பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



தொண்டை அரசு


ரசிகமணி டி.கே.சி

தொண்டைநாடு என்பது சோழநாட்டுக்கு வடக்கே உள்ளது. பல சந்தர்ப்பங்களில் சோழ நாட்டோடு ஒன்றாய் இருந்ததுண்டு. வேறுபட்டு தனித்திருந்ததும் உண்டு. சோழனது உறவினர்களே, தொண்டை நாட்டை ஆண்டு வந்தார்கள். காஞ்சிபுரம் அவர்களுடைய தலைநகராய் இருந்து வந்தது.

தொண்டை நாட்டு அரசரில் ஒருவன் கடுமான் திரையன். அவனைப் பற்றி ஒரு கதை. புராணக் கதை.

சோழ மன்னன் ஒருவன் கிழக்கேயுள்ள ஏதோ ஒரு தீவின் மேல் படை எடுத்தான். அங்கே சில காலம் தங்க நேர்ந்தது. அங்குள்ள ஒரு பெண்ணை மணந்தான். அவள் கர்ப்பவதியாய் இருக்கும்போது, மன்னன் தன் நாட்டுக்குத் திரும்ப வேண்டிய அவசியம் நேர்ந்தது. அவனும் புறப்பட்டுவிட்டான்.

புறப்படும்போது, தீவகத்து மனையாளிடம், “குழந்தை பிறந்ததும், ஆண் குழந்தையாக இருந்தால் குழந்தையைப் படகில் வைத்து என்னிடம் அனுப்பிவிடு. நம்முடைய குழந்தை என்று இனம் கண்டு கொள்வதற்காக தொண்டைமாலையைக் கழுத்தில் அணிவித்து அனுப்ப வேண்டும்” என்று சொல்லிவிட்டுப் படகில் ஏறிப்போய்விட்டான்.

குழந்தை பிறந்தது. அதுவும் ஆண் குழந்தையாக இருந்தது. அரசன் சொன்னபடி, தொண்டைமாலையைக் குழந்தையின் கழுத்தில் அணிவித்து, ஒரு பொன் மயமான படகில் வைத்துக் கடலில் அனுப்பிவிட்டாள் தாய்.

படகு சோழநாட்டின் கடற்கரைப் பக்கமாக மிதந்து வந்து ஒரு மரத்தின் நிழலில் நின்றது.