பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முகவுரை

லைக்களஞ்சியத்தின் முதல் தொகுதியைத் தமிழ் மக்கள் மிகுந்த ஆர்வத்துடனும் அன்புடனும் வரவேற்கிறார்கள். எங்கள் மனமார்ந்த நன்றியை அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறோம். சில நண்பர்கள் சில யோசனைகளையும் கூறியிருக்கிறார்கள். அவர்களுக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகிறோம். அவர்கள் யோசனைகள் அனைத்தும் ஆராய்ந்து பயன்படுத்திக்கொள்ளப்பெறுகின்றன. கலைக்களஞ்சியம் தமிழகத்தில் மட்டுமன்றி, பம்பாய், டெல்லி, கல்கத்தா,மலேயா, இலங்கை முதலிய இடங்களில் உள்ள தமிழர்களாலும் வரவேற்கப்பட்டிருக்கிறது: தமிழர்களால் மாத்திரமல்லாமல் மற்றவர்களாலும் பாராட்டப்பெற்றிருக்கிறது. இந்திய அரசாங்கத்தார் வாஷிங்டன், நியூயார்க்கு, லண்டன், ரோம், மாஸ்கோ, பீக்கிங் முதலிய இடங்களில் உள்ள தம் தூது நிலைய நூல் நிலையங்களுக்கு இதை வாங்கியுள்ளார்கள். இந்தியாவிலுள்ள பிற மொழிகளிலும் இதுபோல் கலைக்களஞ்சியம் வெளியிடவேண்டும் என்ற எண்ணம் இதன் மூலம் அம்மொழியாளர்களிடமும் உண்டாயிருப்பது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. இப்பாராட்டுக்களுக்குக் காரணம் தமிழ் மொழியின் பெருமையும் தமிழ்த்தாயின் கருணையுமாகும். ஆகையால் அப்பாராட்டுக்கள் தமிழன்னையின் திருவடிகளுக்கே உரியன.

இரண்டாம் தொகுதி இப்பொழுது வெளியாகிறது. தமிழ் மக்கள் இதையும் வரவேற்று ஆதரிப்பார்கள் என்பதில் ஐயமில்லை. இம்மகத்தான பணியில் நிறைவு காண்பது அரிதென்று முதல் தொகுதியின் முகவுரையில் எழுதியுள்ளோம். ஒவ்வொரு நாளும் அதன் உண்மையை உணர்கிறோம். அறிவின் எல்லை விரிந்து வருகிறது. மொழியின் வளர்ச்சிக்கு எல்லையில்லை. அண்மையில் வெளியான ஆங்கிலக் கலைக்களஞ்சியத்தின் பதினாலாவது பதிப்பிற்கு ஆண்டுதோறும் திருத்தங்களும், விளக்கங்களும், பிற்சேர்க்கைகளும் வந்து கொண்டே யிருக்கின்றனவெனில், நம் புது முயற்சியில் காலப்போக்கில் எவ்வளவு அபிவிருத்தி செய்யவேண்டியிருக்கும் என்பதுபற்றிச் சொல்லத் தேவையில்லை. . ஆரம்பத்திலிருந்து தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் செயலாளர்களில் ஒருவராக இருந்து அண்மையில் காலஞ்சென்ற கல்கி ஆசிரியர் திரு. ரா. கிருஷ்ணமூர்த்தி அவர்களைத் தமிழ் உலகம் நன்கு அறியும். அவருக்கிருந்த தமிழன்பு மிகப் பெரிது. அவர் தமிழுக்குச் செய்துள்ள சேவை மறக்க முடியாதது. அவர் மறைவால் தமிழகம் ஓர் அரிய அன்பரை இழந்தது. தமிழ் வளர்ச்சிக் கழகமும் தனது வலக்கரம்போல் இருந்த ஒருவரை இழந்திருக்கிறது. தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் செயலாளராக இருந்து, அதன் வளர்ச்சிக்கும் கலைக்களஞ்சியப் பணிக்கும் அவர் செய்த உதவி அளவில்லாதது. எனவே இந்தத் தொகுதி அவர் நினைவாக வெளியிடப்பெறுகிறது.

தமிழ் மக்கள் ஆதரவே கலைக்களஞ்சியத்தை உருவாக்கும் முயற்சிக்கு அடிப்படையான சக்தியாகும். இதுவரையிற் காட்டிய ஆதரவைப்போலவே இன்னும் காட்டி அவர்கள் இத்தொகுதியையும் முழுமனதுடன் வரவேற்பார்கள் என்று நம்புகிறோம்.

சென்னை
மன்மத, சித்திரை 1
தி. சு. அவினாசிலிங்கம்