பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் களஞ்சியம் 297

வேண்டும் என்று சொல்லி, இங்கே வந்திருக்கும் தேசத் தியாகிகளையும் மற்றவர்களையும் வணங்கிச் செல்கின்றேன்” என்ற தொ.மு.சி ரகுநாதன் தமது ஏற்புரையை முடிக்கிறார்.

கூட்டம், தொ.மு.சி. ரகுநாதனின் அறிவார்ந்த சிந்தனை முழக்கத்தில் சிக்கித் தவிக்கிறது. விழா முடிகிறது.

முப்பது நாட்களுக்குப் பிறகு 31.12.2001 அன்று எதிர்பாராத விதத்தில் தொ.மு.சி., பாளையங்கோட்டையில் தமது மரணத்தைத் தழுவுகிறார். தமிழகம் முழுவதுமிருந்து அறிஞர்களும், அரசியல் பிரமுகர்களும், ஆய்வாளர்களும், படைப்பாளிகளும் பாளையங்கோட்டையில்...

தொ.மு.சி.ரகுநாதனின் உயிரற்ற உடல் கிடத்தப்பட்டிருக்கிறது. அவர் தலைமாட்டில் ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை கொடுத்த மார்பளவுள்ள பாரதி சிலை கொண்ட சீல்டும், பாரதி கைவிரித்தபடி நிற்கும் நினைவுப் பரிசும் இடம் பெற்றிருக்கிறது. கைவிரித்தபடி நிற்கும் பாரதி, தமது தவப்புதல்வனை ஆரத் தழுவிக்கொள்ளக் காத்திருப்பதுபோல் அந்த நினைவுப் பரிசு காட்சியளிக்கிறது.

ஈரோட்டைச் சார்ந்த தங்கப் பெருமாள் பிள்ளை ஏற்பாடு செய்த கருங்கற்பாளைய வாசக சாலையின் ஐந்தாம் ஆண்டு விழாவில்தான் மகாகவி பாரதி மனிதனுக்கு மரணமில்லை என்ற தலைப்பில் இறுதியாகப் பேசினார்.

மாமனிதன் தொ.மு.சி. ரகுநாதனும் ஈரோட்டைச் சேர்ந்த ஸ்டாலின் குணசேகரன் ஏற்பாடு செய்த மக்கள் சிந்தனைப் பேரவையில் பேசியதுதான், அவருடைய இறுதி முழக்கமாக அமைந்துவிட்டது. அடுத்து ஒரு கூட்டத்தில் பரிசு வழங்கியிருக்கிறார். ஈரோட்டில் பேசியது போல பேருரை நிகழ்த்தவில்லை.

ஆம் பாரதி சொல்லியது போல தொ.மு.சி ரகுநாதனுக்கு மரணமே இல்லை.

தொ.மு.சி, ரகுநாதன், திருச்சிற்றம்பலக் கவிராயர், என்று மூன்று பெயர்களில் அவருடைய படைப்புகள் வெளிவந்திருக்கின்றன. அவரை பாரதி ரகுநாதன் என்று நான்காவது பெயரிலும் அழைக்கவே நமக்குத் தோன்றுகிறது.

ஆம் பாரதி புகழ் இருக்கும் வரை தொ.மு.சி ரகுநாதனின் பெயரும் இருக்கும்.