பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் களஞ்சியம் 53

அணுகத் தெரியாதவர்களே இந்த சிவப்பு நாடாவைச் சுவைத்துச் சுவைத்து இன்பம் காண்கிறவர்களாயிருப்பார்கள். அவிழ்க்க முடியாத முடிச்சுடன் போராடுவதை விடுத்து அதை வெட்டி எறியத் தெரிந்தவர்களே உத்தியோகத்தில் வெற்றி காணத் தெரிந்தவர்கள் என்று கூறுவேன் நான். ஒரு கிராமத்தில் பிள்ளைகளுக்குப் பள்ளிக்கூடம் இல்லை. ஒன்றரை மைல் தூரத்திலுள்ள அடுத்த கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடத்திற்கே பிள்ளைகள் எல்லாம் சென்று வரவேணும். ஊருக்கு மேல்புறம் ஒரு பெரிய ஏரி. அந்த ஏரியின் மறுகால் ஊரை அடுத்து இருக்கிறது. அதில் வருஷத்தில் எட்டு மாதங்கள் முட்டளவு தண்ணீர் இருக்கும். இந்தத் தண்ணிருக்குள் இறங்கியே சிறு குழந்தைகள் எல்லாம் அடுத்த கிராமத்தில் உள்ள பள்ளிக்குச் செல்ல வேணும். இந்த மறுகாலில ஒரு சிறு பாலம் கட்ட கிராமத்தார் பத்து வருஷ காலமாக முயல்கிறார்கள். ஜில்லா போர்டில் அந்தக் கிராமத்தில உள்ளவர்கள் செல்வாக்குடையவர் களாக இல்லாத காரணத்தால் பாலம் கட்டப்படவில்லை. பின்னர் வட்டார அபிவிருத்தித் திட்டத்தின் கீழும் இப்பாலம் கட்ட முயன்றிருக்கிறார்கள். வட்டார அபிவிருத்தி அதிகாரி பாலத்தின் அவசியத்தை உணர்ந்திருக்கிறார். ஆனால் அதற்கு வட்டார அபிவிருத்திப் பணத்தில் ஐம்பது சதவிகிதம்தான் செலவு செய்தல் கூடும். மீதப் பாதியைக் கிராமத்தார் இருபத்து ஐந்து சதவிகிதமும் ஜில்லா போர்ட் இருபத்து ஐந்து சதவிகிதமும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது சட்டம். அந்த ஜில்லா போர்டிலோ வரவுக்கு மேல் செலவு. ஆதலால், எந்த வேலைக்கும் ஜில்லா போர்டார் உதவித் தொகை கொடுத்தல் கூடாது என்பது சர்க்கார் உத்தரவு. இது காரணமாக எனக்கு முன்னிருந்த கலெக்டர் ஜில்லா போர்டாரிடம் உதவித்தொகை கேட்டு கலெக்டர் ஹோதாவில் கடிதம் எழுதுவார். பின்னால் அவரே ஜில்லா போர்ட் ஸ்பெஷல் ஆபிசர் ஹோதாவில் சர்க்கார் உத்திரவைக் குறிப்பிட்டு உதவித் தொகை கொடுத்தல் இயலாது என்று கலெக்டருக்குப் பதில் எழுதுவார். இப்படியே சிவப்பு நாடா வேலை செய்து கொண்டிருந்தது இந்த விவகாரத்தில். நான் வேலை ஏற்ற பின் ஒருநாள் இந்தக் கிராமத்திற்குச் சென்றிருந்தேன். பாலம் கட்டவேண்டிய அவசியத்தை உணர்ந்தேன். ஆபீஸ் கட்டுகளைப் புரட்டி இதுவரை நடந்திருந்த விவகாரங்களையும் படித்துப் பார்த்தேன். வட்டார அபிவிருத்தி அதிகாரியும், மற்றவர்களும் “ஜில்லா போர்ட் உதவித் தொகை இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது” என்றனர். அந்தத் தொகையையும் சேர்த்துக் கிராமத்தார்களே கொடுத்தல் இயலாது என்பதையும் கண்டேன். ஓர் இரவு முழுவதும் யோசித்தேன்,