பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 சகோதரர் பாஸ்கரத் தொண்டைமான்


கம்பன் அடிப்பொடி சா. கணேசன்

திருநெல்வேலியில் ஒரு பாராட்டு விழா. ஒரு முதுபெரும் புலவர் எண்பதாண்டு முற்றிய மகிழ்ச்சியால் தமிழ் அன்பர்கள் கூடி விழா எடுக்கின்றார்கள். வெள்ளகால் வெ. ப. சுப்பிரமணிய முதலியார் அவர்கள்தாம் விழாவுக்குரிய பெருமகனார். எண்பதாண்டு நிறைந்த தமிழ்ப் பேரறிஞர் ஒருவரைப் போற்றி எடுக்கும் விழாவிற்கு, தக்க ஒருவர் கிடைக்க வேண்டுமே, தலைமை தாங்கி ஆசி அருள! தமிழர் செய்த தவமே மண்மிசை அவதரித்ததோ என்று வியந்து மகிழத் தமிழ் மொழிக்கும், தமிழ்க் கலைக்கும் ஒப்பற்ற பணியாற்றிய உ.வே.சா. அவர்களின் நினைவே பலருக்கும் வந்தது.

ரசிகமணி டிகேசி “வெள்ளகாலை வாழ்த்த உத்தமதான புரத்திற்குத்தான் தகுதியுண்டு” என்று தீர்ப்புக் கூறிவிட்டார்கள். பிறகு மறு பேச்சுக்கு ஏது இடம்? ரசிகமணியே ஐயரவர்களுக்கும் எழுதினார்கள். அவர்களும் இசைந்தார்கள். -

விழா இந்துக் கல்லூரியில் மாடியில் நடந்தது. விழா நேரத்திற்கு முன்பே தமிழ் அறிஞர்களும் அன்பர்களும் நிரம்பிவிட்டனர். விழா நேரத்தில் விழாத் தலைவர் தாட்சிணாத்திய கலாநிதி, மகாமகோபாத்தியாய, டாக்டர், உ.வே.சாமிநாதையர் அவர்கள் விழா மண்டபத்தை நோக்கி வருகிறார்கள். முதிர்ந்த பிராயம். தளர்ந்த உடல் விழா நடக்கும் இடமோ மேல்மாடி. எனவே தலைவரை அழைத்துக்கொண்டு, வழிகாட்டி, ஆங்காங்கே உள்ளனவற்றை எடுத்துரைத்துக் கொண்டு ஓர் இளைஞர் முன்னே செல்லுகிறார். தலைவர் மெல்ல மெல்ல மாடிப்படி ஏறி, விழா மண்டபத்தை அடைந்து தலைமைப் பீடத்தில் அமர்கின்ற வரையில் அந்த இளைஞர் கூடவே சென்று, பின்னர் ஐயரவர்களின் கண்ணுக்கு மறைந்துவிடுகிறார்.