பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

புறப்படும் கலெக்டரை அனுப்பி வைக்க நான் அவர் முன் வந்து நின்றேன். “கிராம முனிசீப் கொடுத்த பில்லில் குதிரைக்கு என்று செய்த செலவு காட்டப்படவில்லையே” என்றார் கலெக்டர் என்னிடம். நான் கொஞ்சம் ஜாக்கிரதையாய் அப்படிச் செலவு ஒன்றும் ஆகிவிடவில்லை என்றேன். அவ்வளவுதான் கலெக்டர், “அப்போது என் குதிரையை மூன்று நாள் பட்டினி போட்டு விட்டீர்” என்று என் மேல் பாய்ந்தார். நடுநடுங்கிவிட்டேன். புல்லுக்கும் கொள்ளுக்கும் அதிகம் செலவாகவில்லை என்று குறிப்பிட்டே பதில் சொன்னேன். “என்ன செலவு ஆயிற்றோ அதையும் வாங்கிக் கொள்ளும்” என்று கூறிவிட்டு குதிரை மீது ஏறி புறப்பட்டுவிட்டார் கலெக்டர். மற்றவர்களும் புறப்பட்டுப் போய்ச் சேர்ந்தார்கள். தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று நானும் வீட்டிற்குத் திரும்பினேன், கொஞ்சம் மனத் தாங்கலோடேயே.

என்னுடைய கவலையை அறிந்த கிராம முனிசீப் “இதற்கென்ன சார் இவ்வளவு வருத்தப்படுகிறீர்கள். இதற்கு முன் என்ன என்ன நடந்திருக்கிறது என்று தெரியுமா? சொல்கிறேன், கேட்கிறீர்களா” என்று ஒரு கதை சொல்ல ஆரம்பித்தார். கலெக்டர் முகாம் வந்தால் அவருக்கு வேண்டிய சப்ளை எல்லாம் செய்யவேண்டியது ரிவினியூ இன்ஸ்பெக்டர் பொறுப்புத்தான். கலெக்டரை விட கலெக்டருடன் வரும் பட்லரைத் திருப்திச் செய்யத் தெரிந்திருக்க வேண்டும் முதலில் ஒரு அப்பாவிரிவினியூ இன்ஸ்பெக்டர் சப்ளை விஷயத்தில் எல்லாம் கண்ணும் கருத்துமாகவே இருந்தார். ஆனால் அவர் கலெக்டரது பட்லரைக் கவனிக்கத் தவறிவிட்டார். மூன்று நாள் கலெக்டர் முகாம் செய்து இருந்தார். எல்லாம் ஒழுங்காய் நடந்தது. மூன்றாம் நாள் காலை கலெக்டருக்குக் காப்பி கொடுக்கவில்லை பட்லர். கலெக்டர் முகத்திலோ எள்ளும் கொள்ளும் வெடித்தது, “ஏன் பெட் காபி வரவில்லை” என்று கேட்ட கலெக்டரிடம் “ரிவின்யூ இன்ஸ்பெக்டர் திரிந்த பாலையே கொண்டு வந்திருக்கிறார்” என்று புகார் செய்துவிட்டார். கலெக்டர் கோபம் எல்லை கடந்துவிட்டது. ரிவினியூ இன்ஸ்பெக்டரை அழைத்தார். அவர் கொண்டு வந்ததாக பட்லர் காட்டிய திரிந்த பால் உள்ள செம்பை ரிவினியூ இன்ஸ்பெக்டர் தலையில் கவிழ்த்து போ, போ என்று விரட்டிவிட்டார். இந்த ரிவின்யூ இன்ஸ்பெக்டர் கொஞ்சம் மானியாகவும் இருந்திருக்கிறார். பாலாபிஷேகம் பெற்ற கோபத்துடனே தாசில்தார் வீட்டிற்குச் சென்றார். நடந்ததைச் சொன்னார். அத்துடன் தன் வேலையையும் ராஜிநாமா செய்து கால் கடுதாசியையும் நீட்டிவிட்டார்.