள்; காடுகளில் போய்ச் சவ்வரிசி, கர்ப்பூரம் போன்ற பொருள்களைக் கொண்டுவந்து விற்பார்கள். பொதுவாக இவர்கள் திறமையாகத் தொழில் செய்யத் தெரியாதவர்கள். ஆயினும் இபான் பெண்கள் மென்மையான துணி நெய்வார்கள். முன்னாளில் கடற்கொள்ளையிட்டு பண்டங்களையும் மக்கள் தலைகளையும் கொண்டு வருவார்கள். அப்படிச் செய்வது இவர்கள் சமூகத்திலே பெருமையாகக் கருதப்பட்டு வந்தது. ஆனால் இவ்வாறு இவர்கள் தலைவேட்டையாடுவதால் மற்றச் சாதியார்கள் இவர்களுடன் உறவு வைத்துக்கொள்வதில்லை.

ஒவ்வோர் ஊரும் ஒரு தனிச் சமூகம். நீண்ட வீடுகளில் பல குடும்பங்கள் வாழும் நிலத்தின் வளம் குன்றியதும் வேறிடம் சென்று ஊரை அமைத்துக் கொள்வார்கள். ஒவ்வொரு வீட்டுத் தலைவனும் நியாயம் வழங்குவான்; சமூகக் காரியங்களை நடத்துவிப்பான். ஆனால் ஒரு வீட்டார் மற்றொரு வீட்டார்மீது ஆதிக்கம் செலுத்த முடியாது. சமயக் கொள்கைகளும் அனுஷ்டானங்களும் பொதுமக்கள் கருத்தை உருவாக்க ஓரளவு பயன்பட்டபோதிலும், அவை அடிக்கடி மாறும் தன்மையனவாகவே காணப்படுகின்றன. இவர்கள் தேவதைகளின் உதவியைத் தேடுவார்கள். பவி வடிவங்களைத் தாங்கும் ஒரு பரம்பொருளாகிய கடவுளைத் தொழுவார்கள். தலைகளைக் கொய்யும் வழக்கத்தை மட்டும் விட்டுவிட்டுப் பார்த்தால், இபானருண்டயா