பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் களஞ்சியம் 97

பெயர் பெற்றிருக்கிறார்கள். சமூக சேவையில் ஈடுபட்டு, ராவ் சாகீப் பட்டம் பெற்று ஜில்லா போர்டு சங்கத் தலைவராக இருந்திருக்கிறார்கள். அவர்கள் செய்த சேவையை எல்லாம் விரிக்கில் பெருகும். நாவலர் சோமசுந்தரபாரதியார். தேசபக்தர் வ.உ.சிதம்பரனார் முதலியவர்களோடு சேர்ந்து முப்பது வருஷகாலமாக சிறந்த இலக்கியப் பணியாற்றி இருக்கிறார். தூத்துக்குடிக் கம்பன் கழகத்தின் நிரந்தரத் தலைவரும் அவரே. காரைக்குடியில் சகோதரர் சா. கணேசன் நடத்தும் கம்பன் திருநாளிலே அவர் பங்கு பெறாத வருஷமே இல்லை. அங்கு தலைமை தாங்குவார் சொற்பொழிவுகள் நிகழ்த்துவார். அவ்விழாவில் பங்கு பெறும் இளைஞர்களை எல்லாம் ஊக்குவிப்பார்.

கருத்த மேனியும், நரைத்த மீசையும், பீடுநடையும் அவர்களுக்கே உரிய ஒன்று. இருபது வருஷங்களுக்கு முன்னாலேயே அவர்களைப் பற்றி ஆசிரியர் கல்கி, மீசை நரைத்தும் ஆசை நரைக்காதவர் என்று கூறியிருக்கிறார். ஆம், தமிழ்க் காதலிலே கம்பன் பக்தியிலே நரைக்காத ஆசை உடையவர். தள்ளாத வயதிலும் அண்ணாமலை பல்கலைக் கழக கம்பராமாயண ஆராய்ச்சிக்குப் பங்குபெற்று உழைத்து, அந்தப் பணியைச் செய்து திரும்பும் வழியிலேயே இறைவன் திருவடி சேர்ந்தார். அவரது பிரிவால் வருந்தும் அவர்களது சுற்றத்தாரை விட மற்றைய இலக்கிய அன்பர்கள் துயரே பெரிது. என்றாலும் வானுலகிலே வவேசு அய்யர், வ.உ.சி, கவிமணி, ரசிகமணி எல்லாம் சென்றிருக்கும் அநத் வானுலகிற்கல்லவா சென்றிருக்கிறார். அங்குமே கம்பன் புகழ் பரப்பும் பணி சிறப்பாக நடக்கவேணுமல்லவா என்றுதான் நம்மை நாம் தேற்றிக் கொள்ள வேணும்.