பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் களஞ்சியம் - 55

கிராமத்திற்குச் சென்றேன். நிலைமையை அறிந்தேன். முதலாளிமார் கையாளும் கோர்ட்டு நடவடிக்கைகளையும் புரிந்துகொண்டேன். இரண்டு கட்சிக்காரர்களையும் தனித்தனியே அழைத்து அவர்கள் வாதப் பிரதிவாதங்களையும் கேட்டேன். பின்னர் முதலாளிமார் பிரதிநிதிகளைச் சந்தித்து இருக்கும் நிலையை விளக்கினேன். கோர்ட்டு நடவடிக்கைகளைக் காட்டிக் காட்டி போனஸ் கொடுப்பதை நாலு வருஷம் தள்ளிப் போட்டது தவறு என்றேன். இரண்டு வருஷத்து போனஸையாவது உடனடியாகக் கொடுக்க ஒப்புக் கொண்டால் நான் தலையிட்டு தொழிலாளர்களை வேலைநிறுத்தம் நோட்டிசை வாபஸ் பெறச் சொல்கிறேன் என்றேன். முதலாளிமார் இந்த ஏற்பாட்டிற்கு இணங்கினார்கள்.

மறுநாள் தொழிலாளர் தலைவர்களை அழைத்தேன் நான் சமாதானம் பண்ணி வைக்கிறேன். ஆனால் எந்த முறையில் சமாதானம் இருக்கும் என்பதை உங்கள் வேலை நிறுத்தம் நோட்டீஸ் தேதி கழியும் வரை சொல்ல மாட்டேன். என் வார்த்தையில் நம்பிக்கை வைத்து அன்றே வேலைநிறுத்தம் நோட்டீசை வாபஸ் பெறுவதாக நீங்கள் அறிக்கை வெளியிட வேண்டும் என்றேன். முதலில் தயங்கினார்கள், பின்னர் நான் சொன்னபடியே சம்மதித்து அறிக்கை வெளியிட்டு விட்டார்கள். இரண்டு நாள் கழித்து லேபர் கமிஷனர் சென்னையிலிருந்து வந்து என்னைக் கண்டார். “சமாதான உடன்படிக்கையின் ஷரத்து தெரியாமலே எப்படி சார் தொழிலாளர்கள் பணிமுடக்கம் நோட்டீஸை வாபஸ் பெற்றார்கள்” என்று அதிசயித்தார். “உன்படிக்கை ஷரத்து என்ன என்று தெரியலாமோ” என்று என்னிடம் கேட்டார். அவருக்குமே பெப்பே’ என்று சொல்லிவிட்டேன். ஏமாற்றத்தோடேயே திரும்பினார் என்றாலும் போகும் போது இது உங்களுக்கு ஒரு பெரிய வெற்றி சார் என்று சொல்லிவிட்டே சென்றார். சும்மா சட்டத்தையே சுட்டிக்காட்டிக் கொண்டிருக்காமல் மனிதாபிமானத்தையே முக்கிய குறிக்கோளாகக் கொண்டு காரியங்களைக் கவனித்தால் எந்தச் சிக்கலையும் எளிதாகத் தீர்க்கலாம் என்பது என் நம்பிக்கை.

இன்னும் மோட்டார் ரூட்டிற்குப் பெர்மிட் வழங்குதல், சினிமாக் கொட்டகைக்கு லைசென்ஸ் வழங்குதல், ரைஸ் மில்களுக்கு லைசென்ஸ் வழங்குதல் எல்லாம் கலெக்டர்களுக்கு இப்போது எவ்வளவு தலைவலியைக் கொடுக்கிறது, அதில் அரசியல்வாதிகளின் தலையீடு எவ்வளவு தூரம் நியாயம் வழங்குவதை பாதிக்கிறது என்பதைப் பற்றி எல்லாம் விரிவாகவே நான் கூறுதல் கூடும்.