பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- எழுத்தாளர், கலெக்டர்

முப்பதாண்டு சர்க்கார் சேவகம்

—-—

முப்பத்தைந்து வருஷங்களுக்கு முன் நான் திருநெல்வேலி ஜில்லாவில் ரிவின்யூ இன்ஸ்பெக்டராக வேலை ஏற்றிருந்தேன். அந்த உத்தியோகத்தில் நல்ல பெயர் எடுப்பதும் அதன் மூலம் உத்தியோக உயர்வு பெறுவதும் மேலதிகாரிகள் முகாம் வருகிறபோது அவர்களுக்கு சப்ளை செய்வதைப் பொறுத்ததுதான் என்பதையும் அறிந்திருந்தேன். தாசில்தார் முகாம் வந்தால் அவரது உணவு விஷயமாக காரியங்களை எல்லாம் கிராம முனிசீப்களே கவனித்துக் கொள்வர். டிப்டி கலெக்டர் முகாம் வந்தால் அவருக்கும் அவருடைய பட்டாளத்திற்கும் உணவருத்துவது முதலிய செலவுகளை ரிவின்யூ இன்ஸ்பெக்டர்தான் கவனித்துக்கொள்ள வேண்டும். கலெக்டர் முகாம் வந்தால் தான் கஷ்டம். ஒரு சிறு தவறு கூட ஏற்பட்டு விடாமல் பார்த்துக் கொள்ளவேணும். தப்பித்தவறி ஏதாவது தவறு நேர்ந்துவிட்டால், தொலைந்தார் ரிவின்யூ இன்ஸ்பெக்டர்.

இந்த நிலையில் அப்போதைய ஜில்லா கலெக்டர் என்னுடைய பிர்க்காவிற்கு முகாம் வருவதாகத் தகவல் வந்தது. கலெக்டர் வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே அவரது குதிரை வந்தது. குதிரைக்காரனும் வந்தான். குதிரையை, குதிரைக்காரனைப் பராமரிப்பதில் அக்கறை செலுத்தி சரியாகக் கவனித்துக் கொண்டேன். கடைசியில் கலெக்டர் வந்தார். அவரோடு ஒரு பரிவாரமும் வந்தது. எல்லோருக்கும் வேண்டுவன எல்லாம் தேடிக் கொடுத்து அவர்கள் மனம் கோணாதபடி நடந்துகொண்டேன். மூன்று நாள் முகாம் முடிந்து கலெக்டர் மற்றொரு முகாமிற்குப் புறப்பட்டார். மூன்று நாள் வாங்கிக் கொடுத்த பால், முட்டை முதலிய சாமான்களுக்கு பில் கேட்டார் கலெக்டர். கிராம முனிசீப்பும் செலவு ருபாய் ஒன்றரை என்று விவரமாகப் பில் எழுதிக் கொண்டு வந்து கொடுத்தார். கலெக்டர் முன்னிலையிலேயே கலெக்டரின் காம்ப் கிளார்க் அந்தப் பணத்தைக் கிராம முனிசீப்பிடம் கொடுத்துவிட்டார்.