பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 கலா மண்டபம் ஒரு விமர்சனம்

“உள்ளே என்ன இருக்கிறது?

“ஒன்றுமில்லே, வெறும் படங்கள்தான் இருக்கிறது” என்று இரண்டு பேர் பேசிக் கொள்கிறார்கள். சென்னை தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியார் அகில இந்திய சுதேசிப் பொருட் காட்சி ஒன்றை நடத்துகிறார்கள். அந்தக் காட்சி சாலையின் ஒரு பகுதியில் உள்ள கலா மண்டபத்தின் வாசலில்தான் இந்தப் பேச்சு நடந்தது. கேள்வி கேட்டவர் கலா மண்டபத்துக்குள் போக விரும்பியவர். பதில் சொன்னவர் கலா மண்டபத்திலுள்ள கலைப் பொருள்களைப் பார்த்து விட்டு வெளியே வருபவர். உண்மையிலே அங்கே வெறும் படங்கள்தானா வைத்திருக்கிறது? இதைப் பார்க்கத்தானா தினசரி பதினாயிரக் கணக்கான மக்கள் உள்ளே போய் வருகிறார்கள்? இப்படி வெறும் படங்களை வைத்துக் காட்சி நடத்துவதற்குத்தானா இதன் நிர்வாகிகள் இத்தனை சிரமம் எடுத்துக் கொள்கிறார்கள்? என்றெல்லாம் எண்ணங்கள் எழுவது இயற்கை. நல்ல கலா ரசிகர்கள் நமது கண்களுக்கு அளிக்கும் ஒரு விருந்தல்லவா அங்கே தயாராகியிருக்கிறது? அருங்கலைகளில் சிறப்பாக உள்ள சித்திரம் சிற்பம் இரண்டும் அக்கலாமண்டபத்திலே கோயில் கொண்டிருக்க, அதைத்தானா வெறும் படங்கள் என்று விமரிசனம் செய்துவிட்டார் சென்று திரும்பிய நண்பர்?

ஆனால் இவருடைய கூற்றிலும் ஒரு உண்மை புதைந்து கிடக்கத்தான் செய்கிறது. சித்திரத்தையும் சிற்பத்தையும் அனுபவிக்க நாம் நமது தமிழ் மக்களைப் பழக்கியா வைத்திருக்கிறோம்? ஏதோ ஒன்றிரண்டு பேர் கலை நுணுக்கங்களை அறிந்துகொண்டு “ஆ! ஒ!” என்று சொல்லிவிட்டால் போதுமா? சாதாரண மக்கள் ஆண்களும் பெண்களுமே கலைப் பொருள்களைக் கண்டு அதன் ரசனையை அறிந்து, உணர்ந்து, அனுபவிக்க அவர்களைத் தயாராக்க வேண்டாமா?