பக்கம்:கலைக்களஞ்சியம் 4.pdf/387

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒலி: இது தமிழ்‌ நெடுங்கணக்கில்‌ 'க' என்பதின்‌ பின்‌ வரும்‌ மெய்யெழுத்தாம்‌. 'க' என்பது வல்லெழுத்தானால்‌ அதற்கினமான மெல்லெழுத்து 'ங' என்பதாம்‌. இதனை ஒலிக்கும்போது மெல்லண்ணத்தை, அதற்கு நேருள்ள அடி நா ஒற்றும்‌; குரல்வளை இதழ்கள்‌ துடிக்க ஒலிப்பெழும்‌; வாயிலிருந்து மூக்கிற்குச்‌ செல்‌லும்‌ வழியினை மெல்லண்ணம்‌ மூடி நிற்கும்‌ நிலை இங்‌கில்லை; ஆதலின்‌ ஒலிவடிவாக வரும்‌ மூச்சு மூக்கின் வழியாகவும்‌ வெளிவரும்‌; எனவே இது மூக்கொலி எழுத்தாம்‌.

'ங' என்பது அகரச்சாரியையோடு வந்து 'ங்‌' என்ற எழுத்தைக்‌ குறிக்கும்‌. பண்டைய நாளில்‌ 'ங்‌' என்ற மெய்யெழுத்தே யன்றி 'ங' முதலிய உயிர்மெய்‌ எழுத்‌துக்கள்‌ சொற்களில்‌ வழங்கவில்லை. 'ஙப்போல்‌ வளை' என்‌ற ஆத்திசூடியைக்‌ காண்க. ஆதலின்‌, ககரத்தின்‌ முன்வரும்‌ மகரம்‌ அல்லது மெல்லெழுத்து எனக்‌ கொள்வதன்‌றி அதனைத்‌ தனியே வேறொரு ஒலியன்‌ (Phoneme) என்று கொள்வதற்கில்லை. மகரத்தின்‌ மாற்றொலியன்‌ (Allophone) என்று கொள்வதற்கே இடமிருந்தது. ஆனால்‌ 'நன்கனம்‌' முதலியன போல அமைத்த 'அங்கனம்‌' (அங்கு+அன்‌+அம்‌) என்பதில்‌ பின்னாளில்‌, ககரம்‌ ஙகரமாக மெலிய, அது 'அங்ஙனம்‌' என ஒலிக்கப்‌ பெற்றது. இவ்வாறு வல்லெழுத்து மெல்லெழுத்தின்‌ சார்பால்‌ மெல்லெழுத்தாகும்‌ இயல்பு மலையாளத்தில்‌ இன்று நிலைத்துவிட்டது. தமிழிலும்‌ அத்தகைய இயல்பு விளங்கிய காலத்தை 'அங்ஙனம்‌' என்ற வழக்குக்‌ குறிக்கின்றது. இதன்‌ பயனாக 'ங' என்ற உமிர்மெய்யும்‌ சொற்களில்‌ வழங்குவதாகி, அதே நிலையில்‌ வரக்கூடிய 'க' முதலிய பிற ஒலிகளினும்‌ (அங்ஙனம்‌-அங்கனம்‌) வேறுபடுவதால்‌ 'ங' என்பதனைத்‌ தனி ஒலியன்‌ என்றே இன்று கொள்ளுதல்‌ வேண்டும்‌. வினைமுற்று விகுதி வடமொழியில்‌ 'திங்‌' என வழங்குவதனைத்‌ தமிழ்‌ வழக்கிற்கேற்ப உகரச்‌ சாரியை தந்து 'திங்ஙு' என்று தமிழில்‌ பிரயோக விவேக நூலார்‌ பயன்படுத்‌துகின்றார். 'திஙந்தம்‌' என்பதும்‌ அந்நூலில்‌ வரும்‌ சொல்‌லாம்‌. பேச்சுத்‌ தமிழில்‌ சிலபோது, ஙகரத்தின்‌ பின்‌ வரும்‌ ககரம்‌ பிற உயிர்களோடு சேர்ந்து வரும்போதும்‌ 'சிங்ஙி' (சிங்‌கி), எங்ஙே (எங்கே), முதலியவாக ஒலிப்பதால்‌, எழுத்து வடிவில்‌ எழுதப்‌ பெறாமற்‌ போனாலும்‌, ஙகரம்‌ பிற உயிர்களோடும்‌ தமிழில்‌ ஒலித்து வரக்‌ காண்கிறோம்‌. 'அங்ஙனம்‌' என எழுதப்பெறும்‌ பொழுது இரண்டு ஙகரமாக எழுதப்‌ பெற்றாலும்‌, ஒலிக்கும்பொழுது ஒரு ஙகரந்தான்‌ ஒலிக்கக்‌ கேட்‌கிறோம்‌. விரைந்தும்‌ நெகிழ்ந்தும்‌ ஒலித்து வரும்‌ தமிழ்‌ ஒலிப்‌பு முறையின்‌ விளைவாகும்‌ இது. முன்னாளில்‌ உள்‌நாக்குக்கு அருகில்‌ ஒலித்துவந்த இவ்வொலி இப்‌பொழுது மெல்ல வல்லண்ணத்துக்கு அருகாக ஒலித்து வருகிறது.

பொருள்‌: 'ங' என்பது மரக்கால்‌ அல்லது குறுணி என்பதன்‌ அறிகுறியாகக்‌ கல்வெட்டுக்களிலும்‌ பிற எழுத்துக்களிலும்‌ வழங்கி வருகின்றன.

வடிவம்‌: இந்த எழுத்தின்‌ வடிவம்‌ மாறிவந்த வரலாற்றைக்‌ கீழே காண்க:

தெ. பொ. மீ.