பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



கலைஞன் தியாகம்

நாராயண பிள்ளைக்கு வயது எழுபது. அவனுடைய முகத்தில் காலத்தின் கோடுகள் கீறப்பட்டிருந்தன. இளமையின் மேடு கரைந்துபோய்ப் புஷ்டியின் சின்னம் தகர்ந்து கன்னங்கள் குழிந்திருந்தன. ஆனாலும் அவனுடைய கைக்கு மட்டும் பழைய சக்தி முற்றும் போய்விடவில்லை. மண்ணைக் கொண்டு அபூர்வ ரூபங்களைச் சிருஷ்டிக்கும் கலைத்திறன் அழிந்துவிடவில்லை. அது அவன் கைவிரல்களோடு பிறந்ததுபோலும்.

வெறும் மண்ணை உருட்டித் திரட்டிக் காய வைத்து வர்ணந் தீற்றிவிட்டால் அதற்கு ஒரு களை - ஒரு பொலிவு - ஏற்படும் மாயத்தை அவனிடம் காணலாம். பண்ணுருட்டியில் அவனுடைய பொம்மைகளுக்குக் கிராக்கி அதிகம்.

ஒரு மண் அகலில் வர்ணத்தைக் கரைத்து வைத்துக்கொண்டு ஒரு பொம்மைக்கு அழகு செய்து கொண்டிருந்தான் கிழவன். சில மாதங்கள் க்ஷவரம் பண்ணிக்கொள்ளாமையால் வளர்ந்திருந்த தாடியும் மீசையும் அவனுடைய முகத்தில் பழமையின் தோற்றத்தை மிகைப்படுத்தின. மங்கிக் குழிந்த கண்களுக்கும் கைவிரல்களுக்கும் இடையே ஏதோ மின்சாரந்தான் வேலை செய்யவேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/9&oldid=1411946" இலிருந்து மீள்விக்கப்பட்டது