பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலைவாணன்

29


புகழேந்தி:- அரசே! நீங்களும் அமருங்கள்

(அரசரும் அமருகிறார்.)

என்ன! குணவதியின் இசை நிகழ்ச்சிக்கும் நடனத்திற்கும் என் வருகை இடையூறாகி விட்டதோ?

பாண்டியன்:- இல்லை, இல்லை. குணவதி என்ற மலருக்கு, ஏன்? இந்த நாட்டுக்கே மணமும் எழிலும் தங்கள் வருகையால்தான் உண்டானது. தங்கள் வருகை எப்படி இடையுறாக இருக்க முடியும்?

புகழேந்தி:- இல்லை, இல்லை. மலர்களுக்குப் பிறரை வசீகரிக்கும் மணமும் எழிலும் இயற்கையில் அமைந்திருக்கிறது.

குணவதி:- ஏன்? காட்டில் காண்பாரற்றுப் பூத்து கருகிவீழும் மலர்களை மாந்தர்கள் பரிந்தெடுத்துத் தொடுத்துச் சூடுவதால் அம்மலர்கள் புதிய சோபையும் எழிலும் அடைகின்றன வென்றால் பொருந்தாவோ?

புகழேந்தி:- ஆம்; குணவதி! நன்றாகச் சொன்னாய் நீ, வினாவும் விடையும் உன் பேச்சிலேயே தொனிக்கின்றது.

பாண்டியன்:- குணவதி என்ன சொன்னாள்? நீங்கள் சொல்வதொன்றும் விளங்கவில்லையே!

புகழேந்தி:- இன்னுமா விளங்கவில்லை? நான் வேண்டுமானால் விவரமாகச் சொல்லட்டுமா?

பாண்டியன்:- சொல்லுங்களேன்.

புகழேந்தி:- நீங்கள் மட்டும் சொன்னால் போதுமா? குணவதியும் சம்மதித்தால்......

(குணவதியைப் பார்த்து கேலியாய்ச் சிரிக்கிறார்.)

குணவதி:- தெரியாத விஷயத்தை விளக்கிச் சொல்வதில் தவறொன்றுமில்லையே.