பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

இருக்கிறது என்பதுதான் அனுபவ உண்மை. “நளவெண்பா” வை இயற்றிய புகழேந்தி எளிமையான அம்மானைக் கதைகளை இயற்றி இருப்பாரா? இது வினா? சிறைத் தோழர்களாகிய இளங்கவிஞர்களின் தேவைக்காக - அவர்களைக் கொண்டே படிப்பறிவற்ற பெண்களும் கவர்ச்சியடையுமாறு இவ்வம்மானைக் கதைகள் உருவாகியிருக்கக் கூடும் என்பதே எனது அனுமானம்.

குட்டக் குட்டக் குனிவதோ - குனியக் குனியக் குட்டுவதோ மனித இயல்பல்ல. புகழேந்தியின் முனிவுக்கு இதுவே என் விளக்கம்.

சிலப்பதிகாரத்திற்கு முன் நாடக இலக்கியங்களே இல்லை என்று கருத்து அவ்வளவு சரியானதாக எனக்குப் படவில்லை. பொருநர், கூத்தர், விறலியர் போன்ற நாடகக் கலைஞர்கள் இருந்ததற்கான குறிப்புகள் சங்க இலக்கியங்கள் பலவற்றிலும் மதிவாணர் நாடகத் தமிழ் என்ற நூலிலும், மதங்க சூளாமணி என்ற நூலிலும், குறிப்பாகத் திருக்குறளிலும் நாடகம் பற்றிய பல குறிப்புகளைக் காணுகின்றோம். பண்டைய நாடக இலக்கியங்களைத் தமிழர்கள் போற்றிக் காக்கத் தவறி விட்டனர் என்பதே சரியான கருத்தாகும்.

இந்நூல் வெளியீட்டிற்கு மானிய உதவி வழங்கிய இயலிசை நாடக மன்ற நிருவாகத்தினருக்கும், அழகுறப் பதிப்பித்தளித்த நாவல் ஆர்ட் அச்சகத்திற்கும், ஒவியர் முத்து அவர்களுக்கும் என் நன்றி உரித்தாகுக!

தமிழ் வாழ்க!

5, சாரதாபுரம்
சென்னை-4
20-12-1986

அன்புடன்
கு. சா. கிருஷ்ணமூர்த்தி