பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் களஞ்சியம் 237

மணி எட்டாகிவிடும். இரவுச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு தமிழையும், கலையையும் சற்றே மறந்து, ஒரு மணி நேரம் ஆபிஸ் பைல்களைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். மணி ஒன்பது அடித்துவிட்டால், தமிழையும் மறந்து, கலையையும் மறந்து, ஆபிஸ் பைல்களையும் மறந்து நிச்சிந்தையாய் படுக்கையில் படுப்பார்கள். அடுத்த ஐந்தாவது நிமிஷம் குறட்டை ஒலி, அவர்கள் தூங்கி விட்டார்கள் என்று அறிவிக்கும். குறித்த நேரத்தில் குறித்த பணியைச் செய்வதில் சூரர் என்றுதான் அவர்களைச் சொல்ல வேண்டும்.

அதிகாரமும் பதவியும் உயர உயர, பல மனிதர்கள் மனிதத் தன்மையையே இழந்து விடுவார்கள். தொண்டைமானவர்கள் இதற்கு விதிவிலக்கு. திருநெல்வேலியில் நடந்த ஒரு சம்பவமே இதற்குச் சான்று.

நெல்லையில் இவர்கள் முதல் வகுப்பு மாஜிஸ்ட்ரேட்டாக பணியாற்றிக் கொண்டிருந்த சமயம், இவர்களும், நண்பர்களும் ஜங்ஷன் சாலைக் குமரன் கோவிலுக்கருகிலுள்ள நண்பர் சுப்பையர் சைக்கிள் கடையிலே மாலைவேளையில் கூடி அளவளாவிப் பிரிவதுண்டு. ஒருநாள் இவர்களுடைய பதவி உயர்வை (டிபுடி கலெக்டராக) அறிவிக்கும் தந்தி ஒன்று வந்தது. நண்பர்கள் பேசிக் கொண்டார்கள். “கெஜட் பதிவுள்ள பதவிக்கு உயர்ந்துவிட்டதால் பாஸ்கரன் இன்று சைக்கிள் கடைக்கு வரமாட்டார்” என்று. தொண்டைமானை நன்கு அறிந்தவர்களோ, “அதெல்லாமில்லை, எப்போதும் போல வருவார்” என்றார்கள். இரு தரப்பாருக்கும் வாக்குவாதம். பந்தயம் கூடக் கட்டிக் கொண்டார்கள். மாலையும் வந்தது. நண்பர்களும் கூடிவிட்டார்கள். வழக்கம் போல தம் கைத்தடியை வீசிக்கொண்டு தொண்டைமானுமே அங்கே வந்து விட்டார்கள். எல்லோருக்கும் ஒரே ஆச்சர்யம். பதவி உயர்ந்தும் படாடோபமில்லாமல் பழைய பாஸ்கரனாகவே இருக்கிறாரே என்று.

அங்கெல்லாம் பொதிகைத் தென்றலும் பொருநைத் தமிழும் போகும். அதைத் தொடர்ந்து ரசிகமணி டி.கே.சியும், அவர்கள் வட்டத்தொட்டி அங்கத்தினர்களுமே போவார்கள். சபைகளிலே தமிழ் முழங்கும். கவிதை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். அந்த ஊரை விட்டு மாற்றலாகி, அடுத்த ஊருக்குச் சென்றாலும் இதே கதைதான். அவர்கள் உருவாக்கிய எத்தனை எத்தனையோ கழகங்களிலே இன்றுவரை சிறப்பாகப் பணியாற்றி வருபவைகளில் கோவை நன்னெறிக் கழகமும் ஒன்று.