பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



கடிதம் —=—

சென்னை

31.7.45

அன்புள்ள பாப்பாவுக்கு,

துறைவன் மூலம் நீ அனுப்பிவைத்த பலகாரம் ரொம்ப நன்றாயிருந்தது. எல்லாமே எனக்குப் பிடித்தவை. கனி (நண்பர்) அதை ருசி கூடப் பார்க்காமல் உனக்கு என்னென்னமோ எழுதியிருப்பார். உண்மையில் ரொம்ப நன்றாயிருந்தது. நானும் நண்பர் அழகிரிசாமியும் தமிழன் பண்பாடு கெடாமல் தின்றோம். இரண்டு மூன்று நாட்களிலேயே காலி பண்ணிவிட்டோம்.

உன், கல்கி சிறுகதைப்போட்டி விஷயம் என்னவாயிற்று? துறைவன் மட்டும் ஒரு கதை அனுப்பியிருக்கிறார். நான் அனுப்பவில்லை. கலைமகள் ரூ. 1000 பரிசுப் போட்டியில் கலந்து கொள்ளலாம் என்றிருக்கிறேன். சிறுகதைகளை விட நாவல் எனக்குப் பிடித்திருக்கிறது.

கருணாகரன் எப்படியிருக்கிறான்? எல்லோருக்கும் என் வணக்கம். உன் பலகாரத்துக்கு நன்றி. நன்றி தெரிவிப்பதே மீண்டும் மீண்டும் உதவி பெறுவதற்குத்தான் என்பது உனக்குத்தான் தெரிந்திருக்குமே! உன் ரசமான பதிலை எதிர்பார்க்கிறேன். உன் கதைகளை அனுப்பு. நான் பார்த்து வெளியிடச் செய்கிறேன்.

அன்புடன்

குட்டியப்பா