பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9

கொண்ட பொறாமையல்லவா அக்கலைமணியைச் சிறைச்சாலையில் அடைக்கச் செய்தது” என்பதை நினைந்த ஆசிரியர்க்கு உடனே பொறாமையின் விளைவால் புகழேந்தி சிறைப்பட்ட இக்கதை நினைவுக்கு வந்து, உருவாகியிருக்கிறது. ஆகவேதான் இந்நாடகத்துக்குக் ‘கலைவாணன்’ என்ற பெயரையே சூட்டியுள்ளார். “புலமைக் கதிரொளியை பொறாமைப்பனிமூட்டம் தடுத்துவிடமுடியாது” என்பதைக் கூறவே, இந்நாடகம் படைக்கப்பட்டதாக ஆசிரியரே தன் உரையில் கூறியுள்ளது இந்நாடகத்தின் குறிக்கோளைத் தெளிவாக்குகிறது.

ஒரு நெருடல்

பண்பு நிறைந்தவராகப் படைக்கப் பெற்றுள்ள புகழேந்தியார் இறுதியில் கொலை எண்ணம் கொண்டதாக ஒரு காட்சி வருகிறது. என்னதான் தன் புலமையைக் கூத்தர் இகழ்ந்தாலும் அவரைக் கொல்லத் துணிந்தவராய்ப் புகழேந்தி சென்றார் என்பது சற்றே நெஞ்சை நெருடுகிறது. அவருடைய பெருமிதமான படைப்பில் ஒரு கீறல் விழுந்தது போலத் தோன்றுகிறது. அக்காட்சியை வேறு ஏதாவது வகையில் ஆசிரியர் மாற்றியமைத்திருக்கலாம் எனச் சொல்லத் தோன்றுகிறது.

காட்சி அமைப்பு, கதை மாந்தர் படைப்பு, உரையாடலமைப்பு ஆகியவற்றைத் தக்க முறையில் அமைத்து ஆசிரியர் சிறந்ததொரு நாடகத்தைத் தந்துள்ளார். இந்நாடக ஆசிரியர் இயல் வல்லாராகவும், இசைப்புலவராகவும் சிறப்புற்றிருப்பதால் இம் ‘முத்தமிழாசான்’ முத்தமிழிலும் இன்னும் பல நூல்களைத் தந்து தமிழுக்கு அணி சேர்க்க வேண்டுமென உளமார விழைந்து வாழ்த்துகிறேன்.

அன்புடன்,
சு. செல்லப்பன்