பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

பலர் தொண்டைமான் என்ற பட்டப் பெயரையே தாங்கியவர்கள் என்பதை சரித்திர ஆசிரியர்கள் நன்கு அறிவார்கள். இலக்கிய அறிஞர்களோ நந்திக் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவனாம் நந்தியம் பெருமான் தொண்டைமானையும், கலிங்கப்போரில் வெற்றி கண்டு ஜயங்கொண்டானால் பரணி பாடப்பெற்ற கருணாகரத் தொண்டைமானையும் அறிவார்கள். இவர்கள் பரம்பரையிலே வந்தவர்கள்தான் புதுக்கோட்டை ஒன்றைக் கட்டி அதன் அரசர்களாய் வாழ்ந்திருக்கிறார்கள். இந்த அரசப் பரம்பரையைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் ஏதோ குடும்பத்தில் ஏற்பட்ட மனத்தாங்கல் காரணமாக புதுக்கோட்டையை விட்டுப் புறப்பட்டுத் தெற்கு நோக்கி நடந்திருக்கிறார்கள். அப்படி வந்தவர்கள் தென்பாண்டி நாட்டில் பொதிகை மலைச் சாரலில் தங்கி வாழ்ந்திருக்கிறார்கள். திருக்குற்றாலம், பாபநாசம், திருச்செந்தூர் முதலிய இடங்களில் மடாலயங்கள் நிறுவி அறக்கட்டளைகள் நடத்தி இருக்கிறார்கள். அப்படி வந்து தங்கிய அரச சகோதரர் ஒருவரின் பரம்பரையே எங்கள் பரம்பரை. அந்தப் பரம்பரையில் வந்த பெரியார்களை எல்லாம் எனக்குத் தெரியாது. நான் சிறிய பெண்ணாக இருக்கும்போது உயிரோடிருந்தவர்கள் என் தந்தையாரின் பாட்டனார், எனது பூட்டனார் திரு. சிதம்பரத் தொண்டைமான். எனக்கு வயது பன்னிரண்டு நிறையு முன்பே இறைவனடி சேர்ந்துவிட்டார்கள். ஆதலால் அவர்களது தோற்றம் குணநலம் ஒன்றும் எனக்கு ஞாபகம் இல்லை. என்றாலும் அவர்கள் எழுதிக் கையெழுத்துப் பிரதியாக வைத்துவிட்டுப் போன பாடல்கள் எங்கள் வீட்டில் இருக்கத்தானே செய்கிறது. அதிலிருந்தும் என் தந்தையார் சொல்லும் கதைகளில் இருந்தும் பல விஷயங்கள் தெரிந்துகொண்டேன்.

அந்தச் சிதம்பரத் தொண்டைமான் அவர்களின் சிற்றப்பாதான் அருணாசலத் தொண்டைமான் என்பவர்கள். அவர்கள்தான், வண்ணச்சரபம் திருப்புகழ்ச்சாமிகள் முருகதாச சுவாமிகள் என்றெல்லாம் தமிழ் உலகம் நன்கறிந்த பெரியார், அருள்மிகு தண்டபாணி சுவாமிகளது முதல் சிஷ்யர். எனது பூட்டனார் சிதம்பரத் தொண்டைமான் அவர்களும் அதே முருகதாச சுவாமிகளின் கடைசிக் காலத்தில் சிஷ்யராகச் சேர்ந்தவர்கள். ஆகவே எங்கள் குரு பரம்பரை மிகச் சிறப்பானது என்று நாங்கள் பெருமையோடு சொல்லிக் கொள்ளலாம் அல்லவா?

முருகதாச சுவாமிகள் குமரனை வழிபட்டு உயர்ந்தவர். வழிபாடு என்றால் சாதாரண வழிபாடு அல்ல. முருகப்