பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



காட்சி-3.

இடம்:-பாண்டியன் அந்தப்புரம். காலம்:-மாலை.

(பாண்டியன், குணவதி, குமுதம், உரையாடிக் கொண்டிருக்கின்றனர்.)

பாண்டியன்:- குணவதி! நீ நேற்றிரவு நிலாமுற்றத்தில் வீணையில் இசைத்துப் பாடிக் கொண்டிருந்தாயல்லவா! அது என்ன பாடல்?

குணவதி:- அதுவா அப்பா! அது நடனத்திற்காக இயற்றப்பட்டது.

பாண்டியன்:- அப்படியா! மிகவும் நன்றாய் அமைந்திருந்தது, அதன் பொருள்?

குணவதி:- சிவபெருமான் மீது காதல் கொண்ட ஒரு யுவதி தன் காதலனை ஒரு திரையில் சித்தரித்துக் கண்டுமகிழ்ச் சியடைகிறாள். இதைக் கண்ட யுவதியின் தாய் தன் மகளையும் சினந்து சிவனையும் இழித்துக் கூறுகிறாள்.

பாண்டியன்:- பேஷ். நல்ல கற்பனை. – ஆமாம். புலவர் உனக்கு நடனப் பாடல்கள் கூடவா பயிற்றுவிக்கிறார்?

குமுதம்:- பாடல் மட்டுமா? நடனம் கூடப் பயிற்றுவிக்கிறாரே?

பாண்டியன்:- அப்படியா!-அந்தப் பாடலும் அவர் இயற்றியது தானோ?

குணவதி:- இல்லை.

பாண்டியன்:- வேறு யார் இயற்றியது?

குமுதம்:- வேறு யார்? இளவரசியாரே இயற்றியது தான்.

குணவதி:- (நாணத்துடன் தலை குனிகிறாள்.)