பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் களஞ்சியம் 157

விருப்பம் இல்லை என்றாலும் எங்கள் பிரயாணத்தில் நிகழ்ந்த ஒரு மறக்கமுடியாத நிகழ்ச்சியைக் குறிப்பிட விரும்புகிறேன். நாங்கள் பல நகரங்களில் சொற்பொழிவு ஆற்றினோம். பூனா, பம்பாய், நாசிக், இராஜ்கோட், டெல்லி, கல்கத்தா முதலிய பல இடங்களிலுள்ள தமிழ்ச் சங்கங்களில் பேசினோம். திரு. தொண்டைமான் அவர்கள் ஒரு அதிசய பேச்சாளர். அவர் என்ன பேசுவார் என்று அறிவது சுலபமல்ல. பேச்சு எந்தத் திசைகளிலும் செல்லும், அது ஒட்டியும் இருக்கும். சில சமயம் வெட்டியும் அமைந்துவிடும். அன்று சபையில் கூடியுள்ள மக்களைப் பொறுத்தே பேச்சு அமையும். இவர் ஒரு அசாதாரண சொற்பொழிவாளர். பேச்சுக்கள் யாவும் ஒரு புதிர் போலத்தான் இருக்கும். எங்கள் முதல் பேச்சு பூனா நகரத்தில். அன்று எங்களை வரவேற்ற பூனா தமிழ்ச் சங்க அமைச்சர் திரு. சபாபதி, தொண்டைமான் அவர்களை முன்பே நன்கு அறிந்தவர். கல்கி வாயிலாக வாரந்தோறும் கட்டுரைகளைப் படித்து எப்பொழுது காண்போம் என்று ஏங்கியிருந்தவர். அடியேனைப் பற்றி அங்கு ஒருவருக்கும் தெரியாது. ஆதலால் அறிமுகப்படுத்தும் பணியைத் தொண்டைமான் அவர்களே ஏற்றுப் பேசினார்கள்.

“திரு. பிரசாத் வடநாட்டிலிருந்து குடிபெயர்ந்து பல ஆண்டுகளுக்கு முன் தென்னாட்டுக்கு வந்த வடவர். வள்ளல் இராமலிங்கர் பால் பேரன்பு கொண்டவர். மனம் உருக திருவாசகத்தையும் திருஅருட்பாவையும் பேசுபவர். கேட்போருடைய உள்ளங்களைக் கரைத்து ஆனந்த மேலீட்டால் தானும் அழுது கேட்பவர்களையும் அழச் செய்பவர். ஒரு அதிசயம். அவர் ஆயிரம் ஆயிரம் அருட்பாக்களைப் படித்து அவற்றை மறவாமல் ஆற்று ஒழுக்கு போன்று பாடுவதுடன், ஒருமுறை படித்ததை மறக்காமல் நினைப்பில் வைக்கும் அதிசய மனிதர். நானும் அவரைப் போலவே ஆயிரம் ஆயிரம் பாடல்களைப் படித்திருக்கிறேன். ஆனால் படித்ததெல்லாம் எனக்கு மறந்து தொலைகிறது. ஆனால் அவருக்கோ அப்படியே நினைவில் இருக்கிறது. இதுதான் எங்களுக்குள்ள வித்தியாசம். ~.

இனி அவருடைய பேச்சைக் கேளுங்கள். இது ஒரு வடவரின் தமிழ்ப் பேச்சு - ஞாபகம் இருக்கட்டும்” என்றார். இந்த அவருடைய புகழுரையை அடியேன் என்றுமே மறந்ததில்லை. அன்றைய இராமலிங்க வள்ளலைப் பற்றிய பேச்சு அவர்களுடைய முகவுரையில் மிகச் சிறப்பாக அமைந்ததுடன், அவர்கள் கூறியது போலவே பலர் கண்ணிர் சிந்தவும் காரணமாயிருந்தது.