பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

நமது நாட்டிற்குப் புதியவர். ஏதோ தற்செயலாய் ரயிலில் அவரைச் சந்திக்க நேர்ந்தது. அவர் சொன்னார். உங்கள் நாட்டுத் தத்துவ ஞானம் உலகப் புகழ் பெற்றது, உண்மைதான். ஆனால் இவ்வளவு தத்துவ உணர்வு பெற்ற நீங்கள் எப்படி ஆண்டுதோறும் உங்கள் கோயில்களில் திருக்கலியான உற்சவம் கொண்டாடுகிறீர்கள்? மனவாக்குக் கடந்த அருவமாய் உள்ள இறைவனுக்கு மனைவி ஏது? கலியாணம் ஏது? இதுதான் எனக்குப் புரியவில்லை.

கடவுள் எங்கும் இருக்கிறான் என்று பேச்சளவில் சொல்லுகிறோம். ஆனால் அவன், இங்கே நம்மைச் சுற்றியுள்ள வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும், இருக்கிறான் என்பதை உணர்ந்து, ஏற்றுக் கொள்வதற்கு தயங்குகிறோம். இந்தத் தயக்கமே புராணக்கதைகளை உள்ளவாறு அறிவதற்குத் தடையாக இருக்கிறது. நம்முடைய முன்னோர்கள் இப்படித் தயங்கவில்லை. இறைவன் பிட்டுக்கு மண் சுமந்தான். பிரம்பால் அடிபட்டான், மாமனாக வந்து வழக்குரைத்தான் என்று பேசினார்கள். மீனாக, ஆமையாக, ஏன் ஆண்டாள் சொல்வதுபோல் மானமிலாப் பன்றியாகக்கூட இங்கே வந்தான். அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்தில் பிறந்து, வெண்ணெய் திருடி, கடை கயிற்றால் கட்டுண்டு, நந்த கோகுலத்தில் விளையாடினான் என்று நம்பினார்கள். கடவுள் எங்கேயோ நெடுந்தொலைவில் கைலாசத்திலோ, பரமபதத்திலோ, பரலோக ராஜ்யத்தில் மட்டும் இருப்பதாக அவர்கள் எண்ணவில்லை. எல்லா இடங்களும், எல்லா நிலைகளும், அவனைக் காணத் துடிக்கும் இந்த மனித உள்ளமும், அவனுடைய இராஜ்யம் என்றே கருதினார்கள். அவர்களுக்குத் திருவையாறு கைலாயம் ஆயிற்று. திருக்கோவலூர் வீட்டு இடைகழி பரமபதமாக மாறியது. பல்வேறு காலங்களில், பல்வேறு தலைமுறைகளில், தமது வாழ்க்கையோடு பின்னிக்கிடக்கும் கடவுள் என்ற சத்தியத்தை, அந்த வாழ்க்கையை ஒளியாகக் கொண்டு, நமது முன்னோர்கள் தொட முயன்றார்கள். ஒரு நாமம், ஒருருவம், ஒன்றுமிலார்க்கு ஆயிரம் ஆயிரம் பெயர் சூட்டித் தெள்ளேனம் கொட்ட முற்பட்டார்கள். எல்லா உறவுகளையும் கடந்த ஒன்றை அது இங்கும் உள்ளது என்ற உணர்வோடு, மனித உறவுகளைக் கொண்டு தேடிக் கண்டார்கள். அன்பெனும் வலையில் அகப்படும் இறைவனுடைய எளிமையை வியந்து பரவினார்கள். எத்தனை எத்தனையோ உருவகங்களால், மனித வாழ்க்கைச் செய்திகளால் அலகிலா அவனை அலகிட்டுச் சிக்கெனப் பிடித்தார்கள். இந்த முயற்சியின் விளைவுதான் புராணக்கதை.