பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராமசாமி சிவன்

65

இராமநாதன்


இராமசாமி சிவன் (19ஆம் நூ.) தமிழிசைப் பாவலர். புகழ்பெற்ற இசைப் புலவராக விளங்கிய மகா வைத்தியநாத அய்யரின் (1844-1893) தமையனார். தஞ்சை மாவட்டத்திலுள்ள வையைச்சேரியில் வாழ்ந்த துரைசாமி அய்யரின் புதல்வர். இவருடைய தந்தையே இவருக்கு முதலில் இசைப் பயிற்சி அளித்தார். இதன்பின் இவர் மாநோன்புச்சாவடி வேங்கட சுப்பய்யரிடம் இசை பயின்றார். இவர் தமிழிலும் புலமை பெற்றவர். இவரது பெரிய புராணக் கீர்த்தனைகள் முக்கியமானவை.

இராமசாமி தீட்சிதர்(1735-1817) இசைப் பாட்டாசிரியர். முத்துசாமி தீட்சிதரின் தந்தையார். இவர் காஞ்சீபுரத்தில் பிறந்து, 7ஆம் வயது வரை அங்கே இருந்தார். பின்னர் அங்கிருந்து திருவிடை மருதூரின் அருகே உள்ள கோவிந்தபுரத்தை அடைந்து, அங்கு வடமொழியையும் தெலுங்கையும் கற்றார். பிறகு, தஞ்சை சென்று இசை பயின்றார். வீணையிலும் நல்ல தேர்ச்சி பெற்றார். இவரது இசைப் புலமையை உணர்ந்த தஞ்சை அரசர் இவரைக் கவுரவித்தார். பிற்காலத்தில் மணலி முத்துகிருஷ்ண முதலியார் இவரை ஆதரித்தார். இவர் பல இராகமாலிகைகளையும். சவுக்க வர்ணங்களையும், தாள வர்ணங்களையும், கீர்த்தனைகளையும் இயற்றியுள்ளார். ஹம்சத்வனி இராகத்தை அமைத்து, அதன் சஞ்சாரங்களை விளக்க இவர் ஒரு பிரபந்தம் எழுதினார்.

இராமசாமிப் பிள்ளை இராமநாதபுரத்தினர்; ஆறுமுக நாவலரின் நண்பர். ஏகம்பரரந்தாதி, திருவிளையாடற் புராணம் முதற்காண்டம் முதலியவற்றுக்கு உரை எழுதியுள்ளார்.

இராமதாசர் (1608-1681): இவர் இயற் பெயர் நாராயணர். இவர் மகாராஷ்டிரத்திலுள்ள ஜம்பு என்னும் ஊரில் பிறந்தவர். பஞ்சவடியில் 12 ஆண்டுகள் இராம பூசை செய்திருந்து, பிறகு 12 ஆண்டுகள் இந்தியா முழுவதும் பிரயாணம் செய்து வந்தார் ; சத்தாராவில் வந்து தங்கி, இராமதாச மதத்தை நிறுவினார். இவர் பல மடங்கள் கட்டினார். மாருதிக்குப் பல கோவில்கள் எடுத்தார். இவருடைய நூல்களுள் சிறந்தது தசபோதம் என்பது. இது சமயம், தத்துவம், அரசியல் முதலிய பல பொருள்களைப்பற்றி இருபது அதிகாரங்களில் கூறுகிறது. இராமாயணப் பகுதிகளைப் பாடியிருப்பதுடன் பல அபங்கங்களும் சிறு காவியங்களும் இயற்றியுள்ளார். இவர் மகாராஷ்டிர இராச்சியத்தை நிறுவிய சிவாஜியின் குரு சிவாஜி தமது இராச்சியத்தைக் குருவான இராமதாசருக்குக் காணிக்கையாகக் கொடுத்துவிட்டுத் தாம் அவருடைய பிரதிநிதியாக ஆட்சி புரிந்து வந்தார் என்று ஒரு வரலாறு உண்டு. இராமதாசருடைய தொடர்பால் சிவாஜி காவிநிறக் கொடியை மேற்கொண்டு, 'ராம், ராம்' என்று கூறி வணங்கும் முறையை ஏற்படுத்தினார். தசபோதத்தின் அரசியல் கருத்துக்கள் சிவாஜியின் செயல்களைப் பெரிதும் ஊக்கின. சாம்பாஜி பட்டமெய்துதற்கு முன்பு (1681) இராமதாசரிடம் சென்று அவரை முடிசூட்டு விழாவிற்கு அழைத்தபோது, அவர் அவனுடைய கொடுஞ் செயல்களை அவனுக்கு நினைவூட்டித் தாம் வர இயலாது என்று மறுத்துவிட்டார். இந்நிகழ்ச்சி இராமதாசரது பெருமையைக் குறிக்கும்.

இராமதாசர், பத்திராசலம்: இவர் ஆந்திர நாட்டு இசைப்பாட்டாசிரியர். இவருடைய தந்தையின் பெயர் லிங்கண்ணா. பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த தானேஷா என்ற கோல்கொண்டா நவாபு இவரைப் பத்திராசலத்தின் தாசில்தாராக நியமித்தார். தீவிர வைணவரான இவர் அவ்வூரில் இருந்த இராமபிரான் மேல் மீகுந்த பக்திகொண்டு, அவருக்குக் கோயில் கட்ட அரசாங்கத்தின் வரிப் பணத்திலிருந்து ஆறு இலட்ச ரூபாய்வரை கையாடி விட்டார். இக்குற்றத்திற்காக இவர் சிறையிலடைக்கப்பட்டார். இராமரும் இலட்சுமணரும் மனித உருவில் தோன்றி, அரசாங்கத்திற்குச் சேரவேண்டிய பணத்தைக் கட்டி இவரை விடுதலை செய்தனர் என்று ஒரு கதையுள்ளது. சிறையில் இருந்த காலத்தில் இவர் இராமரைத் துதித்து, நெஞ்சை அள்ளும் பாடல்கள் பல பாடினார். இனிமையான இவருடைய பாடல்கள் தென்னாடு முழுவதும் பாடப்பெறுகின்றன.

இராமநாதபுரம் என்பது திருநெல்வேலி, மதுரை, திருச்சி, தஞ்சை மாவட்டங்களுக்கிடையே அமைந்துள்ள மாவட்டத்தின் பெயர். இதிலுள்ள இராமேசுவரம் பேர்பெற்ற சிவத்தலம். இதன் தலைநகர அலுவலகங்கள் மதுரை நகரில் உள்ளன. இராமநாதபுரப்பட்டணம் ரெயில்வே நிலையமுடையது. மானாமதுரையிலிருந்து இராமேசுவரம் செல்லும் ரெயில் பாதையில் அமைந்துள்ளது. இது அண்மைவரை சேதுபதிகளின் தலைநகரமா யிருந்தது. மாவட்ட மக் 20.80.519 (1951) நகர மக்: 1.63,997 (1951).

இராமநாதபுரம் மாவட்டம்

இராமநாதன் : இவர் 'வேணாடு மருதூர்க் கவி' என்று திருநெல்வேலியைச் சார்ந்த திருப்புடைமருதூர்ச் சிவாலயத்தே கோமதியம்மன் திருமுன் மண்டபத்திலுள்ள கல்வெட்டுக் கூறுகிறது. மேலும் 16ஆம் நூற்றாண்டினர் என்றும், கிருப்புடைமருதூரிலே இவருக்கு நிலமும் மனையும்

9