பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

தலைநகரிலே கலைஞனை அழைத்து அறிஞர்கள் பலர் நடுவே “கலைவாணர்” என்ற பட்டத்தைச் சூட்டினர். சிறைக்குப் பின் சிறப்பு! இந்நாடகத்தின் கருத்தும் இதுதான்.

புலவரென்ற காரணத்தால் பொறாமை கொண்டு புகழேந்தியாரைச் சிறையிலிட்டுத் துன்புறுத்திச் சீரழித்த கவி ஒட்டக்கூத்தரே, பின்னொரு காலத்தில் அவருடைய புலமைத்திறத்தை வியந்து போற்றினாரல்லவா! அதைப் போலவே தான் நண்பர் என் எஸ். கே. அவர்களின் வாழ்க்கையிலும் நிகழ்ந்தது. ஆகவே நிகழ்ச்சிப் பொருத்தத்தின் நினைவு காரணமாக இந்நாடகத்திற்கு “கலைவாணன்” என்ற பெயரையே சூட்டியிருக்கிறேன்.

புகழேந்திப் புலவரின் வரலாறு குறித்துப் பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் உண்டு. எனினும், உலகியல் அனுபவங்களுக்கு ஒத்த முறையில் இதைச் சித்தரித்திருக்கிறேன். “அந்தமான் கைதி”, “என் காணிக்கை” ஆகிய நாடகங்களுக்கு அளவற்ற ஆதரவளித்த தமிழகம் “கலைவாணனை”யும் கண்டு களித்து ஊக்குவிக்குமென்ற நம்பிக்கை எனக்குண்டு.

சுமார் நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு “கலைவாணன்” இரண்டாம் பதிப்பாக வெளிவருகிறது.

இப்பதிப்பிற்கு சிலம்புச் செல்வர்- டாக்டர் திரு ம. பொ. சி. அவர்களின் அணிந்துரையும், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் திரு சு. செல்லப்பனார், அவர்களின் ஆய்வுரையும், திரு நாரண துரைக்கண்ணனார் அவர்கள் முதற்பதிப்பிற்கு அளித்த முன்னுரையும், இந்நூலுக்கும் எனக்கும் பெருமை சேர்ப்பனவாகும் என்பதை நன்றியுடன் கூறிக் கொள்ளுகின்றேன்.

நிறை புலமை பெற்ற கூத்தர் இவ்வாறு அழுக்காறு கொண்டவராக இருந்திருப்பாரா? என்பது வினா? ஆனால், பொதுவாகப் புலமையாளர்களின் போக்கே இப்படித்தான்