பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



காந்திமதியம்மைப் பிள்ளைத்தமிழ்


பேராசிரியர் - சொல்லின் செல்வர்
ரா. பி. சேதுப்பிள்ளை


   நெல்லையம்பதியின் எல்லையில் அமைந்திருப்பது தச்சனல்லூர் என்னும் சிற்றுார். அவ்வூரிலே நூற்றிருபது ஆண்டுகளுக்கு முன்னே தோன்றி, அழியாப் புகழ் பெற்ற கவிஞர் அழகிய சொக்கநாதர். அவர் வாக்கிலே ஒளியுண்டு, கவிதையிலே அழகுண்டு.

“பந்தடிக்கும் மேடையிலே
வந்து விளையாடையிலே
பார்த்து நின்ற சாடையிலே
பறி கொடுத்தேன் என் மனசை”

என்ற அழகிய சொக்கநாதர் பாட்டின் சுவையறியாதார் அறியாதாரே!

   “திக்கெலாம் புகழும் திருநெல்வேலி’ என்று திருஞான சம்பந்தப்பெருமான் புகழ்ந்து ஏத்திய திருநகரில் கோயில் கொண்டுள்ள காந்திமதியம்மையைப் பிள்ளைத்தமிழ் மாலை அணிந்து போற்றினார், அழகிய சொக்கநாதக் கவிஞர். கருணை வடிவாய் காந்திமதித் தாயார்,

“மலையத் தமிழ்கேட்டு உளமகிழும்
வாழ்வே வருக வருகவே”

   என்று இக்கவிஞர் ஆர்வமுடன் அழைக்கும்பொழுது நம் செவிகளில் இன்பத்தேன் வந்து பாய்கிறது அப்பிள்ளைத் தமிழில் அமைந்த

“வாராதிருந்தால் இனிநான் உன்
வடிவேல் விழிக்கு மை எழுதேன்”

   என்ற திருப்பாட்டு, கற்றார்க்கும், கல்லார்க்கும் களிப்பருளும் களிப்பாகும்.