பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் களஞ்சியம் 151

விழா முறைப்படி தொடங்குகிறது. மாலைகள், வாழ்த்துமடல், வரவேற்பிதழ் முதலிய சடங்குகள் நிறைவேறி தலைவர் உரை தொடங்குகிறது. ஆம் ஐயரவர்கள் பேசத் தொடங்குகிறார்கள். தம்மை இப்பெரு விழாவிற்கு அழைத்தமைக்கு விழாக் குழுவினர்க்கு நன்றி கூறிய்தும் அவர்கள் மற்றொருவருக்கும் நன்றி கூறினார்கள்.

“என்னைப் பலகாலும் வற்புறுத்தி நீ மேலேற வேண்டும். எனவே நீ எப்பொழுதும் கற்பதில் ஊக்கம் உள்ளவனாயிருக்க வேண்டும் என்று கூறி ஒவ்வொரு நாளும் படி, படி” என்று தூண்டி வந்தவர்கள் என் ஆசிரியர் பெருமானாகிய பிள்ளையவர்கள். இப்பொழுது என்னை அப்படி ஊக்குவிப்பார் ஒருவரையும் காணேன். நான் நிரம்பக் கற்றவன் என்று நீங்களெல்லாம் என்னை மதித்து மரியாதை செய்யவும் தொடங்கிவிட்டீர்கள்.

“நெல்லைக்கு வந்தபின் நான் கற்க வேண்டியவை பல உள்ளன என்பதையும், அவற்றை எல்லாம் கற்றுத்தான் மேனிலை எய்த வேண்டும் என்பதையும் உணர்ந்தேன். மேலும் மேலும படி படி என்று சொல்ல ஆசிரியப் பெருமானாகிய பிள்ளையவர்கள் இல்லையே என்னும் குறையும் இன்று தீர்ந்தது. என்னை அழைத்து வந்தானே ஒரு பிள்ளையாண்டான், அவன் ஆண்டிலும் உருவத்திலும் சிறியவன்தான். ஆனால் அவன்தான் என் ஆசிரியப் பெருமானின் ஸ்தானத்தை இன்று வகித்தவன். ரெயிலடியில் இறங்கியது முதல் இங்கு வரும்வரை என் உடனேயே இருந்து கூடவே வந்து, படி படி என்று கூறி வழியும் காட்டி, மேலேற வேண்டும் என்று சொன்னதுடன் அமையாது, மேனிலைக்கே கொண்டு வந்து தலைமைப் பீடத்திலும் அமர்த்திச் சென்றுவிட்டான். ஆகவேதான், பிள்ளையவர்கள் ஸ்தானத்தை வகித்து, என்னை ஆண்டான் என்ற பொருள்பட இந்தத் தம்பியைப் பிள்ளையாண்டான் என்று குறிப்பிட்டேன்” என்று கூறியதுடன், “இந்தத் தம்பி பல்லாண்டு நல்வாழ்வு வாழ்க’ என்றும் வாழ்த்தியருளினார்கள்.

சிலேடை நயம் தோன்றக் கூறிய அவ்வுரை மக்களைப் பெரிதும் மகிழ்வித்தது என்பதை, ஆங்கு ஒலித்த கைதட்டும் ஆரவாரமும் புலப்படுத்தின. அந்தத் தம்பியாகிய பிள்ளையாண்டான் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை என்னலாம். “தமிழ்த் தாயின் தவப்புதல்வர் திருவாயால் வாழ்த்துப் பெறவும், தம்பி என்று அமுதுர அழைக்கவும் என்ன பாக்கியம் செய்தேன்!” என்று எல்லையிலா இன்பத்தில் ஆழ்ந்த அவர் கண்களில் இரு சொட்டு நீரும் துளித்தன.