பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் களஞ்சியம் 163

ஆனந்தவிகடன், கல்கி, கலைமகள் போன்ற பத்திரிகைகளின் விசேட மலர்களிலும், சாதாரண இதழ்களிலும் அவர் நிரம்பக் கட்டுரைகள் எழுதியுள்ளார். அவற்றைக் கடந்த கால நூற்றாண்டுக் காலமாக நான் ரஸித்து வந்துள்ளேன். அவர் எழுத்துக்களிலிருந்து அறிவும் பயனும் பெற்றுள்ளேன்.

பாஸ்கரனின் கலை இலக்கியக் கட்டுரைகள் உயர்ந்த ரஸிகத் தன்மையோடும், உருவ வார்ப்போடும் இருக்கும். எதையும் நன்கு சிந்தித்துத் திட்டமிட்டு, உழைத்து வெற்றிகண்டவர் அவர்.

பாஸ்கரனின் பேச்சிலும் எழுத்திலும் செய்நேர்த்தி இருக்கும். உழைப்பும் பண்பாடும் காணப்படும். உழைப்பால் உயர்ந்த உத்தமத் தமிழன் பாஸ்கரன்.

தாலுகா ஆபீஸ் குமாஸ்தாவாக இருந்து ஜில்லாக் கலெக்டராக ஓய்வு பெற்ற பாஸ்கரன், காஷ்மீரம் முதல் கன்னியாகுமரி வரையுள்ள கோவில்களையும், சிற்பங்களையும், நுட்பமாக வரைந்துள்ள பாஸ்கரன் நிறைவுவாழ்வு வாழ்ந்த ஒரு சீரிய தமிழறிஞர் என்பதில் ஐயமில்லை.

கோவில்களையும், அங்குள்ள சிலைகள் சிற்பங்களையும் தமிழர்களுக்கு இனிமையாக, தெளிவாக, சுவையாக இடையறாது அறிமுகம் செய்து வைத்த தமிழ் எழுத்தாளர் அவரைப் போல யாருமில்லை. இந்த விஷயத்தில் அவர் ஒரு அத்தாரிட்டி ஒரு பெரும் நிபுணர்! அவரது திடீர் மறைவு இத்துறையில் ஈடு செய்ய இயலாத பேரிழப்பு ஆகும். -

பாஸ்கரன் ஒரு பக்திமான். சமய உணர்ச்சி மிக்கவர். இக்காரணத்திற்காக அவரைப் புகழுவதோ, இகழுவதோ எனக்குச் சம்மதம் இல்லை.

பாஸ்கரன் அவர்களை இந்து மதப் பிரச்சாரகராகவும், ஆதரவாளராகவும் மட்டுமே சாயம் தீட்ட முயற்சிக்கிறார்கள் ஒரு சிலர். அவர்கள் முழு உண்மையை அறியாதவர்கள். ஒரு கலைஞனை, இலக்கியவாதியை, ரஸிகனை எவ்வாறு எடைபோட வேண்டும் என்று தெரியாதவர்கள்.

பாஸ்கரன் கிறிஸ்தவப் பள்ளியில் பயின்றவர். அவரது குரு ஆத்ம நண்பர்களில் ஒருவரான பெரியார் பால்நாடார் ஒரு கிறிஸ்தவர். அவரது குடும்ப நண்பர்களில் ஒருவரான ஹிலால் அச்சக அதிபர் ஒரு முஸ்லிம்.