பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



என்னுரை

எனது முதல் நாடகம் “அந்தமான் கைதி” 1945-ல் டி. கே. எஸ். குழுவினரால் அரங்கேற்றப் பெற்று இமாலய வெற்றியை ஈட்டித் தந்தது.

“கலைவாணன்” எனது இரண்டாவது நாடகம். எனினும், இதற்குப் பிறகு எழுதிய “என் காணிக்கை” நாடகம் தஞ்சையில் திரு கே. ஆர். ராமசாமி அவர்களின் கிருஷ்ணன் நாடக சபையாரால் வெற்றிகரமாக நடிக்கப்பட்டதற்குப் பிறகு வெகுநாட் கழித்து 1947-ல் கலைவாணன் நூலாக வெளியாயிற்று.

சுமார் மூன்றாண்டுகளுக்கு முன்பு ஒருநாள் உடுமலை திரு நாராயண கவி அவர்களின் யோசனை, நகைச்சுவை மன்னரின் விருப்பம், அரங்கமேடை அகத்தியர் திரு டி. பி. பொன்னுசாமி பிள்ளை அவர்களின் வேண்டுகோள் இவற்றின் விளைவாக என். எஸ். கே. நாடகக் குழுவினருக்காக இந்நாடகத்தை உருவாக்கினேன். ஆனால் நாடகம் உருவாக்கப்படுமுன் காலமும் கயவர்களின் பொறாமைச் செயல்களும் செய்த சதியால் கலைமணிகள் காவற் சிறையில் அடைககபபடடனர்.

அன்று எந்தச் சட்டத்தின் பேரால் குற்றவாளிகளென்று நிரூபித்து ஆயுள் தண்டனை விதித்துச் சிறைக்குள் தள்ளிச் சீரழிக்கப்பட்டதோ, அதே சட்டத்தின் பேரால் இன்று இரண்டரை ஆண்டுச் சிறைவாசத்திற்குப் பிறகு அவர்கள் நிரபராதிகளென்று தீர்ப்புக் கூறி விடுதலையாயினர்.

புலமைக் கதிரொளி புலர்ந்தது. பொறாமைப்புகைப்பனி அழிந்தது. புடம் போடப்பட்ட பொன் மேலும் மாற்று உயர்வது இயற்கைதானே! ஆம்; சிறைக்குள் தள்ளப்பட்ட போது நகைச்சுவை மன்னனாக மட்டும் மதிக்கப்பட்ட திரு என். எஸ். கிருஷ்ணன் அவர்கள் விடுதலை செய்யப்படும் போது கலைவாணராகத் திகழ்ந்தார்.