பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் களஞ்சியம் 101

கோபித்துக் கொண்டு தாய் வீடு சென்ற தலைவியின் பின் சென்று, கெஞ்சிக் கூத்தாடி அவளைத் தம் வீட்டுக்குத் திரும்பவும் அழைத்து வருகிறார் நெல்லையப்பர் என்பது பாமரர் காணும் கதை. ஆம், இந்தக் கதையில் கூடப் பெண்மையின் வெற்றியே மேலோங்கி நிற்கிறது. இப்படித்தான் காந்திமதியாம் வடிவன்னை முக்கியத்துவம் பெற்றுவிடுகிறாள். அவள் கருவறையில் கையில் செண்டேந்திக் கொண்டு நின்றால், செப்புச் சிலை வடிவில் ஞான முத்திரையோடு நிற்பாள். உயிர்களுக்கெல்லாம் அருள் புரியும் கோலம் அல்லவா இந்த வடிவன்னையின் வடிவம்.

இந்த வடிவன்னையை மணந்தவரே நெல்லையப்பர் என்னும் வேணுவனநாதர். இவரது சந்நிதி அம்மையின் இடப்பக்கத்திலே, இவ்விரண்டு கோயில்களும் தனித்தனியே கட்டப்பட்டிருக்க வேணும். பின்னர்தான் இரண்டு கோயில்களையும் இணைத்து ஒரு மண்டபம். பொற்றாமரைக்கு மேல் பக்கம் கட்டியிருக்கிறார்கள். இதனையே சங்கிலி மண்டபம் என்கிறார்கள். இம்மண்டபத்தைக் கட்டியவன் ஒரு தொண்டைமான் என்று அம்மண்டபத்தில் உள்ள கல்வெட்டுக் கூறுகிறது.

இந்த மண்டபம் பிராகாரம் எல்லாம் கடந்தே நெல்லையப்பர் சந்நிதிக்கு வரவேணும். இவர் நெல்லையப்பர் என்று ஏன் பெயர் பெற்றார் என்பதற்கு இரண்டு நல்ல வரலாறுகள் உண்டு. இந்தக் கோயில் இன்றிருக்கும் இடம் அந்த நாளில் ஒரே மூங்கில் காடாக இருந்திருக்கிறது. ராமக்கோன் என்று ஒருவன். அவன் தினசரி தன்னுடைய மாட்டுப்பட்டிக்குச் சென்று பால் கறந்து அந்தப் பால் நிறைந்த குடத்துடன் தன் இல்லத்துக்குத் திரும்புவான். அப்படி வரும்போது ஒவ்வொரு நாளும் ஒரு மூங்கில் புதரண்டை கால் தடுக்கிப் பால் குடம் விழுந்து பால் முழுதும் சிந்தியிருக்கிறது. சில நாள் இப்படி நடக்கவே, மறு நாள் கோடாரியுடன் வந்து அந்த மூங்கில் புதரை வெட்டி அகற்ற முனைந்திருக்கிறான். அப்படி வெட்டும் போதுவெளிப்பட்டவரே வேணுவனநாதர். அவரை முழுவதும் கண்ட ராமக்கோன் (ராம பாண்டிய ராஜா என்று அழைக்கப்படுகிறார் பின்பு) வேண்டியபடியே வளர்ந்திருக்கிறார் இவர். இந்த சுயம்புமூர்த்தியை இன்னும், வேண்ட வளர்ந்த நாயகர் என்றே அழைக்கிறார்கள். இவரே கருவறையுள் வெட்டுப்பட்ட தலையோடு இருக்கிறார். கோயிலின் முதல் பிராகாரத்திலே ஒரு பள்ளமான இடத்திலே மூலலிங்கர் வேறே இருக்கிறார்.