பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

முதற் பதிப்பின் முன்னுரை

நாரண-துரைக்கண்ணன்

(ஆசிரியர் : பிரசண்ட விகடன்)

‘புகழேந்தி’ என்றதும், தமிழ் அறிஞர்களுக்கு அரும்பொருட் செறிவும், சொல்வளமும் பாநயமும் பொருந்திய “நள வெண்பா” என்ற அழகிய காவியம் தான் நினைவில், முன் வந்து நிற்கும். புகழேந்தி என்ற பெயருடன் ஒரு பெரும் புலவர் இருந்திருக்கிறார் என்பதற்கு இச்சிறந்த சிறு காவியமொன்றே சான்றாக நின்று நிலவுகிறது.

சாதாரணமாக, நாற்சீரும் முச்சீரும் நடுவே தனிச்சீரும் கொண்ட வெண்பாவில் காவியம் இயற்றுவதென்பது சாமானியச் செயலன்று. நம் தமிழ் இலக்கியத்தைச் சிறப்பிக்கும் பெருங்காவியங்களும் சிறு காவியங்களும் அகவற்பாவிலும், விருத்தப்பாவிலுமே பெரும்பாலும் இருக்கின்றன. வெண்பாவினாலான காவியம் நள வெண்பா ஒன்று தான்.

இவ்விதம் மிகக் குறுகிய அடிகளையுடைய வெண்பாவில் பொருள் வளம் பொதுள அழகிய காவியம் இயற்றிய வகையில் தமக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவாறு நுண்ணறிவில் சிறந்து விளங்கியமையால்தான் ‘வெண்பாவில் புகழேந்தி’ என்று புலவர்கள் சிறப்பித்துப் பேசுவாராயினர்.

இத்தகைய சிறந்த காவியத்தை இயற்றியவர் தாமா அல்லி அரசாணி மாலை, பவழக்கொடி மாலை, புலந்திரன் களவு மாலை முதலிய அம்மானைப் பாடல்களைப் பாடியிருப்பார்? என்று பாவகைகளின் தராதரங்களை அறிந்தவர்கள் எவரும் ஐயுறுவது இயற்கை. பெரும்புலவனாயுள்ளவன் ஒருவன், தம்மொத்த புலவர் வியக்குமாறு உயர்ந்த இலக்கிய நடையிலும் நூல்கள் இயற்ற முடியும்; பாமர ரஞ்சகமாகவும் செம்பாக நடையில் நூல்கள் இயற்றக்கூடும் என்பது உண்மை; ஆனாலும் அப்புலவனுக்குரிய இதய பாவமும் கற்பனைகளும் சொற்பிரயோகங்களும் அவ்விரு வித நடையிலும் விரவிக் காணப்படுமாதலால் அப்பொது இயலை அல்லது