பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் நெஞ்சில் நீயிருப்பாய், கண்ணா! உடன்பிறப்பே, துன்பங்கள் தனியாக வருவதில்லை என முதுமொழி ஒன்றுண்டு! எதையும் தாங்கும் இதயம் பெற்றவர்கள் என்பதாலேயே இயற்கை எல்லாவகைத் துன்பங்களையும் நமக்கு வழங்கிப் பூரிப்படைகிறது போலும்! 15-6-76 செவ்வாய்க்கிழமை மாலை நாலுமணி இருக்கும். செவியைப் பிளந்து இதயத்தைச் சம்மட்டியால் தாக்கிடும் செய்தியொன்று பறந்து வந்தது. பத்துப் பேர் சூழ்ந்து கொண்டு தாக்கினாலும் சாயாத தேகமொன்று சாய்ந்துவிட்டது. தன்மான இயக்கத்தின் தூணாகவும், கழகத்தின் விசுவாசமிக்கக் கண்மணியாகவும், பொதுவாழ்வுப் பணியையே பிறவியெடுத்ததின் பயனாகக் கருதிச் செயல்பட்ட கடமை வீரனாகவும் திகழ்ந்த எம்.ஆர். கண்ணன் திடீரென மறைந்துவிட்டார். தியாகத்தின் திருவுருவென விளங்கிய அந்த வாலிய விளக்கை, காலம் மின்னல் வேகத்தில் ஊதி அணைத்து விட்டது. . நெஞ்சுரமிக்கத் தளபதி ஒருவரை சென்னை மாவட்டக் கழகம் இழந்துவிட்டது. அந்தோ! புயலையும் புன்னகை யுடன் எதிர்த்து நிற்கும் ஆருயிர் உடன்பிறப்பையல்லவா நான் இழந்துவிட்டேன்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/98&oldid=1695323" இலிருந்து மீள்விக்கப்பட்டது