பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

மாந்தர் பெயர்

நாடகக் கதை மாந்தர்களின் பெயர்களை உருவாக்குவதிலும் பொதுவான சில போக்குகள் தென்படுகின்றன. கதை மாந்தர்களின் நற்பண்பு நற்செயல்களுக்கேற்பவும், தீய பண்பு தீய செயல்கட்கேற்பவும் பெயர்கள் சூட்டப் பெறுகின்றன. பாண்டிய மன்னன் மகள் குணவதி எனவும், பாண்டியன் மனைவி புனிதவதி எனவும், பாண்டிய சோழ நாட்டு அமைச்சர்கள் முறையே மதிவாணன், உதயணர் எனவும் பெயர் சூட்டப்பட்டுள்ளமை மேற்சொன்ன பொதுப் போக்கை ஒட்டியதாக இருக்கக் காணலாம்!

நாடகத் தொடக்கம்

புலவர் ஒருவர் புகழேந்தியைப் போற்றிப் பேசுவதும், மற்றொருவர் “அப்படியென்ன அவர் மட்டும் உயர்ந்தவர்” எனக் கேட்பதுமாக முதற்காட்சி தொடங்குகிறது. புகழேந்தியின் புகழும் அதனைப் பொறாதார் கொள்ளும் அழுக்காறும் கதையின் போக்காய் அமையவிருப்பதை நாடகத்தின் இம்முதற் காட்சியே நமக்குக் குறிப்பால் உணர்த்திவிடுகிறது. “தொடக்கக் காட்சி நாடகத்தின் வளர்ச்சிக்கான சூழலைத் தோற்றுவிப்பதோடு நாடகத்தைப் பார்ப்போரின் அல்லது படிப்போரின் உள்ளத்தே அந் நாடகத்தின் மையக்கருத்தைப் படியச் செய்வதாய் அமைய வேண்டும்” என்னும் நாடக இலக்கண அறிஞர் டாசன் (Dawson) கூற்றுக்கிணங்க இந்நாடகத்தின் முதற் காட்சியை ஆசிரியர் அமைத்திருப்பது அவரது நாடகமியற்றுந் திறனை நன்கு புலப்படுத்துகிறது.

குறிக்கோள்

நாடகம் ஒரு குறிக்கோளைக் கொண்டதாக இருக்க வேண்டும்.

“புலவர்கள் பிற புலவர்களைக் கண்டு அழுக்காறு கொள்ளக் கூடாது; அஃது அழிவையே தரும்; மாறாகப் புலமையாளர்கள் தம்மைச் சார்பவர்களையும் புலமையாளர்களாக்கி ஊக்குவிக்க வேண்டும்; புலமை இணக்கமே ‘பெருமையைத் தரும்’ எனும் குறிக்கோளைச் சொல்லவே ‘கலைவாணன்’ என்னும் இந்நாடகத்தை ஆசிரியர் படைத்துள்ளார். “கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்” மீது