பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

அதில் இருத்தியிருக்கிறார் வடமலையப்பர். அதனாலேயே இன்னும் ஆறுமுகவன் கோயில் கொண்டிருக்கும் மண்டபம் வடமலையப்பன் மண்டபம் என்று வழங்கப்படுகிறது.

இது ஏதோ கற்பனை கதை அல்ல. 1785 இல் பெர்லின் நகரிலிருந்து எம். ரென்னல் எழுதிய சரித்திர இந்தியா என்ற புத்தகத்தில் இத்தகவலைத் தாம் ஒரு டச்சு மாலுமியிடமிருந்து தெரிந்து கொண்டதாக அவர் எழுதியிருக்கிறார். 1648 இல் இது நடந்தது என்று உறுதியாகக் கூறியிருக்கிறார். 1648 இல் கடலுள் சென்ற ஆண்டவன் 1653 இல் தான் வடமலையப்ப பிள்ளையின் மூலம் வெளிவந்திருக்கிறான். அன்றிலிருந்து அவன் புகழ் பிரசித்தி பெற்றிருக்கிறது. இந்தச் செந்தில் ஆண்டவனிடத்திலே பாஞ்சாலங் குறிச்சிபாளையக்காரரான கட்டபொம்மன் மிகுந்த பக்தி சிரத்தையோடு வாழ்ந்திருக்கிறான். திருநெல்வேலியில் கலெக்டராக இருந்த லஷிங்டன் என்ற துரை மகனும் இந்த ஆண்டவனிடம் ஈடுபட்டு 1803 இல் பல வெள்ளிப் பாத்திரங்களைக் காணிக்கையாகக் கொடுத்திருக்கின்றார்.

இக்கோயில் கட்டியிருக்கும் இடம் ஆதியில் கந்தமாதன பர்வதம் என்ற மணல் குன்றாக இருந்திருக்கிறது. தேவர்கள் வேண்டிய படி தேவதச்சனான மயனே முதலில் கோயில் கட்டினான் என்பது வரலாறு. மயன் கட்டிய கோயில் நாளும் விரிவடைந்திருக்கிறது. பாண்டிய மன்னர்களும் சேர மன்னர்களும் இக்கோயில் கட்டுவதில் முனைந்திருக்கிறார்கள். வரகுணமாறன், மாறவர்மன், விக்கிரம பாண்டியன் முதலியோர் கோயிலுக்கு வேண்டிய நிபந்தங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இவை பதின்மூன்றாம் நூற்றாண்டில் ஏற்பட்டிருக்கின்றன. கிபி 1729 முதல் 1758 வரை திருவிதாங்கூரை ஆண்ட மாத்தாண்டவர்ம மகாராஜா இக்கோயிலில் உதய மாத்தாண்டக் கட்டளையை ஏற்படுத்தியிருக்கிறார்.

இந்த இருபதாம் நூற்றாண்டிலும் மெளனசுவாமி என்பவர் கோயில் திருப்பணியை மேற்கொண்டிருக்கிறார். அவருக்குப் பின் திருப்பணியைத் தொடர்ந்து நடத்தியவர் வள்ளிநாயக சுவாமிகள். இன்று விரிவடைந்திருக்கும் கற்கோயில் ராஜகோபுரம், பிராகாரங்கள் எல்லாம் இவர்களது திருப்பணி வேலைகளே. முருகன் கோயில்களில் எல்லாம் சிறப்பான கோயிலாக இருப்பது இந்தச் செந்திலாண்டவன்

கோயிலே.