பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 - கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

ஈரோடு ஸ்டாலின் குணசேகரனிடம் “எட்டயபுரம் சென்றுவிட்டு ஈரோடு போகலாமா? என்கிறார் தொ.மு.சி. அதேபோல எட்டயபுரம் பாரதி மணிமண்டபத்தின் முன் கார் வந்து நிற்கிறது.

மணிமண்டபத்துக்குள் சென்ற ரகுநாதன் ஓரிடத்தில் நிற்கிறார். அவரையே பார்த்துக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின் குணசேகரன்...

“இந்த மணிமண்டபத் திறப்பு விழாவுக்கு முதல்நாள், கோவில்பட்டிக்கு ஒரு கூட்டத்திற்காக ஜீவா வந்திருந்தார். அவரை இங்கு அழைத்து வந்திருந்தோம். இந்த இடத்தில்தான் ஜீவா உட்கார்ந்திருந்தார். மேடையில் ராஜாஜி போன்ற அரசியல் தலைவர்களும், திரைப்படக் கலைஞர்களும், எம்.எஸ். சுப்புலட்சுமி போன்ற பாடகர்களும் அமர்ந்திருக்கிறார்கள். கூட்டம் தொடங்கியது. நாங்கள் மேடை ஏறும்படி ஜீவாவைத் தள்ளிச் சென்றோம். ஜீவா மேடை ஏறினார். கூடியிருந்த கூட்டம் ஜீவாவைக் கண்டதும் ஆனந்தப் பெருக்கால் கைதட்டி மகிழ்ந்தது. மேடை ஏறியதும் ஜீவா பேசத் தொடங்கிவிட்டார்.

‘பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே என்று பாரதி பாடினானே, போச்சா? ஏற்பாரைப் பணிகின்ற காலமும் போச்சே என்று பாரதி எழுதினானே, போச்சா? ஏய்ப்போருக்கு ஏவல் செய்யும் காலமும் போச்சே என்று பாரதி பாடினானே, போச்சா என்று கூட்டத்தை நோக்கிக் கேட்டார்.

அரங்கமே கர ஒலியால் அதிாந்தது. தொடர்ந்து ஜீவா முழங்க முழங்கக் கூட்டம் உணர்ச்சிக் கொந்தளிப்பில் தத்தளித்தது’ என்று சொல்லிவிட்டு, கடந்தகால நிகழ்வுகளை அசைபோடுகிறார் தொ.மு.சி.ரகுநாதன்.

அதன்பின் பாரதியார் இல்லத்திலும், ரகுநாதன் நூலகத்திலும் நுழைந்த ரகுநாதன் பாரதியின் மேன்மை பற்றியெல்லாம் சிலிர்ப்போடு சொல்கிறார். பொன்னீலனும், ஸ்டாலின் குணசேகரனும் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தனர்.

அங்கிருந்து கார் புறப்படுகிறது. ஈரோட்டில் நுழைகிறது. 2001 டிசம்பர் 11. தொ.மு.சி. ரகுநாதனுக்கு பாரதி விருது வழங்கும் விழா.

மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் தொ.மு.சி. ரகுநாதனின் சிறப்புகளை எல்லாம் எழுச்சியோடு சொல்லி முடிக்கிறார்.